Exclusive - ஸ்ரீகாந்த் குடும்பத்தில் பிரச்னை.. போதை பொருள் பயன்படுத்த இதுவே காரணம்.. தயாரிப்பாளர் ஓபன் டாக்
சென்னை: நடிகர் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் போதை பொருள் வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களது கைது கோலிவுட்டில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. இன்னும் பல நடிகர்கள் இதில் சிக்குவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தயாரிப்பாளர் டி.ஆர்.ரமேஷ் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக வலம் வருவார் என்று கணிக்கப்பட்டிருந்தவர் ஸ்ரீகாந்த். ரோஜாக்கூட்டம் படத்தில் அவர் அறிமுகமானபோது கோலிவுட்டுக்கு இன்னொரு சாக்லேட் பாய் கிடைத்துவிட்டார் என்றே கூறப்பட்டது. ஆனால் அவர் காதல் படங்கள் மட்டும் செய்யாமல் போஸ் போன்ற ஆக்ஷன் திரைப்படங்களிலும் நடித்து தன்னை ஒரு கலவையான நடிகராக அடையாளப்படுத்திக்கொண்டார். நடிப்பிலும் தனது திறமையை வெளிக்காட்டினார்.
டிப்ரஷன்: சூழல் நல்லபடியாக சென்றுகொண்டிருக்க அவர் வந்தனா என்ற பெண்ணை திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றியதாக சர்ச்சை எழுந்தது; அதனையடுத்து வந்தனாவையே திருமணம் செய்துகொண்டார் ஸ்ரீகாந்த். இந்தக் காலத்தில்தான் அவரது கவனம் சிதற ஆரம்பித்ததாக தெரிகிறது. அதனால் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துவிட்டன. பிறகு நண்பன் படம் அவருக்கு ஓரளவுக்கு மீண்டும் வெளிச்சத்தை கொடுத்தது.
கைதான ஸ்ரீகாந்த்: தொடர்ந்து சில படங்களில் நடித்த அவருக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட நிலைமையில் அதிமுகவின் நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்டு அதன் மூலம் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியதும் தெரியவர; அதிரடியாக ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவையும் நீதிபதி அதிரடியாக நிகாரித்துவிட்டதால் இப்போது புழல் சிறையில் இருக்கிறார் ஸ்ரீ.

கிருஷ்ணாவும் கைது: ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து இந்த வழக்கில் கிருஷ்ணாவும் சம்பந்தப்பட்டிருந்தார். அவர் வழக்கறிஞருடன் நேரில் ஆஜராகி, 'தனக்கு உடல்நிலையில் பிரச்னை இருக்கிறது. எனவே போதை பொருள் பயன்படுத்த வாய்ப்பே இல்லை' என்று தெரிவித்தார். மருத்துவ பரிசோதனையிலும் அவர் போதை பொருள் பயன்படுத்தவில்லை என்று வந்தது. ஆனால் அவர் வாட்ஸ் அப்பில் செய்திருந்த உரையாடல்கள் அவரது கைதுக்கு வழிவகுத்தது.
டி.ஆர்.ரமேஷ் பேட்டி: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் டி.ஆர்.ரமேஷ் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.அந்தப் பேட்டியில் அவர், "ஸ்ரீகாந்த்தை எனக்கு ரோஜாக்கூட்டம் பட சமயத்திலிருந்தே தெரியும். அவர் அடிப்படையில் நல்ல மனிதர். அவரது அப்பாவும், அம்மாவும் திருப்பதியில் அரசாங்க பணியில் இருக்கிறார்கள். சென்னையில் இவர் மட்டும்தான் இருக்கிறார். கிருஷ்ணாவின் குடும்பமும் எனக்கு பழக்கம்தான்.கிருஷ்ணாவுக்கு மனைவியுடனான விவகாரத்து டிப்ரஷனை தந்தது. இரண்டு பேருமே சந்தர்ப்ப சூழலால் இந்த வழக்கில் கைதாகிவிட்டார்கள்.
ஏமாற்றமடைந்த ஸ்ரீகாந்த்: ஸ்ரீகாந்த் சினிமாவில் பைனான்ஸும் செய்துவருகிறார். அப்படி அவர் சில தயாரிப்பாளர்களுக்கு பணம் கொடுத்து ஏமாற்றமடைந்துவிட்டார். நம்பியார் என்ற பெயரில் சொந்தப் படம் எடுத்தார். அதிலும் அவருக்கு நஷ்டம்தான் ஏற்பட்டது. இதனால் அவரது குடும்பத்திலும் பிரச்னை உருவாக தொடங்கிவிட்டது. தனியாக சென்றுவிட்டார்கள். பட வாய்ப்பும் இல்லை. ஸ்ரீகாந்த்துக்கு சினிமாவில் சரியான வழிகாட்டி இல்லை. இவையெல்லாம் அவரை மன அழுத்தத்தில் தள்ளியிருக்கிறது. அவர் வியாபாரியும் இல்லை; அவர் தனக்கு வாங்கி ஒரு அறைக்குள் வைத்து பயன்படுத்தியிருக்கிறார். இந்த போதை கலாசாரத்தில் பெரிய பெரிய முதலைகளே கிடக்கின்றன" என்றார்.


Click it and Unblock the Notifications











