கவிஞர் வைரமுத்துவுடன் போனில் பேசினார் ரஜினி!

அப்போது, ரஜினியின் உடல்நிலை குறித்து வைரமுத்து அக்கறையுடன் விசாரித்தார். ராணா பற்றி கவலைப்படாமல், நல்ல ஓய்வெடுத்துவிட்டு திரும்புமாறு வைரமுத்து கூறினார்.
கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி சென்னையில் நடந்த 'ராணா' படப்பிடிப்பின் போது, ரஜினிகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் இரண்டு முறை சென்னை இசபெல்லா மருத்துவமனையிலும், பின்னர் போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.
அவருடைய உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதித்த போது, அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டிருப்பதை கண்டு பிடித்தார்கள். நிலைமை டயாலிஸிஸ் செய்யும் அளவுக்குப் போனது.
மேலும் அவருக்கு நவீன சிகிச்சை தேவைப்பட்டதால், சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
சிங்கப்பூர் டாக்டர்கள் அவரை பரிசோதித்து, அவருடைய நோய்க்கான மூலகாரணத்தை கண்டறிந்து சிகிச்சை அளித்தார்கள். அதன்பிறகு, ரஜினிகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
ஆஸ்பத்திரியில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட அவர், டாக்டர்களின் அறிவுரைப்படி சிங்கப்பூரிலேயே ஒரு வீடு எடுத்து தங்கி சிகிச்சையுடன் ஓய்வு பெற்று வருகிறார்.
முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, இயக்குநர் பாலச்சந்தர், ராணா இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், ஷங்கர் ஆகியோரிடம் தொலைபேசியில் பேசி, தனது உடல்நிலை குறித்து தகவல் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இந்திய நேரப்படி மாலை 6.45 மணிக்கு கவிஞர் வைரமுத்துவுடன் போனில் பேசினார் சூப்பர் ஸ்டார்.
ரஜினி போனில் பேசியது பற்றி வைரமுத்து அளித்துள்ள பேட்டி இது:
"நேற்று முன்தினம் (புதன்கிழமை) மாலை 6.45 மணிக்கு ரஜினிகாந்த் என்னுடன் போனில் பேசினார். அவர் குரல் தெளிவாக இருந்தது. பழைய குரலைப்போல் இளமையாகவும், வளமாகவும் இருந்தது. அவருடைய குரலில் தெளிவு இருந்தது. ஆரோக்கியம் தெரிந்தது. என்னிடம் அவர் நலம் விசாரித்தார்.
அவருடைய நலம் பற்றி நான் விசாரித்தேன். உடல்நிலை நன்றாக தேறியிருப்பதாக அவர் கூறினார். மருத்துவர்களின் அறிவுரைப்படி, உணவு சாப்பிட்டு வருவதாகவும், சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்து வருவதாகவும் சொன்னார். ஆரோக்கியமாக இருப்பதாக உணர்கிறேன் என்று கூறினார்.
வாழ்த்துக்கள்
"பூரண உடல் நலம் பெறும் வரை, சிங்கப்பூரிலேயே ஓய்வு எடுங்கள். படப்பிடிப்பை விட, உங்கள் உடல்நலம் முக்கியம். நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்கள் உங்களுக்கு கூடுதல் பலமாக இருக்கிறது. நீங்கள் பூரண நலத்துடன் சென்னை திரும்புவீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்'' என்று நான் ரஜினிகாந்திடம் கூறினேன்.''
இவ்வாறு கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











