twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி - கமல் கூட்டணி சாத்தியமா? ஒரு அலசல்!

    By Shankar
    |

    சென்னை : தமிழக அரசு நிலையற்ற தன்மையிலும், தன்னிச்சையாக எந்த ஒரு கொள்கை முடிவும் எடுக்க முடியாத நிலையிலும் இருப்பதை சாமானியர்களும் உணர்ந்துள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், முழு அமைச்சரவையுடன் கூடிய ஆட்சி என்றாலும், மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கவர்னர் ஆட்சி நடைபெறுவது போலத்தான் உள்ளது.

    அடுத்து தேர்தல் வந்தால் அதிமுக என்ற கட்சி ஆட்சியைப் பிடிப்பது என்பது யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. பாஜகவுடன் சேர்ந்தாலும் இரட்டை இலக்க எம்.எல்.ஏக்களை அவர்கள் பிடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

    Rajini Kamal Alliance possibilities

    இன்னொரு பக்கம் திமுக, அனைத்து கட்சிகளையும் தன்வசம் இழுக்கும் முயற்சியில் உள்ளது. அதில் அவர்களுக்கு ஓரளவுக்கு வெற்றி கிடைக்கும் வாய்ப்பும் தெரிகிறது. பாமக எந்தப் பக்கம் போகும் என்று தெரியவில்லை. சீமான் தொடர்ந்து தனிக் கச்சேரிதான் என்றும் தெரிகிறது. 1 சதவீதமாக இருந்த சீமான் 5 சதவீதம் வரை வாக்குகளைப் பிரிக்கக்கூடும்.

    மூன்று அணிகள் களத்தில் உள்ள நிலையில், புதிய அறிமுகமாக நான்காவது கட்சியாகத்தான், ரஜினியின் அரசியல் பிரவேசம் இருக்கிறது. அவருக்கென்று தனிப்பட்ட வாக்கு வங்கி 25 சதவீதம் வரை இருப்பதாக பல்வேறு சர்வேக்கள் தெரிவிக்கின்றன. கட்சி ஆரம்பித்து தேர்தல் வந்தவுடன், அதிமுகவிலிருந்து பெருமளவு வாக்குகள் ரஜினி பக்கம் திரும்பும். பத்து சதவீதம் வந்தாலும் 35 சதவீத வாக்குகள் ரஜினிக்கு கிடைக்கும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.

    நான்கு முனைப் போட்டியில் 35 சதவீத வாக்குகள் பெற்றாலே ரஜினியின் வெற்றி உறுதியாகிவிடும். நாம் தமிழர் சீமானின் போக்கால், பிற மொழி பேசும் தமிழர்களின் வாக்குகள், ரஜினி பக்கமே திரும்ப வாய்ப்புள்ளது.

    மக்களுக்குத் தேவையான திட்டங்கள், கொள்கைகள், அப்பழுக்கற்ற வேட்பாளர்களை அறிமுகப படுத்தி, சரியான தேர்தல் ஒருங்கிணைப்பும் செய்தால் ரஜினிக்கு பெரும் வெற்றி சாத்தியம்தான். ஏனென்றால் களத்தில் இருப்பவர்களில் அரசியலுக்கு அவர் மட்டுமே புதிது. இதுவரைக்கும் அவர் சேர்த்து வைத்துள்ள அவர் மீதான 'தனிமனித நம்பிக்கை' மட்டுமே மூலதனம்.

    ரஜினிக்கு கடுமையான போட்டி கொடுக்கக்கூடியது திமுக கூட்டணி மட்டுமே. இதை ரஜினி முற்றிலும் உணர்ந்து இருப்பார் என நம்பலாம்.

    இந்நிலையில், தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும், ரஜினியுடன் இணைந்து அரசியல் செய்யத் தயார் என்றும் கமல் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு மூலமே தன்னுடைய அரசியல் அனுபவம் என்ன என்று கமல் கூறிவிட்டார். உண்மையிலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று கமல் விரும்பினால், அதை ரஜினியுடன் நேரடியாக விவாதித்த பிறகல்லவா அறிவித்திருக்க வேண்டும் என்பது அரசியல் விமர்சகர்களின் கேள்வி?

    இன்னொன்று, ரஜினி எதிர்மறை அரசியல் செய்ய விரும்பவில்லை. 'யாரையும் குற்றம் சுமத்தி வாக்குகள் கேட்கப் போவதில்லை. தான் என்ன செய்யப் போகிறேன் என்பதை மட்டுமே கூறி மக்கள் முன் செல்லப்போகிறேன்' என்று அவரே கூறியுள்ளார். அதாவது அவர் எடப்பாடி அரசைக் கூட விமர்சிக்கமாட்டேன் என்கிறார். இதுவரையிலும் எந்த அரசியல்வாதியையும் அவர் விமர்சித்தது இல்லை.

    கமலின் அரசியலோ ஆளுங்கட்சியை போட்டு வெளுப்பதில்தான் உள்ளது. மாற்று யோசனை, திட்டங்கள் எதையும் அவர் இன்னமும் முன் வைக்கவில்லை. 'மாநில அரசை மட்டுமே கமல் குற்றம் சாட்டுகிறார். மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை அவர் விமர்சிக்கவில்லை. தமிழக அரசை ஆட்டி வைப்பது யார் என்பதையும் அவர் கண்டுகொள்ளவில்லை' என்ற குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது. ஆனால் ஒரு அரசியல் விழிப்புணர்வை அவரது தினசரி ட்வீட்டுகள் ஏற்படுத்தியுள்ளதையும் மறுப்பதற்கில்லை. அது, 2 லட்சமாக இருந்த அவரது ட்விட்டர் ஃபாலோயர் எண்ணிக்கை 2 மில்லியனுக்கு மேல் உயர்ந்ததிலிருந்தே தெரிகிறது.

    ரஜினி - கமல் இருவருடைய அரசியல் நிலைப்பாடுகள் வெவ்வேறு விதமாகவே இருப்பது கண்கூடு. இருவரும் இணைந்து செயல்பட்டால் ஆளுக்கொரு திசையாக இழுக்க வேண்டியிருக்கும். ரஜினி நிச்சயம் அதை விரும்ப மாட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

    ரஜினிக்கு மிகப்பெரிய பலம் அவருடைய ரசிகர்கள். தன்னுடைய ரசிகர்களைப் பார்த்துதான் அரசியல் கட்சிகள் பயப்படுகின்றார்கள் என்று 90 களிலேயே கூறியுள்ளார். தற்போதைய சமூக வலைத்தள ரசிகர்களும், ரஜினிக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர். ஆனால் கமலுக்கு இந்த அளவு ரசிகர்கள், அதுவும் களப்பணி ஆற்றுபவர்கள் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. இருவருடைய ரசிகர்களும் தேர்தல் களத்தில் எப்படி இணைந்து பணியாற்றுவார்கள் என்பதுவும் கேள்விக்குறிதான்.

    தன்னுடைய நல்ல நண்பனாக கருதும் கமல் ஹாசன் விரும்பினால், ரஜினி நிச்சயம் அவருடைய ஆலோசனைகளை கேட்க வாய்ப்புள்ளது. ஆனால் கமல் கட்சியில், ரஜினி இணைவது சாத்தியமில்லை. காரணம் ஆரம்பத்திலிருந்தே தனிக்கட்சி, யாருடனும் கூட்டு இல்லை என்றே ரஜினி கூறி வருகிறார். ரஜினி கட்சியில் கமல் சேர்ந்து செயல்படுவார் என்றும் தோன்றவில்லை.

    தன்னுடைய பலம் என்னவென்று தெரிந்தும், கமல் தனிக் கட்சி ஆரம்பித்தால் அது ரஜினிக்கு எதிரான முடிவாகத்தான் இருக்க முடியும். அவருடைய ரசிகர்களின் வாக்குகளை ரஜினிக்கு கிடைக்க விடாமல் செய்யும் முயற்சியாகவே அது முடிய வாய்ப்பிருக்கிறது.

    இருவரும் 'இணைந்து அரசியல்' என்பதில் அதிகபட்சமாக, ரஜினிக்கு கமல் வெளிப்படையான ஆதரவு கொடுக்க வாய்ப்புள்ளது. சோ ராமசாமி போல் கமல் ஹாசனும் ஒரு அரசியல் விமர்சகர் ஆகும் வாய்ப்பும் உள்ளது. அதைத் தாண்டி, படத்தில் இணைந்து நடித்தது போல் அரசியலில் இருவரும் இணைந்து செயல்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை என்பதுதான் போலித்தனமில்லாத உண்மை!

    - ஸ்கார்ப்பியன்

    English summary
    Is Rajini - Kamal Alliance possible in Tamil Nadu? Here is an analysis.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X