Exclusive - 20 வருடங்கள் கழித்து.. என் மகன் திருமணத்துக்காக.. சரோஜா தேவி பற்றி ரமேஷ் கண்ணா உருக்கம்
சென்னை: நடிகை சரோஜா தேவி தனது 87ஆவது வயதில் இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் தள்ளியிருக்கிறது. ஒட்டுமொத்த திரையுலகமும் சரோஜா தேவியின் உயிரிழப்பை நினைத்து கலங்கி நிற்கிறது. ரஜினி, கமல் உள்ளிட்டோர் எல்லாம் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் சரோஜா தேவி உயிரிழப்பு தொடர்பாக இயக்குநரும், நடிகருமான ரமேஷ் கண்ணா ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ரவுண்டு கட்டி நடித்தவர் சரோஜா தேவி. எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருடன் மட்டும் தலா 20 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவர்கள் தவிர்த்து ஜெமினி கணேசன் உள்ளிட்ட அடுத்தக்கட்ட ஹீரோக்களுடனும் நடித்திருக்கிறார். வயது மூப்பு காரணமாக கதாநாயகி வாய்ப்பு அவருக்கு குறைந்ததால் கேரக்டர் ரோல்களையும் சில படங்களில் ஏற்றிருந்தார் அவர்.
உயிரிழந்த சரோஜா தேவி: கடைசியாக ஆதவன் திரைப்படத்தில் நடித்த அவர் ஒட்டுமொத்தமாக சினிமாவிலிருந்து விலகி பெங்களூரில் இருந்தார். வயோதிகம் காரணமாக உடல்நல குறைவை சந்தித்த அவர்; சிகிச்சையும் எடுத்துவந்தார். எப்படியாவது மீண்டு வந்துவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு திரைத்துறையினர், ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ரஜினி, கமல் இரங்கல்: சரோஜா தேவியின் உயிரிழப்பை தெரிந்துகொண்ட ரஜினியும், கமலும் தங்களது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார்கள். ரஜினி தனது எக்ஸ் பக்கத்தில், "பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் நடிகை சரோஜாதேவி இப்போது நம்முடன் இல்லை. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்" என குறிப்பிட்டிருந்தார். கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், "என்னைப் பார்க்கும் இடமெல்லாம் - என் எந்த வயதிலும் - கன்னம் கிள்ளும் விரலோடு, 'செல்ல மகனே' என்னும் குரலோடு இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி அம்மா.
வணங்கி வழியனுப்புகிறேன்: மொழி, பிரதேச எல்லை இல்லாது வாழ்ந்த கலைஞர். மறைந்துவிட்டார். என் இரண்டாம் படமான 'பார்த்தால் பசி தீரும்' படப்பிடிப்புத் தருணங்கள் தொடங்கி எத்தனை எத்தனையோ அழியா நினைவுகள் நெஞ்சில் அலையடிக்கின்றன. கண்கள் ததும்புகின்றன. என்றைக்கும் என்னை முதன்மையானவனாகவே பார்க்க விரும்பிய தாயுள்ளம். வணங்கி வழியனுப்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். சரோஜா தேவியின் உடல் நாளை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ரமேஷ் கண்ணா இரங்கல்: இந்நிலையில் இயக்குநரும் நடிகருமான ரமேஷ் கண்ணா ஃபில்மிபீட் தமிழுக்கு தொலைபேசி மூலம் பேசினார். அப்போது அவர், "நான் சரோஜா தேவியின் ரசிகர். ஆதவன் படத்தில் வடிவேலு செய்த கேரக்டரை முதலில் நான் செய்ய வேண்டியது. ஆனால் அவர் எப்படியோ அந்த வாய்ப்பை பெற்றுவிட்டார். இருந்தாலும் சரோஜா தேவியுடன் நடிக்க வேண்டும் என்பதற்காக இளையமான் என்ற கேரக்டரை உருவாக்கி நடித்தேன்.
மகன் திருமணத்துக்கு வந்தார்: அந்தக் கதைக்கு அந்த கேரக்டர் அவசியமே இல்லை. இருந்தாலும் சரோஜாவுடன் நடிக்க வேண்டுமென்பதற்காக கேரக்டரை உருவாக்கினேன். அந்தப் படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து எனது மகன் திருமணத்துக்கு அழைப்பதற்காக சென்றேன். கண்டிப்பாக வந்துவிடுகிறேன் என்று கூறியிருந்தார். வருவாரோ வரமாட்டாரோ என்றுதான் யோசனையில் இருந்தேன். ஆனால் அவர் திருமணத்துக்கு வந்து மகனை ஆசீர்வதித்து எல்லோருடனும் நல்லபடியாக பேசிவிட்டு சென்றார்" என்றார்.


Click it and Unblock the Notifications











