Anson Paul Marriage: ரெமோ வில்லனை ஞாபகமிருக்கா?.. எளிமையாக நடந்த திருமணம்.. காதலியை கரம்பிடித்தார்!
சென்னை: சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான ரெமோ படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு நிச்சயிக்கப்படும் மாப்பிள்ளை கடைசியாக வில்லனாக மாறுவாரே அவர் வேறு யாருமில்லை சென்னையில் பிறந்து மலையாள நடிகராக மாறியுள்ள ஆன்சன் பால் தான். நேற்று முன் தினம் அவர் எளிமையான முறையில் தனது காதலியை பதிவு திருமணம் செய்துக் கொண்டார்.
ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தாவின் திருமணம் அம்பானி வீட்டுக் கல்யாணம் போல ஆடம்பரமாக நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், மணிரத்னம், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், கெளதம் மேனன், ரவி மோகன், கெனிஷா, அதிதி ஷங்கர் என நட்சத்திர பட்டாளமே திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

சமீபத்தில் அபிநயாவின் திருமணமும் சிறப்பாக நடைபெற்றது. ஆனால், சில பிரபலங்கள் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொள்வ்தை தவிர்த்து எளிமையான முறையில் திருமணம் செய்துக் கொள்கின்றனர். சமீபத்தில், மார்கோ படத்திலும் நடித்த ஆன்சன் பால் தனது காதலியை கரம்பிடித்துள்ளது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.
சென்னை பையன் ஆன்சன் பால்: சென்னையில் பிறந்து வளர்ந்த ஆன்சன் பால் மலையாள திரையுலகில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். மலையாள நடிகராகவே மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். 2013ம் ஆண்டு வெளியான KQ படத்தின் மூலம் அறிமுகமானார். மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்த அவருக்கு பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தில் நெகட்டிவ் ரோல் கிடைத்தது. அதன் பின்னர், சோலோ, ஓவியாவின் 90எம் எல், கார்த்தியின் தம்பி மற்றும் மழையில் நனைகிறேன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
ரெமோ வில்லன்: சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன், கே.எஸ். ரவிகுமார் நடிப்பில் வெளியான ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் ஆன்சன் பாலுக்கு நிச்சயிக்கப்பட்ட கீர்த்தி சுரேஷை காதலிக்க நர்ஸ் வேடத்தில் அவருடன் நட்பாக பழகி மனதை மாற்றி ஆன்சன் பால் உங்களுக்கு செட்டானவர் கிடையாது என்றும் சிவகார்த்திகேயனை காதலிக்க வைக்க பல முயற்சிகளை செய்து கடைசியில் இவரை ஹீரோவாக்க ஆன்சன் பாலை வில்லனாக்கி கிளைமேக்ஸில் சிவகார்த்திகேயனையும் கீர்த்தி சுரேஷையும் இயக்குநர் சேர்த்து வைத்திருப்பார்.
காதலியுடன் பதிவு திருமணம்: மலையாளத்தில் ஆடு 2, தி கேம்ப்ளர், எ ரஞ்சித் சினிமா, பேட் பாய்ஸ் மற்றும் கடைசியாக மார்கோ உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். திருவல்லாவை சேர்ந்த நிததி ஆன் என்பவரை காதலித்து வந்த நிலையில், திருவனந்தபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணத்தை மே 7ம் தேதி நடத்தி முடித்துள்ளார். எளிமையாக நடந்த இவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கிய நிலையில், பலரும் ஆன்சன் பாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











