twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குதிரையில் ஏற்றி கடலில் தள்ளி விஜய்யை நடிகராக்கிய கதை!- இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்

    By Shankar
    |

    குதிரையில் ஏற்றி கடலில் தள்ளி விஜய்யை நடிகராக்க பயிற்சி அளித்தேன் என்று ஒரு படவிழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தன் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

    வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படம் 'நையப்புடை'. இப்படத்தை ஒளிப்பதிவாளர் இயக்குநர் ஜீவனின் மகனான 19 வயதேயான விஜயகிரண் இயக்கியுள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர் கதையின் நாயகனாக பிரதான வேடமேற்று நடிக்க, பா.விஜய். சாந்தினி, எம்.எஸ்.பாஸ்கர், விஜி சந்திரசேகர், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

    SA Chandrasekhar reveals how Vijay became hero

    இப்படத்தின் அறிமுகவிழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

    விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, "எனக்கும் தாணு அவர்களுக்கும் 'சச்சின்' படத்திலிருந்து நெருங்கிய பழக்கம். நாங்கள் ஒரு தயாரிப்பாளராக, இயக்குநராகப் பழகியதில்லை. அப்படி நண்பர்களாக இருக்கிறோம். அப்படி யதார்த்தமாகப் பழகுபவர் தாணு.

    தயாரிப்பு இயக்கம் எல்லாம் இனி வேண்டாம், ஒய்வெடுக்கலாம் என்று மனைவியிடம் கூறி முடிவெடுத்து இருந்த நேரம். படம் மாதிரி வேண்டாம் நானும் என் உதவியாளர்களும் ஒரு பிக்னிக் போய் வருவது போல இருக்கட்டும் என்று சென்றோம். ஆசைக்காக அப்படி ஒரு படம் எடுத்தோம். அதுதான் 'டூரிங் டாக்கீஸ்'. தாணு அதைப் பார்த்துவிட்டு 'நன்றாக நடிக்கிறீர்கள் தொடர்ந்து நடிக்கலாம்' என்றார்.

    பிறகு ஒரு நாள் திடீரென்று என்னைப் போனில் கூப்பிட்டு 'எங்கு இருக்கிறீர்கள்?' என்றார். வீட்டில் இருக்கிறேன் என்றேன். 10 நிமிடத்தில் வருகிறேன் என்றார். வந்தார். வந்தவர், என்னையும் என் மனைவியையும் அழைத்து என் கையில் ஒரு முன்பணம் கொடுத்து விட்டு 'நீங்கள் நடிக்கிறீர்கள்' என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. 'ஒன்றும் பேச வேண்டாம். நான் ஒரு பையனை அனுப்புகிறேன். கதையைக் கேளுங்கள்' என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்.

    சொன்ன மாதிரியே என் அலுவலகம் அந்தப் பையன் வந்தார். தம்பி எவ்வளவு நேரத்தில் கதை சொல்வாய்? என்றேன் 'ஒரு நிமிடம்' என்று கூறி லேப் டாப் எடுத்து வைத்தார். என்னப்பா இது? கதை சொல்லத் தெரியாதா? எனக்கு வாய்வழியாக கதை சொல்லி கேட்டுத்தான் பழக்கம்.

    'குஷி' படத்தின் போது எஸ்.ஜே.சூர்யா கதை சொன்னார். நானும் விஜய்யும் கதை கேட்டோம். மூன்று மணிநேரம் கதை சொன்னார். எஸ்.ஜே.சூர்யா வஜ்ராசனம் போட்டு உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு வசனம், காட்சி, சிறு சிறு நடிப்பு, நுணுக்கமான சில்மிஷங்கள் உள்பட எல்லாம் செய்துகாட்டிக் கதை சொன்னார். 'பூவே உனக்காக' படத்துக்காக விக்ரமன் இடையில் பாட்டெல்லாம் பாடி கதை சொன்னார். இப்படிக் கதை சொல்லிக் கேட்டுத்தான் பழக்கம்.

    இவர் இப்படி இருக்கிறாரே என்று நினைத்தேன். 'எனக்குக் கதை சொல்ல வராது லேப்டாப்பைப் பாருங்கள் 'என்று என் பக்கம் லேப்டாப்பைத் திருப்பிவைத்தார். இதுதான் புதியதலைமுறையின் அணுகுமுறை போல என்று நினைத்தேன் அப்படி லேப்டாப் முலம்தான் விஜயகிரண் கதை சொன்னார். படப்பிடிப்பும் லேப்டாப் உதவியுடன்தான் போனது. அது ஒரு நல்ல அனுபவம்.

    ஆரம்பத்திலேயே நான் தெளிவாகச் சொல்லிவிட்டேன். நான் காலையில் எவ்வளவு சீக்கிரம் வேண்டுமானாலும் வருகிறேன். மாலை 6 மணிக்கு மேல் என்னால் வேலை செய்ய முடியாது என்றேன். அப்படிக் காலை 7 மணிக்கு அவர்களை பழக்குவதற்கு சில நாள் ஆனது.

    ஒரு நாள் ஒன்பதே முக்கால் ஆகியும் முதல் ஷாட் எடுக்க வில்லை. எல்லாரும் வந்து விட்டார்கள் என்னாச்சுப்பா என்றேன். காஸ்ட்யூம் பாக்ஸ் வர வில்லை என்றார்கள் ஷாட் எடுக்க காஸ்ட்யூம் பாக்ஸ் ஏன்? எல்லாருமே சரியாக அவரவர் காஸ்ட்யூமை போட்டு இருக்கிறார்கள், இனியும் ஏன் முதல் ஷாட் தொடங்கவில்லை? என்றேன். 'காஸ்ட்யூம் பாக்ஸ் வேண்டும். அதில்தான் என் லேப்டாப் இருக்கிறது 'என்றார் விஜயகிரண்.

    'ஏம்ப்பா சீன் நீதானே பண்ணின ? வாயால் சொல்லுப்பா, லேப்டாப் வேண்டாம்' என்றேன் ஆனால் அவர் 'அது சரிப்பட்டு வராது,' என்று தவிர்த்தார்.

    இப்போது தப்பைக்கூட சரியாக நம்பிக்கையாகச் செய்கிறார்கள். தப்பைக்கூட சரியாகச் செய்தால் அது தப்பே இல்லை என்று பாடலே பாடுகிறார்கள்.

    படப்பிடிப்பில் சண்டைக்காட்சியில் 75 வயது ஆன எனக்கு டூப் எல்லாம் வைத்து தயாராக வைத்திருந்தார்கள். இருந்தாலும் உங்களால் முடியும்,இயல்பாக இருக்கும் என்று எல்லாம் கூறி ஊக்கப் படுத்தியதால் என்னையே டூப் இல்லாமல் காரிலிருந்து ஏறி குதிக்க செய்து விட்டார் இயக்குநர் தம்பி. படம் பார்த்து நானே மிரண்டு போனேன். என்னை இப்போது நடிக்கச் சொல்லி வெற்றிமாறன் அழைத்துள்ளார். இப்படிப் பலரும் என்னை அழைத்துள்ளார்கள்.

    இப்படத்தில் என்னை வைத்து விஜயகிரண் ஆக்ஷன் செய்ய வைத்துள்ளார். காமெடி செய்ய வைத்துள்ளார். நடனம் ஆடவைத்துள்ளார், குழந்தைகளோடு வயது மறந்து நடிகக வைத்துள்ளார். இப்படி திறமையாக வேலை வாங்கினார் விஜயகிரண்.

    விஜய் நடிக்க விரும்பிய போது நடிகராவது சுலபமல்ல. நடிகராக ஆசைப் பட்டால் போதாது. முதலில் அதற்குத் தகுதியாகத் தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். காலை 4.30 மணிக்கு எழுப்பி ஜாக்குவார் தங்கத்துடன் பீச் போவோம். குதிரையில் தாவி ஏற வைப்போம். குதிரை மீது ஏறி நின்று தள்ளிவிட்டு தாவி கடலில் குதிக்க வைப்போம்.

    நடிகராக முதல் தகுதி ஆக்ஷன் செய்ய வேண்டும் குழந்தைகளும் விரும்ப வேண்டுமென்றால் நடனம் ஆடத் தெரியவேண்டும்.

    ஆக்ஷன், நடனம் இந்த இரண்டும் இருந்தால் கதாநாயகன் ஆகி விடலாம். மற்ற இயக்குநர்கள் நடிகர் ஆக்கிவிடுவார்கள். இந்த இரண்டையும் வைத்து நான் விஜய்யை கதாநாயகன் ஆக்கினேன். பிறகு 'பூவே உனக்காக' போன்ற படங்கள் மூலம் இயக்குநர்கள் அவரை நடிகராக்கி விட்டார்கள்.

    இப்படி வளர்ந்துதான் விஜய் வியாபார ரீதியான கதாநாயகன் ஆனார்.

    அந்த வகையில் என்னை நடிகராக்கியுள்ள இந்த 'நையப்புடை' படம் எனக்கு மறக்க முடியாத அனுபவம்," என்றார்.

    English summary
    In Nayyapudai movie introduction function, SA Chandrasekhar revealed how he was made Vijay as an actor.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X