twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெத்தவங்ககிட்ட அதிகம் பேசுங்க!- சசிகுமார்

    By Shankar
    |

    நான் சினிமாவை நோக்கிக் கிளம்பினப்ப, அதில் கொஞ்சம்கூட விருப்பம் இல்லாமல், ஆனாலும் என்னோட ஆசைக்கு குறுக்கே நிற்காமல் வழியனுப்பி வைச்சது அம்மாதான். எனக்குப் பிடிச்சதை நான் செய்யணும்கிறதில் ‪அம்மா‬ உறுதியா இருப்பாங்க. 'வீட்டுக்கு வாரப்ப சினிமாவைப் பத்தி யாரும் அவன்கிட்ட கேட்கக்கூடாது'ன்னு 'சுப்ரமணியபுரம்' படத்துக்கு முன்னாலேயே அம்மா சொல்லி வைச்ச சொல்... இன்னிக்கு வரைக்கும் அப்படியே இருக்கு. வீட்ல யாரும் என்கிட்ட சினிமா பத்தி பேசவே மாட்டாங்க.

    'சுப்ரமணியபுரம்' ஜெயிச்ச நேரம். வீட்டுக்கு வந்தேன். 'அதான் ஒரு டைரக்டரா ஜெயிச்சிட்டியேப்பா... இனியும் அங்கபோயி கஷ்டப்படணுமா... இங்கேயே இருந்திடுப்பா'ன்னு அம்மா சொன்னாங்க. புகழ், பெருமை, சம்பாத்தியம், பிரபல்யம் எதையும் பொருட்படுத்தாமல் 'எம்புள்ள கஷ்டப்படக் கூடாது'ங்கிற ஒரே ஒரு நோக்கம்தான் அம்மாவுக்கு.

    Sasikumar's facebook staus on Mothers Day

    'பிரம்மன்' படம் ரிலீஸுக்கு ரெடியான நேரம். சென்னையில இருந்தேன். பரபரப்பா வேலைகள் நடந்துக்கிட்டு இருந்தது. ஆனாலும், பட வேலைகள்ல மனசு ஒட்டாமல் ஏதோ ஒண்ணு தோணுது. அம்மாகிட்ட பேசணும்கிற உணர்வு. மதுரைக்குப் போன் போட்டேன். அம்மா பேசினாங்க. நல்லா பேசினாங்க. 'என்னன்னு தெரியல... நான் உடனே மதுரைக்கு கிளம்பி வரேன். பார்க்கணும் போல இருக்கும்மா'ன்னு சொன்னேன். 'பரவாயில்லப்பா'ன்னு சொன்னாங்க.

    ஆனாலும், உடனே ஃப்ளைட் டிக்கெட் போட்டு, நான் கிளம்பிட்டேன். மதுரையில் இறங்கிய உடனே என்னோட மேனேஜர் உதய்கிட்ட இருந்து போன். 'சார், அம்மா இறந்துட்டாங்க...' என்றார். 'உங்க அம்மாவுக்கு என்னாச்சு உதய். உடம்பு சரியில்லாம இருந்தாங்களா... நீங்க என்கிட்ட சொல்லி இருக்கலாமே?' என்றேன் பதறிப்போய். 'சார், உங்க அம்மா சார்....' என உதய் சொல்ல, ஒரு நிமிடத்தில் உலகத்தையே தொலைச்சிட்ட மாதிரி இருந்தது. சில மணி நேரத்துக்கு முன்னால நல்லா பேசிய அம்மா, ஒரு நொடியில என்னைய விட்டுப் போவாங்கன்னு நான் நினைக்கவே இல்ல. அம்மாவுக்கு ஏதோ நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சு எனக்கே தெரியாமல் என்னைக் கிளப்பிய உள்ளுணர்வு, ஒரு நாளைக்கு முன்னாலயே என்னைய‌ உசுப்பியிருக்கக் கூடாதா?

    வெளியூர், ஷூட்டுங் என எங்கே போய் வீட்டுக்கு வந்தாலும் அம்மாதான் எனக்கு எல்லாமுமா நிற்பாங்க. இவ்வளவு சுலபத்தில காலம் அவங்களை என் கையைவிட்டுப் பறிக்கும்னு நினைக்கலை. இறப்பு தவிர்க்க முடியாததுன்னு நல்லா உணர்ந்தவன் நான். ஆனா, மரணத்துக்கான எந்தவித அறிகுறியும் இல்லாம அம்மா மறைஞ்சதை என்னால ஏற்கவே முடியலை. இன்னிக்கும் என் வீட்ல, ஆபிஸ்ல அம்மா போட்டோவை மாட்டி வைக்கலை. ஆபிஸ்ல இருக்கிறப்ப அம்மா மதுரையில வீட்ல இருக்கிறதா நினைச்சுக்குவேன். வீட்ல மேல் ரூம்ல இருந்தா, அம்மா கீழ இருக்கிறதா நினைச்சுக்குவேன். என்னையப் பொறுத்தவரை என்னோட அம்மா இன்னும் இருக்காங்க. அவங்க என்னைய விட்டுப் போகலை.

    நம்மளப் பெத்தவங்க நூறு வருசம் தாண்டியும் வாழணும்னுதான் நாம வேண்டுறோம். ஆனா, எது எப்போ நடக்கும்கிறது நம்ம கையில இல்ல. இந்த நேரத்துல நான் வலியுறுத்திச் சொல்ல நினைக்கிறது இதுதான்... தயவுபண்ணி பெத்தவங்ககிட்ட நிறைய பேசுங்க. அம்மாவை பத்திரமா பார்த்துக்கங்க. அவங்க ஆசைப்பட்றதை செஞ்சு கொடுங்க. 'இது போதும்பா எனக்கு'ன்னு அவங்க திருப்திபட்ற அளவுக்கு பாசமா பார்த்துக்கங்க. இந்த உலகத்தில எதை வேணும்னாலும் நாம எதைக் கொண்டும் நிரப்பிடலாம். ஆனா, தாயோட இடத்தில யாரை வைச்சும் நாம நிரப்ப முடியாது. எனக்கான எல்லாமுமா இருந்த என் அம்மா சொல்லாமல் கொள்ளாமல்
    பிரிஞ்சதை இன்னிக்கும் ஏத்துக்க முடியாமல் தத்தளிக்கிறேன். என்னோட தவிப்பு மத்தவங்களுக்கும் ஏற்படக் கூடாதுங்கிறதுக்காகச் சொல்றேன்... இந்த நிமிஷமே அம்மாகிட்ட பேசுங்க. அவங்களை சந்தோஷமா பார்த்துக்கங்க...

    அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

    பின் குறிப்பு: இந்தப் பதிவில் என் அம்மா போட்டோவை தவிர்த்திருக்கேன். காரணம், இதை வாசிக்கிறப்ப, உங்க அம்மா முகமே உங்களுக்குத் தெரியட்டும்!

    -இயக்குநர் எம் சசிகுமாரின் முகநூல் பக்கத்திலிருந்து...

    English summary
    Here is director - actor Sasikumar's facebook staus on Mothers Day
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X