'ஐஃபா' விழாவில் ஷாரூக்கான் பங்கேற்பில்லை?

கொழும்பில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் தென்னிந்திய நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி பங்கேற்கும் நட்சத்திரங்களின் படங்களை திரையிடமாட்டோம் என தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அதேபோல வட இந்திய நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கையிலிருந்து இந்த விழாவை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக ஐஃபா விழா ஏற்பாட்டாளர்களிடம் தென்னிந்திய திரைப்பட பிரதிநிதிகள் நேரில் வலியுறுத்த உள்ளனர்.
இதையும் மீறி பல முன்னணி திரை நட்சத்திரங்கள் ஐஃபா விழாவில் பங்கேற்கத் தயாராக உள்ளனர். இவர்களில் முக்கியமானவர் ஐஃபாவின் புதிய தூதர் சல்மான்கான், லாராதத்தா ஆகியோர்தான்.
ஷாரூக்கானும் இந்த விழாவில் பங்கேற்பதாகவும், இந்த விழாவையொட்டி இலங்கை கிரிக்கெட் அணியுடன் ஒருநாள் காட்சிப் போட்டியொன்றில் பங்கேற்கும் பாலிவுட் நட்சத்திரங்கள் அணிக்கு ஷாரூக் தலைமை வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஷாரூக் இன்று தனது ட்விட்டர் செய்தியில், "வேலைப்பளு காரணமாக ஐஃபா விழாவுக்கு தான் செல்வது சாத்தியமில்லை" என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் விழாவில் பங்கேற்காதது குறித்து தங்களுக்கு ஷாரூக்கிடமிருந்து எந்த தகவலும் இல்லை என்று இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications











