ஷங்கரின் 4 !
சிவாஜியை இயக்கி முடித்த கையோடு ஒரே நேரத்தில் நான்கு படங்களைத் தயாரிக்கப் போகிறார் ஷங்கர்.
உச்ச இயக்குநராக மாறி விட்ட ஷங்கர் இப்போது பிசியான தயாரிப்பாளராகவும் மறுபக்கம் கலக்க ஆரம்பித்துள்ளார். முதல்வன், காதல், வெயில், இம்சை அரசன் 23ம் புலிகேசி என முத்தான நான்கு மெகா ஹிட் படங்களைக் கொடுத்துள்ள ஷங்கர் அடுத்து ஒரே நேரத்தில் நான்கு படங்களைத் தயாரிக்கப் போகிறார்.ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தை நான்கு இயக்குநர்கள் இயக்குகிறார்கள். ஷங்கரின் ஸ்டைல் சின்ன மீனைப் போட்டு பெரிய மீன்களைப் பிடிப்பது.
காதல், வெயில் ஆகிய படங்களுக்கு ஷங்கர் போட்ட முதல் மிகவும் சிறியது. ஆனால் அறுவடையோ மகாப் பெரியது. அதேபோல இம்சை அரசனுக்கு கொஞ்சம் கூடுதலாக முதல் போட்டு மெகா அறுவடையை நடத்தினார்.
வித்தியாசமான கதையுடன், சராசரி மக்களைக் கவரும் வகையிலான விஷயங்களையும் சேர்த்துக் கொடுக்கும் ஷங்கரின் பார்முலா வெற்றி பெற்ற ஒன்று.
ஷங்கர் தற்போது தயாரிக்கப் போகும் நான்கு படங்களில் ஒன்றை காதல் தந்த பாலாஜி சக்திவேல் இயக்குகிறார். கல்லூரி என்று இப்படத்துக்கு பெயர் சூட்டியுள்ளார் சக்திவேல். இந்தக் கதையை செதுக்க அவர் எடுத்துக் கொண்ட காலம் 3 ஆண்டுகள் (படு வேகம் பாலாஜி அண்ணே)
இரண்டாவது படத்தை இம்சை அரசன் தந்த சிம்புதேவன் இயக்குகிறார். மற்ற படங்களை ஷெல்வன், காந்தி கிருஷ்ணா ஆகியோர் இயக்குகிறார்கள். இவர்களும் ஷங்கரின் சிஷ்யர்கள்தான். ஷெல்வன் சூரி படத்தை இயக்கியுள்ளார். காந்தி கிருஷ்ணா கொடுத்த ஹிட் படம் செல்லமே.
நான்கு படங்களுக்கும் ஒரே நாளில் பூஜை போடத் திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர்.
நாலையும் நச்சுனு எடுங்கப்பா!


Click it and Unblock the Notifications











