»   »  சிக்கலில் காதல் அரங்கம்

சிக்கலில் காதல் அரங்கம்

Subscribe to Oneindia Tamil

வேலு பிரபாகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள காதல் அரங்கம் படத்தில், ஹீரோயின் ஷெர்லி சம்பந்தப்பட்ட பல காட்சிகள் படு கவர்ச்சியாக இருப்பதாக கூறி படத்திற்கு சான்றிதழ் தர சென்சார் போர்டு மறுத்து விட்டது.

புரட்சி இயக்குனர் வேலு பிரபாகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காதல் அரங்கம். புதுமுகம் ஷெர்லி தாஸ், செந்தில் ஜோடியாக நடித்துள்ளனர். காதல் என்றால் என்ன, காமம் என்றால் என்ன என்பதை இப்படத்தில் விளக்கி, இந்த இரு விஷயங்கள் குறித்தும் சமூகத்தின் பார்வையில் உள்ள தவறுகளை விளக்கும் படம் இது என வேலு பிரபாகரன் முன்பு கூறியிருந்தார்.

படம் முழுக்க ஷெர்லி அரை நிர்வாணம், முக்கால் நிர்வாணம் என துணிக் குறைவாக துணிவாக நடித்திருந்தார். ஷெர்லியின் போஸ்கள் வெளியாகி படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன.

படத்தில் நிறைய கவர்ச்சிக் காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந் நிலையில் படத்தை சென்சாருக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன். படத்தைப் பார்த்த சென்சார் வாரிய உறுப்பினர்கள் 10க்கும் மேற்பட்ட காட்சிகள் அதீத கவர்ச்சியுடன் இருப்பதால் அவற்றை நீக்க வேண்டும் என்று பிரபாகரனிடம் கூறினர்.

குறிப்பாக ஷெர்லி வரும் காட்சிகள் எல்லாமே படு ஆபாசமாக இருப்பதாகவும் தணிக்கை வாரியம் கூறியது. இதை வேலு பிரபாகரன் ஏற்க மறுத்தார். இதைத் தொடர்ந்து மறு பரிசீலனைக் கமிட்டிக்கு படம் அனுப்பப்பட்டது. அங்கும் பல காட்சிகளை வெட்டக் கூறினர்.

இதற்கு வேலு பிரபாகரன் உடன்பட மறுத்ததால், சான்றிதழ் தர முடியாது என்று தணிக்கை வாரியம் கூறி விட்டது. இதையடுத்து டிரிப்யூனலின் பரிசீலனைக்கு படத்தை வேலு பிரபாகரன் அனுப்பி வைத்துள்ளார்.

இந்த சர்ச்சை குறித்து வேலு பிரபாகரன் கூறுகையில், கதைப்படி ஹீரோ உயர்ந்த ஜாதிக்காரன். ஹீரோயின் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண். இருவருக்கும் காதல் பிறக்கிறது.

ஆனால் ஜாதி பிரச்சினை காரணமாக காதல் கைகூடவில்லை. இதனால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கின்றனர். சாவதற்கு முன்பு தன்னையே ஹீரோவிடம் ஒப்படைக்க முன் வருகிறாள் நாயகி.

அப்போது தனது உடலை மூடியிருந்த மேலாடையை கழற்றுகிறாள். படத்தின் உயிர் நாடியான காட்சியே இதுதான். இந்தக் காட்சியை வெட்டுங்கள் என்று கூறுகிறார்கள். அது எப்படி முடியும்?

நமது நாட்டில் காதலுக்கும், காமத்திற்கும் உள்ள வித்தியாசம் யாருக்கும் தெரியவில்லை. உடல் கவர்ச்சியை வைத்துத்தான் இங்கே பாலியல் பிரச்சினைகள் வருகின்றன.

முழு நிர்வாணம் மேலை நாடுகளில் பெரிய விஷயமே கிடையாது. ஆனால் இங்கே முந்தானைத் தலைப்பு லேசாக விலகினாலும் கூட ஆண்கள் மன நிலை பாதிக்கப்பட்டு விடுகிறார்கள். பலவித கற்பனைகளுக்கு ஆளாகிறார்கள். தவறுகள் செய்யத் துணிகிறார்கள்.

பெண்களை இடிப்பதற்கும், சைட் அடிப்பதற்கும், கள்ளக் காதல் கொலைகளுக்கும் இதுவே காரணம். உடல் சார்ந்த கவர்ச்சி விலக வேண்டும், போக வேண்டும். ஆண்களின் காமப் பார்வையிலிருந்து பெண்களை விடுவிக்க வேண்டும். அதுதான் அவர்களுக்கு கொடுக்கும் உண்மையான விடுதலையாக இருக்க முடியும்.

அப்படிப்பட்ட சிந்தனைகளை தூண்டும் விதமாகத்தான் எனது காதல் அரங்கம் படம் அமைந்துள்ளது. ஆனால் தணிக்கை வாரிய உறுப்பினர்கள் இதை உடல் சார்ந்த கவர்ச்சிப் படமாகவே பார்க்கிறார்கள். முதலில் அவர்களும் மாற வேண்டும். அப்போதுதான் நல்ல கருத்துள்ள படங்கள் நிறைய வெளிவர முடியும் என்றார் பிரபாகரன்.

பிரபாகரன் சொல்வதைப் போல படங்களை அனுமதித்தால் சமுதாயம் என்னவாகும்?

எப்படியும் காதல் அரங்கம், இப்போதைக்கு திரையரங்குகளுக்கு வரப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயமாகிவிட்டது?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil