கன்னட மொழிக்கு நீங்க என்ன செஞ்சிருக்கீங்க.. கமல்ஹாசனுக்கு சப்போர்ட்டாக வந்த சிவராஜ்குமார்!
பெங்களூர்: தமிழ் மொழியிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என கமல்ஹாசன் சிவராஜ்குமாரை புகழும் நோக்கில் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியது கர்நாடகாவில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. கன்னட நடிகரான சிவராஜ்குமார் அமைதியாக கமல் பேசுவதை ரசித்துக் கொண்டிருக்கிறார், அவர் ஏன் கேள்வி எழுப்பவில்லை, கண்டனம் தெரிவிக்கவில்லை என கமல்ஹாசனை தொடர்ந்து அம்பு அவர் மீதும் பாய்ந்த நிலையில், கமல்ஹாசனுக்கே தனது ஆதரவு என தக் லைஃப் பதில் கொடுத்துள்ளார் சிவராஜ்குமார்.
மேலும், கன்னட மொழிக்காக நீங்கள் எல்லாம் என்ன பண்ணியிருக்கீங்க? என்கிற கேள்வியையும் முன் வைத்திருக்கிறார். சர்ச்சை வெடித்தால் கண்டனம் தெரிவிக்க மட்டும் கூட்டமாக கூடுறீங்களே தவிர்த்து, "எப்போதும் கன்னட மொழி மீது காதல் கொண்டவர்களாக இருக்க வேண்டும்" என சிவராஜ்குமார் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தக் லைஃப் இசை வெளியீட்டு விழா: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக கடந்த மே 24ம் தேதி சாய் ராம் கல்லூரியில் நடைபெற்றது. அதில், சிறப்பு விருந்தினராக கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார் கலந்துக் கொண்டார். விழாவில் இறுதியாக பேசிய கமல்ஹாசன் சிவராஜ் குமாரும் நானும் ஒரே குடும்பம் தான் என்றும் அவருக்கு நான் சித்தப்பா என்றும் பேசினார். "உயிரே, உறவே, தமிழே" என பேசிய கமல்ஹாசன் தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என்றும் பேசியது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கன்னட அமைப்பினர் கண்டனம்: கமல்ஹாசன் மற்றும் சிம்புவின் தக் லைஃப் போஸ்டர்களை தீயிட்டு எரித்து கர்நாடகாவில் சில கன்னட அமைப்பினர் கமல்ஹாசன் பேச்சுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கமல்ஹாசனுக்கு வரலாறு தெரியாது என்றும் பேசி தனது கண்டனத்தையும் பதிவு செய்திருந்தார்.
அன்புக்கு மன்னிப்பு கேட்க முடியாது: தக் லைஃப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக கர்நாடகாவில் படத்துக்கு எதிராக இப்படியொரு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், மன்னிப்பு கேட்பது தான் பெரிய மனுஷத்தனம் என கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டு விடுவாரா? என சிலர் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், படத்துக்கு பேரே 'தக் லைஃப்' என வைத்துவிட்டு மன்னிப்புக் கேட்டு விடுவேனா என்கிற தொனியில், அன்புக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் பல்வேறு மொழி ஆய்வாளர்கள் தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது எனக் கூறியுள்ளனர். அரசியல்வாதிகள் இதுகுறித்து பேச எந்த தகுதியும் இல்லை எனக் கூறிவிட்டார்.
சிவராஜ்குமார் ஆதரவு: கமல்ஹாசனை தொடர்ந்து அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்ற சிவராஜ்குமார் மீதும் கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கிய நிலையில், கமல்ஹாசன் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சிவராஜ்குமார் பேசியிருக்கிறார். "கமல்ஹாசனுக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பவர்கள், உண்மையாக கன்னட மொழியின் வளர்ச்சிக்காக என்ன செஞ்சிருக்கீங்க" என்கிற கேள்வியை எழுப்பியுள்ளார். கண்டனம் தெரிவிக்கும் போது மட்டும் மொழிப்பற்றுக் கொண்டவர்கள் போல நடிக்கக் கூடாது என்றும் எப்போதுமே தாய் மொழி மீதான காதலுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கன்னட மொழி மீதான என் பற்று குறித்து யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்றும் தடாலடியாக கூறியுள்ளார். தமிழில் ஜெயிலர், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சிவராஜ்குமர் ஜெயிலர் 2 படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











