சிவாஜி மீண்டும் ஒத்திவைப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் சிவாஜி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே 26ம் தேதி படம் ரிலீஸாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு ஆளாகியுள்ள சிவாஜி படம் முடிவடைந்து விட்டது. சில நகாசு வேலைகளில் இயக்குநர் ஷங்கர் ஈடுபட்டிருந்தார். இதனால், ஏப்ரல் 14ம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய படம் மே 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.தற்போது அதுவும் தள்ளிப் போயுள்ளது. இந்த முறை தாமதத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்தான் காரணம். பின்னணி இசை சேர்ப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாலும், கிராபிக்ஸ் வேலைகள் பாக்கி உள்ளாலும், திட்டமிட்டபடி மே 17ம் தேதி படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம். இதனால் மே 26ம் தேதிக்கு படம் தள்ளிப் போகிறது.
படம் சிறப்பாக வந்துள்ளதால், படப்பிடிப்புக்கு எடுத்துக் கொண்டதைப் போலவே நகாசு வேலைகளுக்கும் ஷங்கர் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டுள்ளார். படத்தின் அனைத்துப் பகுதியும் அட்டகாசமாக வர வேண்டும் என்பதில் அவர் படு கவனமாக இருக்கிறார்.
அதேபோல இதுவரை இல்லாத அளவுக்கு பின்னணி இசை சேர்ப்பில் ரஹ்மானும் தீவிர கவனம் எடுத்துக் கொண்டிருக்கிறார். பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகி விட்டதால், பின்னணி இசையும் பக்காவாக வர வேண்டும் என அவர் நினைக்கிறார்.
உண்மையில், படத்தை ஜூன் 8ம் தேதி ரிலீஸ் செய்யலாம் என்றுதான் நினைத்திருந்தார் ஷங்கர். ஆனால் ஏவி.எம் தரப்பில் மே 26ம் தேதியே படத்தை வெளியிட்டு விடலாம் என நெருக்குதல் தரப்பட்டதாம். இதனால்தான் அந்த தேதிக்கு படத்தை தள்ளி வைத்துள்ளனர். ஆனால் இதிலும் கூட மாற்றம் இருக்கக் கூடும் என கூறப்படுகிறது.
தமிழ் சிவாஜி வெளியாகும் அதே நாளில் தெலுங்கு சிவாஜியையும் சேர்த்து ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனராம்.
சீக்கிரம் வாங்க சிவாஜி


Click it and Unblock the Notifications











