சிவாஜிக்கு எதிராக வழக்கு!
சிவாஜி படத்தின் கதை தனக்குரியது என்று கூறி நெல்லையைச் சேர்ந்த சினிமா உதவி இயக்குநர் ஒருவர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நெல்லையைச் சேர்ந்தவர் சுடலைக்கண்ணு என்கிற ஜெயராஜதேவன். இவர் உதவி இயக்குநராக இருக்கிறாராம். இந்த நிலையில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சுடலைக்கண்ணு ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.அதில், நான் நன்றாக கதை எழுதுவேன். அப்படி எழுதிய ஒரு கதையை, அதுதான் சிவாஜி கதை, இயக்குநர் ஷங்கருக்கு அனுப்பி அவரிடம் வாய்ப்பு கேட்டிருந்தேன்.
ஆனால் எனக்கு வாய்ப்பு தருவற்குப் பதில் நான் அனுப்பிய கதையைப் பயன்படுத்தி சிவாஜி படத்தை எடுத்துள்ளார் ஷங்கர். இந்தக் கதையை அவருக்கு அனுப்பியது தொடர்பாக எங்களுக்குள் கடிதப் போக்குவரத்து நடந்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
நான் எழுதிய கதையை பயன்படுத்துவது தொடர்பாக என்னிடம் முன் அனுமதி பெறவில்லை ஷங்கர். இது தவறானதாகும்.
சிவாஜி படத்தின் கதாசிரியராக எனது பெயரைக் குறிப்பிட வேண்டும். எனது பெயரைக் குறிப்பிடும் வரையில் சிவாஜி படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சுடலைக்கண்ணு.
இந்த மனு இன்று நீதிபதி விஜயேந்திரராணி முன்னிலையில் பரிசீலனைக்கு வந்தது. வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஏவி.எம். நிறுவனம், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











