»   »  சிங்கப்பூரில் இன்று தமிழ் சினிமா பவள விழா!

சிங்கப்பூரில் இன்று தமிழ் சினிமா பவள விழா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவின் பவள விழா இன்று சிங்கப்பூரில் தொடங்குகிறது. இதன் ஒரு பகுதியாக சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்களும் நடைபெறவுள்ளன.

முதல் தமிழ் படம் வெளியாகி 75 ஆண்டுகள் ஆகின்றன. இதையடுத்து தமிழ் திரையுலகின் பவள விழாவை்க் கொண்டாட நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகியவை சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

தமிழ் சினிமாவின் பவள விழா இன்று சிங்கப்பூரில் தொடங்குகிறது. இந்த விழாவில், தமிழ் சினிமாவில் சாதனை படைத்த வீரபாண்டிய கட்டபொம்மன், நாடோடி மன்னன், ரத்தக்கண்ணீர் மற்றும் பின்னர் வெளியான 16 வயதினிலே உள்ளிட்ட பல்வேறு படங்கள் சிங்கப்பூரில் உள்ள தியேட்டர்களில் திரையிடப்படவுள்ளன.

வருகிற 11ம் தேதி டாக்டர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமும் நடைபெறுகிறது. இயக்குநர் பாரதிராஜா தலைமையில் ஒரு அணியும், சிவாஜி படப் புகழ் ராமலிங்கம் ராஜா தலைமையில் ஒரு அணியும் மோதுகின்றன.

பாரதிராஜா தலைமையிலான அணியில் சத்யராஜ், ஸ்ரீபிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தமிழ் சினிமாவால் தமிழ் மக்கள் பெற்றது சோதனையா, சாதனையா என்பது பட்டிமன்றத்தின் தலைப்பாகும். இயக்குநர் ராஜேந்தர் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இந்த விழாவின் ஒரு பகுதியாக அக்டோபர் மாதம் சிங்கப்பூரில் நட்சத்திரக் கலைவிழா நடைபெறுகிறது. பின்னர் நவம்பரில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரிலும், டிசம்பரில் ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளிலும் கலை விழாக்கள் நடைபெறவுள்ளன.

நிறைவு விழா சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil