ரஜினியின் பிறந்த நாள் பரிசு.. நாளை ரிலீஸ்!
ரசிகர்களுக்கு எனது பிறந்த நாள் பரிசு என சூப்பர் ஸ்டார் ரஜினியே வர்ணித்த ப்ளாக்பஸ்டர் படமான சிவாஜி 3 டி நாளை அமர்க்களமாக வெளியாகிறது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு..
சிவாஜி - தி பாஸ் எனும் பெயரில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான படம் இது. ஷங்கர் இயக்கத்தில், ஏவிஎம் தயாரித்தது. இந்தப் படத்தில் பல புதிய தொழில்நுட்பங்கள் அட்வான்ஸாக அன்றே புகுத்தப்பட்டன.

கே வி ஆனந்த்
ஒளிப்பதிவாளர் கேவி ஆனந்த், பல தொழிநுட்பங்களை முன்கூட்டியே அறிமுகம் செய்த படம் இது. உதாரணம், கறுப்பு ரஜினியை வெள்ளைக்காரராகக் காட்ட அவர் பயன்படுத்திய உத்தி.

வசூலில் சாதனை
இந்திய சினிமா வரலாற்றில் எந்தப் படமும் சாதிக்காத பல சாதனைகளைப் படைத்த ஒரே படம் சிவாஜிதான். மொழிமாற்றம் செய்யாமல், ஏன் சப் டைட்டில் கூட வைக்காமல் ஒரு நேரடி தமிழ்ப் படம் வட இந்தியாவைக் கலக்கியது என்றால் அது ரஜினியின் சிவாஜிதான்.

உலக அளவில்...
சர்வதேச அளவில், பிரிட்டனின் டாப் டென் படங்களில் நேரடியாக எட்டாவது இடத்தைப் பிடித்த படம் சிவாஜிதான். தொடர்ந்து மூன்று வாரங்கள் அந்தப் படம் டாப் டென் வரிசைக்குள் இடம்பெற்றது. ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்காவில் சிவாஜியின் தமிழ், தெலுங்குப் பதிப்புகள் வசூலைக் குவித்தன.

வழிகாட்டி..
இதன் விளைவு, ஒரு தமிழ்ப் படத்துக்கு எந்த அளவு உலகளாவிய மார்க்கெட் உள்ளது என்பதை திரையுலகினருக்குப் புரிய வைத்தது. அதன்பிறகுதான் மற்ற நடிகர்களின் படங்களையும் உலகளவில் மார்க்கெட் செய்ய ஆரம்பித்தனர்.

5 ஆண்டுகளுக்குப் பிறகு...
சிவாஜி தி பாஸ் வெளியாகி 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தை 3 டியாக மாற்றி வெளியிடத் திட்டமிட்டது ஏவிஎம். பல நூறு தொழில்நுட்பக் கலைஞர்களின் 8 மாத உழைப்பின் பலன்தான் இந்த சிவாஜி 3டி.

முன்னிலும் பிரமாண்டம்... பேரழகு...
இப்போது சிவாஜியை 3டியில் பார்க்கப் பார்க்க பிரமிப்பாகத்தான் உள்ளது. பிரமாண்டத்துக்கெல்லாம் சிகரம் வைத்தது போலிருக்கின்றன ஒவ்வொரு காட்சியும். ரஜினியும் ஸ்ரேயாயும் மிகப் பொருத்தமாக உள்ளனர். ஒலி மற்றும் ஒளித் துல்லியம் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுவதாக உள்ளது.

ஏஆர் ரஹ்மான்...
படத்தின் முக்கிய பலம் ஏ ஆர் ரஹ்மானின் அசத்தலான இசை மற்றும் பாடல்கள். குறிப்பாக வாஜி வாஜி, சஹானா, அதிரடிக்காரன் பாடல்களில் ரஜினியின் ஸ்டைலுக்கு இணையாக நம்மை கவர்கின்றது ரஹ்மானின் இசை.
நல்ல பாடல்களை அருமையான ஒலி நுட்பம் மற்றும் அழகிய காட்சிகளுடன் பார்ப்பது எத்தனை இனிமையான அனுபவம் என்பதை சிவாஜியை 3 டியில் பார்ப்பவர்கள் உணர்வார்கள்.

ரஜினியின் பிறந்த நாள் பரிசு..
உலகமெங்கும் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். முதல்கட்டமாக தமிழகத்தில் 150க்கும் மேற்பட்ட 3 டி அரங்குகளில் படம் வெளியாகிறது. 3டி கண்ணாடி அணிந்துதான் இந்தப் படத்தை பார்த்து ரசிக்க முடியும்.
ரஜினியே சொன்னது போல, உண்மையிலேயே ரசிகர்களுக்கு அவரது அருமையான பிறந்த நாள் பொழுதுபோக்குப் பரிசு என்றால் அது சிவாஜி 3டிதான்!

புக்கிங் ஃபுல்...
சென்னையைப் பொறுத்தவரை சிவாஜி 3டி மொத்தம் 18 அரங்குகளில் வெளியாகிறது. அனைத்திலும் முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் ஃபுல். 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் ஒரு படத்துக்கு இந்த சாதனை சாத்தியமா?
சாத்தியமே... அது ரஜினி படமாக இருந்தால்!!


Click it and Unblock the Notifications











