குருவாயூரில் ரஜினியின் எடைக்கு எடை வெண்ணெய் சாத்திய சௌந்தர்யா!
குருவாயூர்: குருவாயூரில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோயிலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எடைக்கு எடை வெண்ணெய் துலாபாரம் கொடுத்தார் அவர் மகளும் இயக்குநருமான சௌந்தர்யா.
ரஜினியின் 2-வது மகள் சௌந்தர்யா. தன் தந்தை ரஜினியை வைத்து கோச்சடையான் என்ற படத்தை முதல் முறையைக இயக்கியுள்ளார். இந்த படம் முடிவடைந்து வருகிற ஏப்ரல் மாதம் 11-ந்தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது.

கோச்சடையான்
கோச்சடையான் படம் முதல் முறையாக மோஷன் கேப்சரிங் என்ற தொழில் நுட்பத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. தற்போது நடத்தப்பட்டு வரும் படப்பிடிப்பு முறைக்கு இது மாற்று முறையாகும். இதனை இந்திய சினிமாவின் முதல் முயற்சியாக திரையுலகினர் கருதுகிறார்கள்.

ரஜினி
இந்த படத்தில் ரஜினி 2 வேடம் ஏற்று நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே, ஷோபனா நடித்துள்ளனர். மேலும் சரத்குமார், நாசர், ஆதி, ருக்மணி உள்ளிட்டோரும் நடித்து இருக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மராத்தி, போஜ்பூரி, வங்காளம், பஞ்சாபி போன்ற மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 6 ஆயிரம் தியேட்டர்களில் வெளிவருகிறது. சர்வதேச அளவில் ஆங்கிலத்திலும் இந்த படம் வெளியிடப்படுகிறது.

ஆவலுடன் காத்திருப்பு
இந்தப் படத்தின் வெற்றி இந்தியத் திரையுலகில் பல பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது என்பதால் பலரும் ஆவலுடன் படத்தின் ரிசல்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.

குருவாயூர்
கோச்சடையான் படம் வெளியாவதைத் தொடர்ந்து சௌந்தர்யா நேற்று கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற குருவாயூர் கோவிலுக்கு சென்றார்.

துலாபாரம்
அங்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடுகளில் கலந்து கொண்ட அவர், கோவிலின் பிரதான நேர்த்திக்கடனான துலாபாரம் செலுத்தினார்.

ரஜினியின் எடைக்கு எடை
இதில், ரஜினியின் எடைக்கு வெண்ணை சாத்துவதாக வேண்டிக் கொண்டார். அதன்படி சுமார் 75 கிலோ எடைக்கு வெண்ணை வழங்கி பிரார்த்தனை செய்தார்.
கோவிலின் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று பிரார்த்தனை செய்த பின்பு சிறிது நேரம் கோவிலில் அமர்ந்த அவர், பின்னர் அங்கிருந்து தங்கியிருந்த விடுதிக்கு கிளம்பிச் சென்றார்.

அடுத்த கட்டம்
கோச்சடையான் பற்றி கேட்டபோது, சௌந்தர்யா கூறுகையில், "சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் படம் இந்திய சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்லும்," என்றார்.


Click it and Unblock the Notifications











