For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'புள்ள குட்டிகள படிக்க வைங்கடா..' - திரைத்துறை கொண்டாடும் 'தேவர் மகன்' #25YearsOfDevarMagan

By Vignesh Selvaraj
|

'தேவர் மகன்' படம் தமிழ் சினிமாவில் வந்த முக்கியமான திரைக்கதை கொண்ட படம். படத்தோட கதை சக்திவேல் என்ற பெரிய தேவரின் மகன் வெளிநாட்டில் படித்துவிட்டு சொந்த கிராமத்துக்கு வந்து தன் அப்பாவின் சம்மதத்துடன் மனதுக்குப் பிடித்த வேறு ஜாதிப் பெண்ணை திருமணம் செய்துகொண்டும், பட்டணத்தில் தொழில் செய்யவும் சம்மதம் வாங்க வருகிறான். அந்த ஊரில் நடக்கும் காட்டுமிராண்டித்தனத்தை, பிரச்னைகளைக் கண்டு மீண்டும் உடனே ஊருக்குப் போக முற்படுகிறான். அதுக்குள் சிலபல பிரச்சனைகளால் ஊரிலேயே இருக்கும் சூழல் வருகிறது. அதன்பின் அவன் அப்பா இறந்த உடன், அந்த இடத்துக்கு வந்து தன்னை நம்பி இருக்கும் மக்களுக்கு துணையாய் இருந்து எல்லா பிரச்னைகளையும் சரிசெய்ய முயலுகிறான். வன்முறை எதற்கும் தீர்வு இல்ல என்று சொல்பவனே இறுதியில் எதிரியின் தலையைத் துண்டித்து குற்றவுணர்வுடன் அதே ரயிலில் ஜெயிலுக்கு செல்கிறான்.

'தேவர் மகன்' படத்தின் முதல் காட்சியில் கமல் படிப்பை முடித்து அவர் கிராமத்துக்கு காதலியுடன் வந்து ஆர்ப்பாட்டமாக ட்ரெய்னில் இருந்து இறங்குகிறார். ஆட்டம்பாட்டத்துடன் தொடங்குகிற படம் அவர் அந்த ஊரில் இருக்கும் மக்களைத் திருத்த எண்ணி அவரின் வாழ்க்கையே தடம்புரண்டு இறுதியில் அதே ரயிலில் கைதியாகத் திரும்பி போவதோடு முடிகின்றது. இதை விட அற்புதமாய் யாரும் திரைக்கதை அமைத்து விட முடியாது. காட்பாதர் படத்தில் இன்ஸ்பையராகி அதை நம் மண்ணின் கலாச்சாரத்தோடு அதி அற்புதமாய் எடுத்து இருப்பார்கள் கமலும், இயக்குனர் பரதனும்.

Special article on 25 Years Of Devar Magan

'தேவர் மகன்' ஸ்கிரிப்ட் முடித்த பின்பு சிவாஜி நடித்த பெரியதேவர் கேரக்டருக்கு விஜயகுமார், எஸ்.எஸ்.ராஜேந்திரன் இருவரில் யாராவது ஒருவரை நடிக்க வைக்கலாம் என்று படக்குழுவினர் சொல்லிக்கொண்டு இருந்தனர். ஆனால் கமல் மனதில் நினைத்தது சிவாஜியைத் தான். 'தேவர் மகன்' படம் எடுக்க ஆரம்பித்த போது சிவாஜி உடல் நலம் குன்றி இருந்தார். கமல் இந்தக் கேரக்டருக்கு சிவாஜியால்தான் உயிர் கொடுக்க முடியும் என்று எண்ணி அவரிடம் பேசி இந்தப் படத்தில் நடிக்க வைத்தார். சிவாஜியின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு 7 நாளில் சிவாஜியின் காட்சிகளை படமாக்கி முடித்தார் இயக்குனர் பரதன்.

Special article on 25 Years Of Devar Magan

சிவாஜி, கமல்ஹாசன், நாசர், வடிவேலு, ரேவதி, கௌதமி, காக்கா ராதாகிருஷ்ணன், சங்கிலி முருகன், எஸ்.என்.லட்சுமி ஆகியோட்ர் தொடங்கி படத்தில் சிறு வேடத்தில் வந்துபோகும் காந்திமதி வரை படத்தில் அனைவருமே அற்புதமாக நடித்து இருப்பார்கள். தமிழ் சினிமாவில் வந்த சிறந்த 10 படங்கள் என்று ஒரு பட்டியல் எடுத்தால் அதில் அவசியம் தேவர் மகன் ஒரு படமாக இருக்கும். தேவர் மகனின் திரைக்கதையை தமிழ் சினிமாவில் பணிபுரிய ஆசைப்படும் கலைஞர்களுக்குப் பாடமாகவே வைக்கலாம்.

இந்தப் படத்தில் கோவிலின் பூட்டை உடைத்ததற்கு வடிவேலுவின் கையை வெட்டியதும் கமல் அவரை மருத்துவமனையில் சந்தித்துவிட்டு வந்து சிவாஜியும் கமலும் உரையாடும் காட்சி இந்திய சினிமாவில் வந்த மிகச் சிறப்பான காட்சிகளுல் ஒன்று என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லலாம். இரண்டு நடிப்பு ஆளுமைகளும் போட்டி போட்டு நடித்து இருப்பார்கள். வடிவேலுவை குணசித்திர நடிப்பில் காட்டிய முதல் திரைப்படம் தேவர் மகன். நாசர் வில்லத்தனத்தில் உச்சத்தை தொட்டு இருப்பார்.

Special article on 25 Years Of Devar Magan

தேவர் மகன் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து எடுத்து இருப்பார் கமல்ஹாசன். எதைச் சொல்வது எதை விடுவது என்றே தெரியவில்லை. கமல் சிலம்பு சண்டையிடும் காட்சி, பஞ்சாயத்து காட்சி, சிவாஜி இறந்த பின்பு கமல் அந்த இடத்திற்கு வரும் இண்டர்வல் பிளாக், ரேவதியை திருமணம் செய்து கொள்ளும் காட்சி, அப்போது வரும் பின்னணி இசை, கௌதமிக்கு கமலின் திருமணம் பற்றி தெரிந்து கௌதமி ஆத்திரப்படும் காட்சி என்று படம் நெடுக சொல்லிக்கொண்டே போகலாம். தேவர் மகன் படத்தில் ஒரு காட்சி கூட தேவையில்லாத காட்சியாக இருக்காது என்பதுதான் சிறப்பே.

'தேவர் மகன்' படத்தில் கமல்ஹாசன் எடுக்க நினைத்தது ஒடுக்கப்பட்டவர்களுக்குக்கும், அதிகாரத்தைக் கையில் வைத்து இருப்போருக்கும் நடக்கும் ஜாதிச் சண்டையை, தீண்டாமை பிரச்னையை வைத்துத்தான். அதை எடுப்பதற்கு ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக பங்காளிச் சண்டையாக மாற்றி எடுத்து இருப்பார். கலைஞானம் தான் தென்மாவட்டங்களில் இருக்கும் ஒரு கோவில் இரு பூட்டு என்ற ஐடியாவை கொடுத்தார். அதை வைத்து கமல்ஹாசன் பங்காளிச் சண்டையாக மாற்றி அற்புதமாக திரைக்கதையை அமைத்து இருப்பார்.

Special article on 25 Years Of Devar Magan

உண்மையில் கமல் சொல்ல வருவது தேவர் மகன் படத்தில் வரும் மனிதர்களைப் போல காட்டுமிராண்டியா இருக்காதீங்க கத்தி, அருவாளைத் தூக்கிப் போட்டுட்டு போங்கடா புள்ளை குட்டிகளை படிக்க வைங்கடா என்பதையே. ஆனால் சிலர் அதையெல்லாம் விட்டுவிட்டு ஜாதிப் பெருமையைத் தூக்கி திரியும் படமாய் எடுத்துகொண்டு இன்னும் பெருமை பேசிக்கொண்டு திரிகின்றனர். 'தேவர் மகன்' படத்திற்கு முதலில் கமல் வைத்த பெயர் நம்மவர். இளையராஜா தான் தேவர் மகன் என்று வைக்க சொன்னார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். இளையராஜா இந்தப் படத்திற்கு அற்புதமாக இசை அமைத்து இருப்பார். வாலி அவர் பங்குக்கு சிறப்பான பாடல்களை எழுதி இருப்பார். படத்தின் கதையை நாலே வரிகளில் பாடலில் சொல்லியிருப்பார்.

"வெட்டு அருவா தாங்கி வீசுகிற ஊரில்

வெள்ளை கொடி தூக்கி வந்தவனும் நீயே

நல்லவழி நீதான் சொல்லி என்ன லாபம்

சொன்னவனை தானே சூழ்ந்தது இன்று பாவம்

கலங்காத ராசா காலம் வரட்டும்

நள்ளிரவு போனபின்பு வெள்ளி முளைக்கும்.."

Special article on 25 Years Of Devar Magan

'தேவர் மகன்' திரைப்படம் வெளிவந்து இன்றோடு 25 வருடமாகிறது. 'தேவர் மகன்' படத்தின் வெள்ளிவிழா ஆண்டு இது. இப்போதும் அப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது முழுமையாய் உட்கார்ந்து பார்க்காமல் நகர முடியாது. கதை, திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு, நடிகர்களின் பங்களிப்பு, பாடல்கள் என்று எல்லாத் துறைகளும் ஒரு சில படங்களில்தான் பெர்ஃபெக்ட்டாக இருக்கும். அப்படி ஒரு திரைப்படம்தான் 'தேவர் மகன்'. சினிமா கலைஞர்கள் என்றென்றும் கொண்டாட வேண்டிய படம் இது.

- சரத்பாபு

English summary
'Devar magan' is an important screenplay of Tamil cinema. If you take a list of the top 10 films in Tamil cinema, 'devar magan' film is essential including in this list. Devar magan's screenplay may be add as a subject for filmmakers who want to work in Tamil cinema.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more