twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரைத்தொழிலின் அச்சாணியாக விளங்கிய இயக்குநர் - எஸ்பி முத்துராமன்

    By Shankar
    |

    Recommended Video

    உடல் நிலை குறித்த வதந்திகளுக்கு பதில் அளிக்கிறார்-எஸ்.பி.பி-வீடியோ

    - கவிஞர் மகுடேசுவரன்

    தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்று 'ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் இருவர் வழமையான வாழ்க்கையையும் பொருள்பொதிந்த வாழ்க்கையும் தேர்த்தெடுத்தது குறித்த' வழக்குப்பொருள் ஒன்றைக் காட்டியது. ஒரு தரப்பினர் சமூக ஈடேற்றத்திற்கான மேம்பட்ட வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்தவர்கள். மற்றொரு தரப்பினர் சமூகத்திற்கு வேண்டியதைச் செய்து வாழ்கின்ற இயல்பான வாழ்முறையைத் தேர்த்தெடுத்தவர்கள். அவ்விரு தரப்பினரும் அவ்வாறு தேர்ந்தெடுத்ததைத் தற்போது எவ்வாறு உணர்கின்றார்கள் என்பதை எடுத்துக்காட்டுக்குரிய மாந்தர்களைக்கொண்டு பேசிச்சென்றது. அந்நிகழ்ச்சிக்கு இரு தரப்பிற்கும் வந்த சிறப்பு விருந்தினர்கள் சுப வீரபாண்டியனும் எஸ்பி முத்துராமனும். இருவரும் உடன்பிறப்புகள். ஆனால், வெவ்வேறு வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்துகொண்டவர்கள். அந்நிகழ்ச்சியின் பார்வையானது சுபவீ பொருள்மிக்க வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துச் சிறப்புற்றார் என்பதைப் போன்றும், எஸ்பி முத்துராமன் வணிகப் படங்களின் இயக்குநராக வழமையான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்தார் என்பதைப் போன்றும் அமைந்துவிட்டது. எனக்கு அதில் ஒப்புதல் இல்லை. இருவரும் இருவேறு திசைகளில் தத்தமக்குரிய தேர்வின்படி ஆற்றலுடன் செயல்பட்டவர்கள் என்று ஒரே தட்டில் வைத்துச் சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும். வானூர்தி ஓட்டுவது எவ்வளவு பொறுப்பான மதிப்பான செயலோ அதற்குச் சற்றும் குறைந்ததில்லை சென்னைப் போக்குவரத்து நெரிசலில் பேருந்து ஓட்டுவது.

    Special article on Director SP Muthuraman

    எண்பதுகளின் அறிவுத் தரப்புக்கு ஒரே முகம்தான் இருந்தது. இடதுசாரி முற்போக்கு முகம். அந்தத் தரப்பில் எஸ்பி முத்துராமன் என்னும் வணிகத் திரைப்பட இயக்குநரை மிகவும் எளிமையாக மதிப்பிட்டார்கள். வெற்றி என்பது அத்துணை எளியதுமன்று. அதைத் தொடர்ந்து ஈட்டியமைக்காகத்தான் ஒருவர் அறிவுத்தரப்பின் மதிப்பீட்டுக்கே வருகிறார். இன்றுள்ள இயக்குநர்களின் படாடோபங்களைப் பார்த்தவர்கள், "முத்துராமனைப் போன்றவர்களே திரைத்தொழில் துறையின் அச்சாணியாக விளங்கினார்கள்," என்பதை ஏற்றுகொள்வார்கள். கே. விஜயன், எஸ்பி முத்துராமன் - இவ்விருவரும் இயக்கிய திரைப்படங்கள் பிசிறில்லாத செய்ந்நேர்த்தியோடு இருந்தன.

    Special article on Director SP Muthuraman

    எஸ்பி முத்துராமன் எப்படிப் பணியாற்றுவார் என்பதைப் பஞ்சு அருணாசலம் தம் நூலில் வியந்து குறிப்பிடுகிறார். "கடுமையான உழைப்பாளி. ஒரு வாரம் கூடத் தூங்காமல் இருந்து வேலை செய்வார்". புவனா ஒரு கேள்விக்குறி திரைப்படத்திற்காக வெளியூர்ப் படப்பிடிப்புக்குச் சென்றபோது பத்து நாள்கள் படப்பிடிப்பே நடைபெறவில்லை. புயலும் மழையுமாகப் பெய்ததால் படப்பிடிப்பு நடக்கவில்லை. பதினைந்து நாள்கள்தாம் வெளியூர்ப் படப்பிடிப்புத் திட்டம். மீதம் நான்கைந்து நாள்கள் சென்னைப் படப்பிடிப்புத் தளத்தில் ஒட்டுவேலைகளுக்கென்று செலவிடலாம். இவ்வளவுக்குத்தான் தயாரிப்பாளரால் இயலும். வெளியூர்ப் படப்பிடிப்பு கெட்டுப் போனதால் அந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கவே முடியாது. ஆனால், 'பேட்ச்வொர்க்' எனப்படுகின்ற பின்னொட்டுப் படப்பிடிப்பு நாள்களுக்குள்ளாகவே இராவும் பகலுமாய் அரங்கிற்குள்ளேயே படத்தை எடுத்து முடித்துக்கொடுத்திருக்கிறார் முத்துராமன். ஒரே நாளில் பத்துக் காட்சிகள் எடுத்தாராம். இரண்டாவது எடுப்புக்கே (டேக்) செல்லவில்லை. படம் குப்பையாக வந்துவிடுமோ என்று திரைக்கதை வசனம் எழுதிய பஞ்சு அருணாசலம் போன்றவர்களே அஞ்சியிருக்கிறார்கள். ஆனால், இறுதி வடிவத்தில் அந்தப் படத்தைப் பார்த்தவர்கள் அயர்ந்துபோய்விட்டார்கள். அவ்வளவு சிறப்பாக வந்திருந்தது. படமும் வெற்றி. ஓர் இயக்குநரின் இந்தத் திறமையும் உழைப்புமே தயாரிப்பாளர்களைக் காப்பாற்றும். சந்தை மதிப்புடைய கலைஞர்களை உருவாக்கும்.

    Special article on Director SP Muthuraman

    பிரியா திரைப்படத்திற்காகச் சிங்கப்பூர் சென்ற படப்பிடிப்புக் குழுவில் இரஜினிகாந்த், ஸ்ரீதேவி போன்றவர்களுக்குத்தான் விடுதியறைகள். மற்றவர்கள் தங்கிக்கொள்ள வாடகைக்கு வீடு எடுத்துக்கொள்ளப்பட்டதாம். "நான் விடுதியில் தங்கமாட்டேன், படப்பிடிப்புக் குழுவினருடனேயே தங்கிக்கொள்கிறேன்," என்று விடுதியறையை விடுவித்துக்கொண்டு வந்து சேர்ந்தவர் இரஜினிகாந்த். அரசு சார்ந்த இடங்களுக்கு மட்டும்தான் படப்பிடிப்புக் கட்டணமில்லை என்பதால் அத்தகைய இடங்களிலேயே படப்பிடிப்பு வைத்துக்கொள்ளப்பட்டதாம். வெளிநாட்டுப் படப்பிடிப்பு என்று பெருமையாகச் சென்றுவிட்டார்களே ஒழிய, ஒரே மகிழுந்தில் எழுவர் எண்மர் என்று புளிமூட்டையாய் அடைந்துகொண்டு படப்பிடிப்புப் பகுதிகளுக்குச் சென்றார்களாம். இத்தனைக்கும் அந்தப் படம் தமிழ், கன்னடம் என்று இரண்டு மொழிகளிலும் எடுக்கப்பட்டது. எண்ணி எண்ணிச் செலவிட்டு எடுத்தால்தான் ஒரு வணிகப் படத்தைக்கூட முடிக்க முடியும். அதற்கு முத்துராமனைப் போன்ற இயக்குநர்கள் வேண்டும்.

    Special article on Director SP Muthuraman

    ஓரிரண்டு படங்களை எடுத்த இளநிலை இயக்குநர்கள் என்னென்னவோ மிதமிஞ்சிப் பேசுகின்றார்கள். முத்துராமன் அதிர்ந்தோ கூடுதலாகப் பேசியோ எங்கும் பார்த்ததில்லை. இந்த அமைதி எங்கிருந்து வந்தது? அதுதான் அவர் வளர்ந்த இடம். ஏவிஎம் திரைப்படக் கூடத்தில் ஒரு படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர். திருலோகசந்தர் போன்றவர்களிடம் உதவியாளராக இருந்து படிப்படியாகக் கற்றவர். அவை அனைத்திற்கும் மேலாக எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி எண்ணற்ற பெருங்கலைஞர்களுடன் தம் திரைவாழ்க்கையில் ஒன்றாய்ப் பணியாற்றியவர். இரஜினிகாந்தின் இருபத்தைந்துக்கும் மேலான படங்களை இயக்கியமை. எல்லாமே வெற்றிப் படங்கள்.

    Special article on Director SP Muthuraman

    பாண்டியன் என்ற திரைப்படத்திற்குப் பின்னர் அவர் படங்கள் இயக்குவதைக் குறைத்துக்கொண்டார். அதற்குப் பிறகு தமிழ்நாட்டரசு கேட்டுக்கொண்டமைக்காகவே 'தொட்டில் குழந்தை' என்ற படத்தை இயக்கினார். அறுபதாம் அகவையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதைப்போன்றே தம் ஓய்வுக் காலத்தை அமைத்துக்கொண்டார். பாண்டியன் படப்பிடிப்பு நடந்தபோது அவருடைய துணைவியார் இறந்துபோய்விட, போவினைக்காக ஒரேயொருநாள் சென்று அவர்க்குரிய இறுதிக்கடமை ஆற்றிவிட்டு மறுநாள் படப்பிடிப்புக்கு வந்துவிட்டாராம். சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கையிலும் இவ்வாறே ஒரு துயரம் நேர்ந்தது. அவர் இங்கிலாந்தில் உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடிக்கொண்டிந்தபோது அவரை ஓர் ஆட்டக்காரராக ஆக்கியளித்த தந்தையார் இறந்துபோனார். அப்போது இந்திய அணி சச்சினின் மட்டைப் பங்களிப்பையே பெரிதும் நம்பியிருந்தது. ஆடிக்கொண்டிருப்பது உலககோப்பைப் போட்டி. தந்தையின் முகத்தைக் கடைசியாகப் பார்க்கவந்த தெண்டுல்கர் அடுத்த விமானத்திலேயே மீண்டும் இங்கிலாந்து திரும்பினார். அடுத்த போட்டியில் பங்கேற்று விளையாடினார். தொழிலதிபர் இந்துஜாவின் வாழ்க்கை வரலாற்று நூலிலும் இதுபோன்றே ஒரு நிகழ்வு வருகிறது. காலம் முழுவதும் தொழில் தொழில் என்று உலகம் சுற்றியவர் இனி என் ஒவ்வொரு நொடியும் என் மனைவிக்கே என்று முடிவெடுத்தபோது அவ்வம்மையார் இறந்துவிட்டார். தம் வாழ்நாள் முழுவதும் எதற்கும் நொடி நேரமில்லாமல் திரைப்படங்களே வாழ்க்கை என்று வாழ்ந்த முத்துராமனுக்கு மனைவி இழந்த துயரம் மனத்தைப் பிழிந்திருக்க வேண்டும். அது அவர் மனத்தைப் பெரிதும் வடுப்படுத்தியிருக்கலாம். அழுது மனந்தேற்றிக் கொள்வதற்குச் சிறுபொழுதில்லாத இது என்ன வாழ்க்கை என்று வெடிப்பான ஓர் அழுகையோ ஒரு துளிக்கண்ணீரோ அவரிடமிருந்து வெளிப்பட்டிருக்கலாம். அந்த நொடியில் அவர் தம் ஓய்வு முடிவை எடுத்திருக்க வேண்டும்.

    English summary
    A special article on director SP Muthuraman by Poet Magudeswaran
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X