»   »  உட்தா பஞ்சாப்… பறக்கும் பஞ்சாப்!

உட்தா பஞ்சாப்… பறக்கும் பஞ்சாப்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

- முருகன் மந்திரம்

திரைப்படம் என்பது ஒரு கலை வடிவம் மட்டுமல்ல.... அது ஒரு மகாசக்தி வாய்ந்த ஊடகம். என்பது தமிழ் சினிமாக்காரர்கள் பலருக்கு தலையில் ஒலக்கையால் அடித்துச் சொன்னாலும் வௌங்காது.

ஒரு திரைப்படம், பொழுதுபோக்கு என்பதைத்தாண்டி... அதன் தாக்கத்தை சமூகத்தின் மாற்றங்களுக்கு வழிகாட்ட முடியும்.

என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா என நம் தமிழ் சினிமாவின் முன் வேர்களின் வாசம்... இன்றும் வீசுகிறது என்றாலும்... இன்றைய தமிழ் சினிமா என்பது மெல்ல மெல்ல சொரணையற்றுப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை அடிக்கடி நினைவூட்டுகின்றன. வடக்கில் இருந்து வரும் இந்தித் திரைப்படங்கள்.

அப்படி ஒரு சமீபத்திய வரவு தான்.. உட்தா பஞ்சாப். உட்தா பஞ்சாப் என்றால்... 'பறக்கும் பஞ்சாப்' என்று பொருள் வருகிறது.

Special article on Udta Panjab

அதென்ன பறக்கும் பஞ்சாப்... ?

பஞ்சாப்பின் ஒரு பக்கமாக பாகிஸ்தான் இருப்பதாலும் இன்னபிற இந்தியக் காரணங்களாலும் பஞ்சாபில் போதை மருந்து விற்பனை கொடி கட்டிப் பறக்கிறதாகச் சொல்கிறார்கள்.

விற்பனை மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் போதை மருந்துக்கு அடிமையாகிறவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறதாம்.

அதனால் போதை மருந்து உபயோகத்தில் ஒட்டு மொத்த பஞ்சாப்பே பறக்கிறது என்ற அர்த்தப்படுத்திக்கொள்ளச் சொல்கிறது, இந்த உட்தா பஞ்சாப்.

அபிஷேக் சௌபே என்பவர் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம்... இந்த படம் தணிக்கைக்கு அனுப்பிய காப்பி வெளியானதும்... தணிக்கைத்துறையோடு மல்லுக் கட்டியதும் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

அதனால்... படத்திற்கு வருகிறேன். மிக சீரியஸான இன்றைய தேதியில் பஞ்சாப்பில் நிகழ்ந்து கொண்டிருக்கிற மிக மோசமான ஒரு சமூக சூழலை, அவலத்தை.. அதிரடியாகப் பேசுகிறது இந்த திரைப்படம்.

போதைக்கு அடிமையாகி கிடக்கும் பஞ்சாப் இளைஞர்கள்... அதற்கு மேலும் மேலும் விஷ நீரை ஊற்றும் பஞ்சாப் கொண்டாடும் பாடகர், டாமி சிங்.

ஒரு பக்கத்தில் போதை மருந்தை அழிப்போம் என்று டிவி மைக்குகளில் முன்னால் நாடகம், இன்னொரு பக்கத்தில் போதை மருந்து மெயின் உற்பத்தியாளர் என... இரட்டை வேஷம் போடும் ஒரு எம்.பி.(பாராளுமன்ற உறுப்பினர்), போதை அடிமைகளை மீட்க போராடும் ஒரு டாக்டர், வறுமையின் காரணமாக..... தன் முட்டாள் செயலால் போதை மருந்து சப்ளை கும்பலிடம் சிக்கி சின்னா பின்னமாகும் ஒரு இளம்பெண்... ஒரு சராசரி காவல்துறை அதிகாரி... இத்தனை முக்கிய கதாபாத்திரங்களோடு இந்தக் கதை... செய்யும் மாயாஜாலம் ஆச்சர்யம்.

சமூகத்திற்கு கருத்து சொல்கிற படம் என்றாலே... மிக எளிய மேக்கிங்.... பிரச்சார வாசம் வீசும் வசனங்கள்... வார்த்தைக்கு வார்த்தை அறிவுரை சொல்கிற காட்சிகள்... வேகமில்லாத திரைக்கதை.... சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்துவிட்டோமோ... என நினைக்க வைக்கிற இசை.

இப்படி எந்த கட்டத்திற்குள்ளும் சட்டத்திற்குள்ளும சிக்காமல் எகிற அடிக்கிறது உட்தா பஞ்சாப். உட்தா பஞ்சாப் மட்டுமல்லாது பல இந்திப்படங்களை உதாரணம் சொல்ல முடியும். சொல்கிறேன்.

சராசரி வணிகப் படங்களை விட மிக பிரமாதமான நேர்த்தியான திரைக்கதை. ஒளிப்பதிவு, இயக்கம்... ஆச்சர்யப்பட வைக்கிற இசை... அச்சு அசல் கதாபாத்திரங்களாக மாறி நிற்கும் நடிகர், நடிகையர் என சலாம் போட வைக்கிறது உட்தா பஞ்சாப்.

கரினா கபூர் சாந்தமும் மென்மையும் அன்பும் நிறைந்த சேவகி என்றால்... அதற்கு நேர் எதிராக.. வீராங்கனையாக அதிர வைக்கிற, அதிர்ச்சியூட்டுகிற... கதாபாத்திரத்தில் அலியா பட்...

இந்தித் திரைக் கதாநாயகிகள் அனைவருமே ராட்சசிகளாக இருக்கிறார்கள். நடிக்கிறார்கள். இங்கே நாம் முத்துன கத்திரிக்காயையும் அதை பெத்த மூத்த கத்திரிக்காயையும் ஒரே ஃப்ரேமில் காட்டி சினிமாவுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறோம்.

சாகித் கபூர், பாடகர் டாமி சிங்காக... போதையில் பிதற்றும்போது நிஜமாகவே நம்மை அதட்டுவது போலவே இருக்கிறது. இன்னொரு ஹீரோ டில்ஜித் டோசஞ் கரினா கபூருக்கு பொருத்தமான அமைதி இளவரசனாக அசத்துகிறார்.

பெனடிக்ட் டெய்லரின் பின்னணி இசையும் அமித் திரிவேதியின் பாடல்களின் இசையும்... போதை மருந்து போல ஒரு அதீத உணர்வை உடலிலும் உள்ளத்திலும் ஏற்படுத்துகிறது.

மிக நிஜமான சென்சிட்டிவான, நிகழ்கால நிகழ்வை, நிகழ்கால அரசியலோடு தொடர்புடைய மிக மோசமான சமூகப் பேரழிவை, மிக பொறுப்போடும் அதன் வணிகத்தரம் ஒரு சதவீதம் குறையாமலும் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.

இந்தியில் இதைப்போல நிறைய படங்கள் வருகின்றன... ஹைவே, பீகே (PK). பிக்கு(PIKU), பஜ்ரங்கி பைஜான், இப்படி சமூக தளத்தில் மிக அழுத்தமான கருத்தியல் சினிமா ஆகவும், வணிக தளத்தில்... அதை விட அழுத்தமான விளைவை உண்டாக்குகிற படங்களாவும் நிறைய படங்களை இந்தி சினிமாத் துறையினர் எடுக்கிறார்கள்.

இந்தி சினிமாவின் வணிகம் பெரிது... என்பதை ஒரு காரணமாக சொன்னாலும்... அதையும் தாண்டி இவ்வளவு நேர்த்தியாகவும் துணிச்சலாகவும் இந்தி சினிமாக்கள் போல தமிழ் சினிமா க்கள் வருவதில்லை.

ஒரு விசாரணை, ஒரு குற்றம் கடிதல், ஒரு கத்துக்குட்டி... ஒரு உறியடி.. ஒரு அப்பா... இப்படி சில படங்களே சமூகத்தோடு தொடர்புடைய விசயங்களை பேசுகின்றன.

ஆனால் இந்த சில தமிழ் திரைப்படங்கள் தவிர்த்து மேற்குறிப்பிட்டுள்ள இந்தி திரைப்படங்கள் போல, தமிழ் படங்கள் திடகாத்திரமாக துணிச்சலாக சமுக அவலங்களை பேசவில்லை.. அதோடு அந்த படங்கள் அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்படுகிற படங்களாக வசூலிலும் பட்டைய கிளப்புகிறது.

ஏன்... தமிழ் சினிமாவில் அது முடியவில்லை என கேள்வி எழுப்புவதோடு, ஏன் தமிழ் சினிமாக்க்கள் சமூகத்தை விட்டு, சமூக பொறுப்பில் இருந்து நழுவி விலகி தூரமாக ஓடுகின்றன என்று மீண்டும் ஒரு முறை நம்மை வன்மையாக கேட்கிறது, உட்தா பஞ்சாப்.

English summary
A Special article on Bollywood movie Udta Punjab.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil