ஸ்ரீகாந்த்-வந்தனா விவகாரம்;திரிஷாவிடம் விசாரணை?
ஸ்ரீகாந்த், வந்தனா விவகாரம் தொடர்பாக இருவருக்கும் நெருங்கிய தோழிகளான நடிகை திரிஷாவிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
ஸ்ரீகாந்த், வந்தனா விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீகாந்த் கட்டிய தாலியுடன், அவரது வீட்டுக்குள் அதிரடியாகப் புகுந்து கொண்டுள்ள வந்தனா, கடந்த 5 நாட்களாக வீட்டுக்குள் இருந்தபடியே போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.ஸ்ரீகாந்த்தான் எனது கணவர், அவர் என்னுடன் வந்து குடித்தனம் நடத்தும் வரை போராட்டத்தை விடப் போவதில்லை. எனக்கு நியாயம் கிடைக்கும் வரை ஸ்ரீகாந்த் வீட்டை விட்டுப் போகப் போவதில்லை என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார் வந்தனா.
ஆனால், வந்தனாவுடன் சேர்ந்து வாழ மாட்டேன், சட்டப்பூர்வமாக அவரிடமிருந்து பிரிய நடவடிக்கை எடுப்பேன் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பாகியுள்ளது.
இந்த நிலையில், நடிகை திரிஷாவிடம் ஸ்ரீகாந்த்-வந்தனா விவகாரம் குறித்து விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். திரிஷாதான் தன்னை ஸ்ரீகாந்த்துக்கு அறிமுகம் செய்து வைத்தார் என்று வந்தனா போலீஸாரிடம் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து திரிஷாவிடம் விசாரணை நடத்தினால் ஸ்ரீகாந்த்-வந்தனா திருமணம் குறித்து ஏதேனும் முக்கியத் தகவல் கிடைக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். திரிஷாவிடம் எப்போது விசாரணை நடத்தப்படும் என்று தெரியவில்லை. ஆனாலும் ஓரிரு நாட்களில் இந்த விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.
ஸ்ரீகாந்த் வழக்குப் போட்டால் பதில் வழக்கு-வந்தனா
இதற்கிடையே, விவாகரத்து கோரி நடிகர் ஸ்ரீகாந்த் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தால், அதை எதிர்த்து வந்தனா தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்படும் என்று வந்தனாவின் வழக்கறிஞர் ஜெயராணி கூறியுள்ளார்.
வந்தனாவுடன் தனக்கு திருமணம் ஆகி விட்டதை ஸ்ரீகாந்த் ஒத்துக் கொண்டுள்ளார். மேலும், வந்தனாவுடன் சேர்ந்து வாழ மாட்டேன், அவரிடமிருந்து பிரிய சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஸ்ரீகாந்த் வழக்கு தொடர்ந்தால் பதில் வழக்கு போடுவோம் என்று வந்தனா தரப்பு கூறியுள்ளது. இதுகுறித்து வந்தனாவின் வழக்கறிஞர் ஜெயராணி கூறுகையில், ஸ்ரீகாந்த் மீது வந்தனா மிகுந்த பிரியத்துடனும், பாசத்துடனும் இருக்கிறார். சேர்ந்து வாழ விரும்புகிறார்.
பல முறை ஸ்ரீகாந்த்தை சந்தித்து சமரசத்திற்கு முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை. பிரிவதில்தான் அவர் மும்முரமாக இருக்கிறார். இதனால்தான் வேறு வழியில்லாமல், அவரது வீட்டிற்கு வந்தனா வர நேரிட்டது.
ஸ்ரீகாந்த் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தால், நாங்களும் பதில் மனு தாக்கல் செய்வோம் என்றார் ஜெயராணி.
இதற்கிடையே, கல்யாணமாகி குறைந்தது 6 மாதங்கள் ஆனால்தான் விவகாரத்து கோர முடியும் என்று சட்ட விதி கூறுகிறதாம். எனவே ஸ்ரீகாந்த்துக்கு விவாகரத்து கிடைக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது.


Click it and Unblock the Notifications











