சூப்பர் குட் பிலிம்ஸின் ரீ என்ட்ரி.. தமிழில் தரமான படங்கள் தொடர்ந்து வரப்போவதற்கான அறிகுறி
சென்னை: கோலிவுட்டில் பாரம்பரியமான தயாரிப்பு நிறுவனங்கள் பல இருக்கின்றன. அவற்றில் முக்கியமானதுதான் ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸும் ஒன்று. ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கும் அந்த நிறுவனம் கடந்த சில வருடங்களாக தமிழில் படங்கள் தயாரிக்காமல் இருந்தது. இப்போது மீண்டும் தமிழில் படங்கள் தயாரிக்க ஆரம்பித்திருப்பதால் திரைத்துறையினரும், ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவை விடவும் மலையாளம் உள்ளிட்ட மற்ற மொழி சினிமாக்கள் சமீபமாக தரத்தில் உயர்ந்தவையாக வருகின்றன என்பது பெரும்பாலானோரின் கருத்து. ஆனால் ஒருகாலத்தில் தமிழிலிருந்து ஏராளமான படங்கள் ரீமேக் செய்யப்பட்டிருக்கின்றன. அப்படங்கள் எல்லாம் அந்தந்த மொழி ஹீரோக்களை காப்பாற்றியிருகின்றன. அந்த அளவுக்கு தரமான படங்கள் வந்ததற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று தயாரிப்பு நிறுவனங்கள்.
இப்போதைய நிலைமை: ஆனால் கோலிவுட்டில் இப்போது அப்படிப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் குறைந்துவிட்டன. வருடத்துக்கு ஒரு ஃபீல் குட் படமோ அல்லது குடும்பங்கள் கொண்டாடும் படமோ வருவதே பெரிய விஷயமாக மாறியிருக்கிறது. துப்பாக்கி சத்தங்கள், ரத்தங்கள், கடத்தல்கள், கொலைகள், பெரிய பட்ஜெட் மட்டும்தான் என தமிழ் சினிமா தடம் மாறி சென்றுகொண்டிருப்பதாக திரை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துவருகிறார்கள்.
கார்ப்பரேட் நிறுவனங்கள்: முக்கியமாக இப்போதைக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் பெரும்பாலும் கார்ப்பரெட் மைண்ட் செட்டிலேயே இருக்கின்றன. நிறைய பணம் போட வேண்டும்; அதைவிட நிறைய பணம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அப்படி கவனம் செலுத்தும் அந்த நிறுவனங்கள் கதையிலோ, மேக்கிங்கிலோ எந்த அக்கறையையும் காட்டுவதில்லை என்ற கருத்துக்களும் பலமாக எழுந்திருக்கின்றன.

சூப்பர் குட் பிலிம்ஸ்:ஆனால் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் அப்படி இல்லை. ஆர்.பி.சௌத்ரி தொடங்கிய அந்த நிறுவனம் புது வசந்தம் படத்தை முதலில் தயாரித்தது. அந்தப் படமே சூப்பர் டூப்பர் ஹிட். முக்கியமாக அது அனைவராலும் ரசிக்கப்படும் படமாக மாறியது. தொட்ர்ந்து அந்த நிறுவனம் புரியாத புதிர், சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களை தயாரித்து தனக்கென தனி மரியாதையையும், பெயரையும், பாரம்பரியத்தையும் பெற்றது அந்த நிறுவனம்.
அத்தனையும் தரம்தான்: 90களில் அந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்றாலே படம் ஹிட்தான் என்ற நிலைமை இருந்தது. அந்நிறுவனம் தயாரித்த துள்ளாத மனமும் துள்ளும், பூவே உனக்காக, சூர்யவம்சம், ஆனந்தம், சமுத்திரம், ஷாஜஹான் என தயாரித்த படங்கள் அனைத்துமே காலங்கடந்து கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அப்படி வெற்றி படங்களி சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தொடர்ந்து தந்ததற்கு காரணமே ஆர்.பி.சௌத்ரிக்கு இருந்த கதை அறிவும், வேகமாகவும், தெளிவாகவும் திட்டமிடும் குணமும்தான் என அவரை புகழாதவர்களே கோலிவுட்டில் இல்லை.
சூப்பர் குட் பிலிம்ஸின் ரீ என்ட்ரி: பாரம்பரியமிக்க அந்த நிறுவனம் கடந்த சில வருடங்களாக தமிழில் படங்கள் தயாரிக்கவில்லை. இப்போது மீண்டும் காலடி எடுத்து வைத்திருக்கிறது. அதன்படி இப்போது வடிவேலு - ஃபகத் பாசிலை வைத்து மாரீசன் படத்தை தயாரித்திருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. அதனைப் பார்த்ததுமே தெரிந்துவிட்டது கண்டிப்பாக இப்படம் ஒரு ஃபீல் குட் படமாக இருக்கும் என்று. இந்தப் படம் மட்டுமின்றி விஷாலை வைத்து ரவி அரசு இயக்கும் படத்தையும் தயாரிக்கிறது சூப்பர் குட் பிலிம்ஸ்.
அதற்கான அறிகுறியா?: தமிழ் சினிமாவில் சமீபகாலமாகத்தான் டூரிஸ்ட் ஃபேமிலி, 3 BHK போன்ற ஃபீல் குட் படங்கள் மீண்டும் வரிசையாக வர ஆரம்பித்திருக்கின்றன. இப்போது சூப்பர் குட் பிலிம்ஸும் ரீ என்ட்ரி கொடுத்திருப்பதன் மூலம் கோலிவுட்டில் இனி பழைய பொற்காலம் தென்படுவதற்கான அறிகுறி தெரிய ஆரம்பித்திருப்பதாகவே கருதப்படுகிறது. முக்கியமாக அந்த நிறுவனம் ஏராளமான இயக்குநர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. எனவே இப்போது மீண்டும் வந்திருப்பதால் திறமை வாய்ந்த இயக்குநர்கள் அந்த நிறுவனத்தால் கோடம்பாக்கத்தில் உலா வரப்போகிறார்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஆகமொத்தம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரை தவிர்த்துவிட்டு தமிழ் சினிமா வரலாற்றை எழுத முடியாது என்பதுதான் உண்மை. மீண்டும் வந்ததற்கு வாழ்த்துகள்..


Click it and Unblock the Notifications











