மறுபடியும் தபு, அப்பாஸ்
தமிழில், கொஞ்ச காலத்திற்கு முன்பு காணாமல் போன அப்பாஸும், ரொம்ப காலத்திற்கு முன்பே காணாமல் போய் விட்ட தபுவும் மீண்டும் ஜோடி சேருகிறார்கள். ஆனால் இம்முறை இருவரும் ஜாலியாக லாலி பாடப் போவது தெலுங்கில்.
ஒரு காலத்தில் தமிழில் 'சாக்லேட்' பாயாக இருந்தவர் அப்பாஸ். பிறகு வந்த மாதவன் அந்த சாக்லேட்டைத் 'திருடிக்' கொண்டதால், பொலிவிழந்தார் அப்பாஸ். மாதவனிடமும் இப்போது அந்த சாக்லேட் இல்லை. நிறையப் பேர் வந்து அதைப் பறித்துப் பிய்த்து மேய்ந்து விட்டனர்!
இருந்தாலும் அவ்வப்போது சில படங்களில் தலை காட்டிக் கொண்டுதான் இருக்கிறார் அப்பாஸ். திருட்டுப்பயலே படத்தில் வித்தியாசமாக வந்து போனார். தமிழ் தன்னைக் கைவிட்டாலும் கூட மற்ற ஹீரோக்களைப் போல இல்லாமல் கிடைக்கும் வேடங்களில் நடித்துக் கொண்டுதானிருக்கிறார் அப்பாஸ்.
தற்போது பிரசன்னாவுடன் சாது மிரண்டால் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அப்பாஸ். அது மட்டுமே அப்பாஸ் கையில் உள்ள படமாம். இதில் ஹீரோயினாக நடிப்பவர் காவ்யா மாதவன்.
காதல் தேசம் படம்தான் அப்பாஸுக்கு முதல் படம். அதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தபு. அதே தபுவும், அப்பாஸும் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்திலும் நடித்தனர். ஆனால் ஜோடியாக நடிக்கவில்லை.
அப்பாஸை விட அதி வேகமாக தமிழிலிருந்து விரட்டப்பட்டவர் தபு. இந்த இரண்டு பேரும் இப்போது மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். தெலுங்கில் தயாராகும் இப்படத்தை சந்திர சித்தார்த்தா இயக்கவுள்ளார்.
இதில் அப்பாஸுக்கு பத்திரிக்கையாளர் வேடமாம். தபு அவரது மனைவியாக நடிக்கிறார். இந்தப் படம் தனக்கு பிரேக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில், அப்பாஸ் உள்ளார். கிடைத்தால் சந்தோஷம்தான்.


Click it and Unblock the Notifications











