நடிகரின் கண்ணீர் கதை:கடைசி வரை நினைவு திரும்பல.. கோமாவில் பிரிந்த உயிர்..ரவிச்சந்திரனின் கண்ணீர் கதை
சென்னை: தமிழ் சினிமாவில் திறமையால் வளர்ந்த பல நடிகர் உண்டு. ஆனால், அதிர்ஷ்டத்தால் உள்ளே நுழைந்த நடிகர் யார் என்றால் அது நடிகர் ரவிச்சந்திரன் தான். தமிழ் சினிமாவில் 1960 மற்றும் 70களில் கதாநாயகனாகவும். அதற்கு பின், குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தது மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனராகவும் பல படத்தை இயக்கிய ரவிச்சந்திரன், உடல் நலம் பாதிக்கப்பட்டு கோமாவில் வீழ்ந்த கதையை இந்த செய்தியில் பார்க்கலாம்.
திருச்சியைச் சேர்ந்த நடிகர் ரவிச்சந்திரனின் சொந்த ஊர் கரூர் அருகே உள்ள வாங்கல் கிராமம். இவரின் இயற்பெயர் ராமன். ரவிச்சந்திரனின் தந்தை பைரோஜி சீனிவாசன் மலேசியாவில் தமிழ் நேசன் என்ற பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார். இதனால், கோலாம்பூரில் பள்ளிப்படிப்பை முடித்த இவர். மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு இந்தியா வந்தார். பின் திருச்சி புனித ஜோசப் கல்லூரியின் பட்டப்படிப்பை முடித்துவிட்டு சென்னையில் மருத்துவ படிப்பு படிக்க வந்தபோது இயக்குனர் ஸ்ரீதரின் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து 1964ஆம் ஆண்டு காதலிக்க நேரமில்லை படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். இந்த படத்திற்கு ஆடிஷன் நடந்த போது, அதில், நடிகர் சிவகுமாரும் வந்திருந்தார். ஆனால், இதில் தேர்வானது ரவிச்சந்திரன் தான்.

நடிகர் ரவிச்சந்திரன்: காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான ரவிச்சந்திரன், இதயக்கமலம், குமரிப்பெண், அதே கண்கள், கௌரி கல்யாணம், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, புகுந்த வீடு, ஊமை விழிகள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். நடிகர் மைக் மோகன் 80 கால கட்டத்தில் எப்படி வெள்ளி விழா நாயகன் என்று மக்கள் கொண்டாடினார்களோ, அதற்கு முன் வெள்ளிவிழா கதாநாயகன் என்று அழைக்கப்பட்டவர் நடிகர் ரவிச்சந்திரன் தான். வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், ஊமை விழிகள் படத்தில் இவருடைய வில்லன் கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது. இவர் நடிகராக மட்டுமில்லாமல் ஆடு புலி, மானசீக காதல், மந்திரம் என ஏழு திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
கோமாவில் உயிரிழந்தார்: 71 வயதான ரவிச்சந்திரனுக்கு நீண்ட காலமாக சர்க்கரை நோய் இருந்ததால், இவரின் சிறுநீரக பாதிக்கப்பட்டு, பத்து நாளுக்கு ஒரு முறை டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நுரையீரலில் நீர் கோர்ப்பு மற்றும் மூச்சு திணறால் மிகவும் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டார். அதனை தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ரவிச்சந்திரன், கோமாவிற்கு சென்று கடைசி வரை நினைவு திரும்பாமலே இறந்தும் போனார். காதலிக்க நேரமில்லை படத்துக்கு பின் நிற்க நேரமில்லாமல் பிசியான நாயகனின் வாழ்க்கை 2011 ஆம் ஆண்டு அஸ்தமித்துப்போனது
ரவிச்சந்திரனின் பேத்தி: நடிகர் ரவிச்சந்திரன் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஷீலாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களின் திருமண வாழ்க்கை பாதியிலேயே முடிந்து போனது. இதையடுத்து, விமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடன் பல வருடங்கள் வாழ்ந்தார். ரவிச்சந்திரன்,விமலா தம்பதிக்கு பாலாஜி, ஹம்சவர்தன் என்ற இரு மகன்களும் லாவன்யா என்ற மகளும் உள்ளார். ரவிச்சந்திரன் பேத்தி தான் தான்யா ரவிச்சந்திரன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கருப்பன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தான்யா ரவிச்சந்திரன் தமிழில் அறிமுகமான படம் இயக்குனர் சசிகுமார் நடிப்பில் 2016 இல் வெளியான பலே வெள்ளையத்தேவா என்ற படத்தில் தான். அந்த படத்துக்கு பின்னர் இயக்குனர் ராதா மோகன் இயக்கிய பிருந்தாவனம் என்ற படத்தில் நடித்திருந்தார். இவருடைய உண்மையான பெயர் அபிராமி சீதா இவர் மிஸ்கின் இயக்க இருந்த ஒரு படத்தின் நடிக்க ஒப்பந்தமாகிய போது மிஸ்கின் தான் தான்யா என்ற பெயரை வைத்துள்ளார். ஆனால், அந்த படம் கைவிடப்பட்டது. ரவிச்சந்திரனுக்கு அடித்த அதிஷ்டம் தன்யாவிற்கு கை கொடுக்கவில்லை.


Click it and Unblock the Notifications











