அப்பனும், ஆத்தாளும் மற்றும் பாரதிராஜாவும்!

அப்படிப்பட்ட பாரதிராஜா, அப்பேர்ப்பட்ட படங்களைக் கொடுத்து ரொம்ப காலமாகி விட்டது. எப்பேர்ப்பட்ட படங்கள் அவை என்ற பிரமிப்பு இன்னும் நீங்காமல் இருக்கும் நிலையில் இடையில் அவர் ஆடிய 'பொம்மலாட்ட'மும், 'கண்களால் கைது செய்'த விதமும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் இப்போது மீண்டும் தனது மண்ணுக்கு பரிவாரங்களுடன் தடபுடலாக கிளம்பியுள்ளார் பாரதிராஜா.
பண்ணைப்புரத்து பாண்டவர்களில் ஒருவரான இளையராஜா இல்லாத நிலையில், புரவி வேகத்திலான புதுமை இசைக்குச் சொந்தக்காரரான ஹாரிஸ் ஜெயராஜுடன் இசைத் துணையுடன் வித்தியாசமான வாகனத்தில் தனது கிராமத்து தேடலில் இறங்கியுள்ள பாரதிராஜா, தனது புதிய படைப்புக்கு அப்பனும் ஆத்தாளும் என்று அருமையான பெயரை வைத்துள்ளார்.
அப்பன், ஆத்தா என்ற வார்த்தையை இன்றுள்ள 'குட்டீஸ்'களிடம் போ்ய்ச் சொன்னால், அங்கிள், அப்படீன்னா என்ன என்று கேட்பார்கள் மலங்க மலங்க விழித்தபடி. காரணம், அப்பனை டாடியாக்கி, ஆத்தாளை மம்மியாக்கி, தமிழ் மீது 'அம்மி'யை வைத்து நசுக்கி விட்டாயிற்றே!.
அப்படிப்பட்ட இந்தக் காலத்தில் சுத்தமான தமிழ் மண்ணின் மணத்தோடு தனது அப்பனும், ஆத்தாளும் படத்தை இயக்கப் போகிறார் பாரதிராஜா. அத்தோடு நில்லாமல் படத்தில் முக்கிய வேடத்தையும் ஏற்கப் போகிறார். அவரது இரு மகன்களாக நடிக்கப் போவது அவரது சினிமா உலக வாரிசுகளான அமீரும், சீமானும்.
இதுவரை இப்படி ஒரு மண் வாசனைப் படம் வந்ததே இல்லை, 'முதல் மரியாதை' கூட இதற்குப் பின்னால்தான் என்று கூறும் அளவுக்கு அசத்தலாக உருவாகப் போகிறதாம், உலகத் தரத்துடன். ஜனவரியில் இப்படத்தை தொடங்கும் பாரதிராஜா, இந்தப் படத்தை முடித்த பின்னர் தனது நீண்ட கால கனவுப் படமான குற்றப் பரம்பரையைக் கையில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
வாங்க ராசா, 'கவுச்சி'ப் படமா பார்த்து கண்ணெல்லாம் நொந்து போச்சு, நல்ல விருந்தா கொடுங்க, ரசிச்சுட்டுப் போறோம்!


Click it and Unblock the Notifications











