twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'தமிழன் நார்வேயிலிருந்தாலும் ரசனையும் விருந்தோம்பலும் மாறுவதேயில்லை!'

    By Staff
    |

    Sasikumar
    தமிழ் சினிமாவில் நான்கு படைப்பாளிகளை ஒன்றாகச் சேர்த்துப் பார்ப்பதே அபூர்வமாகிவிட்டது. ஆனால் அந்த அபூர்வத்தை சாத்தியமாக்கியது நார்வே திரைப்பட விழா என்றால் மிகையல்ல.

    சசிகுமார், எஸ் பி ஜனநாதன், மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனி ஆகிய நால்வரையும் ஒரு 'தம்"மை பற்ற வைத்து நால்வரும் மாற்றி மாற்றி இழுக்கும் அளவுக்கு நெருக்கமாக்கியிருக்கிறது.

    நார்வே நாட்டில் வசிக்கும் வசீகரன் சிவலிங்கம் எனும் தமிழ் சினிமா ஆர்வலர், தனது வசீகரன் இசைக்கனவுகள் (VN MUSIC DREAMS) எனும் நிறுவனம் சார்பில் தன்னந்தனியாக தமிழ்ப் படங்களுக்கென்றே ஏற்பாடு செய்ய திரைத் திருவிழா அது.

    முதல் முறை நடந்த விழா என்றாலும், எடுத்த எடுப்பிலேயே பெரும் வெற்றியையும் சர்வதேச பார்வையையும் பெற்றுவிட்டது அந்த விழா.
    இந்த விழா பற்றிய செய்திகளை ஏற்கெனவே தந்துள்ளோம்.

    விழாவுக்கு இங்கிருந்து முதல்முறையாக நார்வே சென்றனர் மேற்சொன்ன நான்கு இயக்குநர்களும். அங்கு அவர்கள் பெற்ற அனுபவங்களை சென்னையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பகிர்ந்து கொண்டார்கள்.

    சசிகுமார், எஸ் பி ஜனநாதன், மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனி ஆகிய நால்வரின் படங்களுமே இந்த விழாவில் விருதுகளை அள்ளின என்பது முக்கியமான தகவல்.

    குறிப்பாக மிஷ்கினின் நந்தலாலாவுக்குதான் அதிக மக்களின் வாக்குகளுடன் மக்கள் தெரிவு விருது கிடைத்துள்ளது. இந்தப் படம் முதல்முறையாக திரையைத் தொட்டது நார்வே திரைவிழாவில்தான்.

    சுப்பிரமணியபுரம், பசங்க, நாடோடிகள் என சசிகுமாரின் மூன்று படங்களுமே விருதுகளை வென்றுள்ளன. பேராண்மைக்கு மேன்மை நிலை விருது (Appreciation award) கிடைத்துள்ளது.

    திரைப்பட விழா குறித்து சமுத்திரக்கனி மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்:

    "வசீகரன்னு ஒரு அற்புதமான மனிதனின் முயற்சிதான் இந்த வெற்றிக்கு காரணம். நார்வேயை நான் வரைபடத்தில் பார்த்ததுதான். அங்கே போய் இறங்கினால் நம்ம ஊர்ல இருக்கிற மாதிரி உணர்வு. அத்தனை சொந்தங்கள் எங்களைச் சுற்றி. தமிழர் உணர்வு எந்த ஊரிலிருந்தாலும் மாறல. அவங்க பாசமும் மாறலை. தமிழ் படங்களுக்கு நம்ம மக்கள் கொடுத்த வரவேற்பு எங்களை நெகிழ வைத்தது", என்றார்.

    எதுக்காக இவ்வளவு செலவு செய்து எங்களை வரவழைத்து இந்த விழா எடுக்கறீங்க என்று வசீகரனிடம் கேட்டாராம் சமுத்திரக் கனி.

    அதற்கு அவர், “தெரியலண்ணா… எனக்கு ஒரு ஆர்வம். அத்தோட, இங்குள்ள எங்க தமிழ் இளைஞர்கள் உங்களைப் போன்ற படைப்பாளிகளைப் பார்த்து மேலே வர விரும்பறாங்க. மண்ணையும் மக்களையும் இழந்துட்டு நின்னாலும், தங்கள் சோகங்களை கலைவடிவமா மாத்த துடிக்கிற அவங்களுக்கு என்னாலான உதவி இது..." என்று கூற, கண் கலங்கி நின்றாராம் சமுத்திரக்கனி.

    ஆங்கிலம் தெரியாதவன் நான்...

    எஸ்.பி.ஜனநாதன் கூட முதலில் இந்த விழாவுக்கு போக தயங்கினாராம். அதற்கான காரணத்தை அவரே சொன்னார். எனக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால் என்னுடன் வருகிறவர்கள் நண்பர்களாகவும், ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். நான் இதற்கு முன்பு இவர்களுடன் அதிகம் பழகியதில்லை. ஆனால் என் தம்பிகளுடன் போயிருந்த உணர்வு என்றார்.

    இந்த திரைப்பட விழாவில் ஜனநாதனை அதிகம் கவர்ந்த படம் 1999 என்ற திரைப்படம். முழுக்க முழுக்க கனடாவில் எடுக்கப்பட்ட படம்தான் இது. புலம் பெயர்ந்த தமிழர்களின் கஷ்டத்தை சொல்கிற படமாம் இது.

    நீயும் என்னோட மகன்தான்...

    மிஷ்கினின் அனுபவம் வேறு மாதிரியானது. மற்ற இயக்குனர்கள் சென்னைக்கு திரும்பிய போதும், இவர் மட்டும் மேலும் மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்துவிட்டுதான் திரும்பினார். "வசீகரனின் அப்பா சிவலிங்கம் என்னை அழைத்துக் கொண்டு நார்வேயில் இருக்கும் புகழ்பெற்ற மியூசியத்திற்கு அழைத்துச் சென்றார். நீயும் என்னோட மகன்தான் என்று அவர் சொன்னது என்னை சந்தோஷப்பட வைத்தது" என்றார்.

    இவருடைய 'நந்தலாலா" படத்திற்கு சிறந்த மக்கள் தேர்வு பட விருது கிடைத்திருக்கிறது.

    வெஜ்ஜா...நான் வெஜ்ஜா...

    இயக்குநர் சசிகுமார் கூறுகையில், "படப்பிடிப்பு இருந்ததால் எனக்கு நார்வே போகிற ஐடியாவே இல்லை. ஆனால் அங்கிருந்து என்னை தொடர்பு கொண்ட வசீகரன், 'அண்ணா. நீங்க அவசியம் வரணும்" என்று வற்புறுத்தினார். குறிப்பா, அவர் கேட்ட முதல் கேள்விதான் என்னை அங்கு போக வைத்தது. 'உங்களுக்கு நான் வெஜ்ஜா? வெஜ்ஜா' என்று கேட்டார். விருந்தோம்பலில் தமிழன் உலகம் முழுக்க ஒரே மாதிரிதான் இருக்கிறான் என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.

    எனக்கு வெளிநாட்டில் இருக்கிறோம் என்ற உணர்வே வரவில்லை. பிளைட்டில் இறங்கிய நிமிடம் முதல், இங்கு புறப்பட்டு வருகிற வரை என்னை சுற்றி தமிழர்கள்தான் இருந்தார்கள்.

    இந்த விழாவில் வழங்கப்பட்ட விருதுகள் முழுக்க மக்கள் அளித்த வாக்கின் அடிப்படையில் வழங்கப்பட்டவை. அதனால் வசீகரன், 'அண்ணே, யாருக்கு விருது கிடைக்கும்னு தெரியாது. உங்களுக்கு கிடைக்காம போனாலும் நீங்க பொறுத்துக்கணும்" என்றார். அந்த நேர்மை எங்கும் பார்க்க முடியாதது.

    நான் அவரிடம், "இங்கு யார் விருது பெற்றாலும் எனக்கு சந்தோஷம். எல்லாருமே என்னோட சகோதரர்கள்தான். எனக்கு வருத்தமெல்லாம் வராது" என்று சொன்னேன். ஆனால் என் படங்களுக்கு மூன்று விருதுகளை வழங்கினார்கள் நார்வே வாழ் தமிழ் மக்கள்…" என்றார் உணர்வுப்பூர்வமாக.

    இந்த விழாவில் நார்வே மக்களும் பங்கேற்றனராம். இன்னொன்று, நமது தமிழ்ப்படங்களை நார்வே, சுவீடிஷ், டச்சு மொழிகளில் டப் செய்து பார்க்க விரும்புகிறார்களாம் அவர்கள்.

    'இதுதான் நார்வே தமிழ் திரைப்பட விழாவுக்கு கிடைத்த வெற்றி' என்று பெருமையுடன் சொன்னார்கள் நான்கு இயக்குநர்களும் ஒரே குரலில்.

    இந்த விழாவுக்கு பெரும் உதவியாக இருந்தவர் இசையமைப்பாளர் விஎஸ் உதயா. அவருக்கும், நிகழ்ச்சிக்கு சென்னையிலிருந்து ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்ட தயாரிப்பாளர் ஜி தனஞ்செயனுக்கும் மறக்காமல் நன்றி சொன்னார்கள்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X