twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘குருதி வலி…’ தமிழர் படும் அவலத்தின் பதிவு!

    |

    Kuruthi Vali
    ஈழத்தில் தமிழ் மக்கள் படும் அவலங்கள், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை மையமாக வைத்து நார்வேயில் வசிக்கும் தமிழர், கவிஞர் வசீகரன் எழுதியுள்ள பாடல்கள், பிரபல இசையமைப்பாளர் விஎஸ் உதயாவின் இசையில் குருதி வலி எனும் இறுவட்டு (சிடி) வடிவில் வெளியாகிறது.

    இந்தத் தொகுப்பில் உள்ள பாடல்கள், தமிழ் ஈழத்தில் நடந்த கடந்த 33 ஆண்டு கால போராட்டத்தில் இதுவரை தமிழருக்கு எதிராக நடந்த கொடுமைகளை உலகுக்கு பறைசாற்றும் வலி மிகுந்து வரிகளாக அமைந்துள்ளன.

    'இதைக் கேட்கும் ஒவ்வொரு தமிழனும், தங்கள் இனத்துக்கு நேர்ந்துள்ள அவலங்களை நினைத்து நிச்சயம் கண்ணீர் வடிப்பார்கள் என்பது மட்டும் உறுதி…" என்கிறார் வி எஸ் உதயா.

    இவர்தான் இந்தப் பாடல்களுக்கு மெட்டுக்களை உருவாக்கி இசையமைத்தவர். உணர்வுப்பூர்வமான இசை.

    இந்த இசைத் தொகுப்பு வெளியீடு குறித்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய உதயா, "வன்னியில் போர் நடந்த காலத்தில் ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள், புகைப்படங்களைப் பார்த்து மனம் பதறும்.

    இரவுகளில் பக்கத்தில் படுத்திருக்கும் என் பையனின் தலையைத் தடவிப் பார்த்துக் கொள்வேன். ஆனால் அங்கே 75 ஆயிரம் குழந்தைகளுக்கு தாய் தகப்பனில்லை... ஆதரவென்று யாருமில்லை. அந்த சோகத்தின் உந்துதல்தான் இந்தப் பாடல்களில் எதிரொலிக்கும். சக தமிழன் துன்பப்படுவதைப் பார்த்து கண்ணீர் சிந்த ஈழத்தில்தான் பிறந்திருக்க வேண்டும் என்பதில்லை..." என்றார் நெகிழ்ச்சியான குரலில்.

    காதல் கடிதம், பீஷ்மர், தயாரிப்பிலிருக்கும் உப்பு மூட்டை போன்ற படங்களுக்கு தரமான இசை தந்தவர் விஎஸ் உதயா. இவரும் வசீகரனும் இணைந்து உருவாக்கிய காதல் பாடல்கள் ஆல்பங்களுக்கு சர்வதேச அளவில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

    இந்த இசைத் தொகுப்பில் உள்ள 'வட்டுக்கோட்டை தீர்மானம்…" பாடலைக் கேட்ட ஒவ்வொரு தமிழ் உணர்வாளரும், தமிழர் வரலாற்றில் இது மிக மிக முக்கியமான பதிவு என்று பாராட்டினார்களாம்.

    'களத்திலும் அகதியாய்… புலத்திலும் அகதியாய்…" என்ற பாடலையும் அதன் ஜீவன் ததும்பும் மெட்டையும் கேட்ட போது மனதை அறுத்தது அந்த பாடலில் தெரிந்த வலியும் நிஜமும்.

    பாடல்களை பிரபல பாடகர்கள் கிருஷ்ணராஜ், மது பாலகிருஷ்ணன், நித்யஸ்ரீ மகாதேவன் உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.

    இசையமைப்பாளர் விஎஸ் உதயா 'சொந்த மண்ணில் குடியிருக்க வழியில்லையோ…" என்ற பாடலைப் பாடியுள்ளார். சொந்த மண்ணைப் பிரிந்து வாழும் ஒரு ஈழத் தமிழரின் குரலாக இதைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

    பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒன்ஸ்மோர் கேட்ட பாடல் இது.

    பாடலில் வரும்,

    என் வீட்டில் இழவென்றால் ஊருக்குச் சொல்வேன்
    ஊர்முழுதும் இழவென்றால் யாருக்குச் சொல்வேன்
    வந்தவனும் போட்டவனும் நல்லாதானே இருக்கான்
    என்சனத்தை அழிச்சு முடிச்சவனும் நல்லாதானே இருக்கான்
    உளவு சொல்லி திரிஞ்சவனும் நல்லாதானே இருக்கான் -அதை
    வேடிக்கை பார்த்து ரசிச்சவனும் நல்லாதானே இருக்கான்…

    - என்ற வரிகளில் ஈழப் போராட்டத்தின் சரித்திரத்தையே அடக்கிவிட்டிருந்தார் வசீகரன்.

    இந்த இறுவட்டு முயற்சி குறித்து, வசீகரன் கூறியதாவது:

    “உலகின் மிகத் தொன்மையான இனம் என்று பெருமை பொங்கப் பேசப்படுகிறது தமிழினம் இன்று எந்த அளவு அவலங்களைச் சந்தித்துள்ளது என்ற உணர்வைத்தான் இந்த பாடல் தொகுப்பில் சொல்லியிருக்கிறோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழன் என்ற முறையில் இந்த இனத்துக்காக நான் செய்துள்ள கடமையாக இதைப் பார்க்கிறேன்.

    இந்த 33 ஆண்டுகால நெடிய போராட்டத்தில் எமது இனம் சந்தித்துள்ள சோகம், அதன் உச்சகட்டமாய் மே 17-ல் முள்ளி வாய்க்காலில் நடந்த மனிதப் பேரவலம் போன்றவற்றை மூடி மறைக்கும் முயற்சி இன்று நடக்கிறது. இதையெல்லாம் பார்த்து மனம் உடைந்து போயிருக்கும் எமது மக்களின் மனங்களை ஆறுதல்படுத்தும் முயற்சிதான் இந்த குருதி வலி பாடல் தொகுப்பு.

    'என்னதான் தமிழன் புலம் பெயர் தேசங்களில் வசதியாய் வாழ்ந்தாலும், அவனுக்கென்று சொந்தமாய் ஒரு தேசமில்லையே… இருந்த மண்ணையும் இழந்து முற்று முழுதாக ஒரு அகதியாக வாழ்கிறானே… இந்த அவலத்தைக் கண்கொண்டு பார்க்கவும் யாருமில்லையே…" என்ற எமது நெஞ்சின் வலிகள்தான் இங்கே பாடல்களாக வந்துள்ளன.
    பாடல்களைக் கேட்கும் ஒவ்வொரு தமிழருக்கும் அந்தக் குருதியின் வலி புரியும் என நம்புகிறேன்.

    தமிழீழத்தில் சிந்தப்பட்ட எமது மக்களின் குருதியையும் அதன் வலியையும் தமிழர் சரித்திரத்தில் பதிய வைக்கும் எனது இந்த முயற்சியை, தமிழர் மத்தியில் கொண்டு செல்லும் பொறுப்பை பத்திரிகையாளர்களிடம் ஒப்படைக்கிறேன்.

    'ஒட்டுமொத்த தமிழினமும், குறிப்பாக தாயகத்தில் உள்ள பெருந்தொகையான எமது தொப்புள் கொடி உறவுகளும் உணர்வுடன் ஒன்றிணைய வேண்டும்… அதற்கான அவசியமான தருணம் இதுவே" என்பதே இந்தப் பாடல் தொகுப்பின் அடிநாதம் என்பதைச் சொல்ல விரும்புகிறேன்.

    பாடல்களுக்கு உணர்வுப்பூர்வமான இசையைத் தந்துள்ளார் உதயா அவர்கள். இதைவிட ஒரு சிறந்த பணியை அவர் தமிழினத்துக்கு செய்துவிட முடியாது. அவருக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை…", என்றார் வசீகரன்.
    இந்தத் தொகுப்பில் உள்ள சில பாடல்களை வீடியோ வடிவில் தரும் எண்ணமும் உள்ளதாம்.

    இவர் ஏற்கெனவே பல்வேறு ஆல்பங்களைத் தயாரித்துள்ளார். 'காதல் கடிதம்" படத்துக்கும் இவர்தான் பாடல்களை எழுதினார்.

    சமீபத்தில் அவர் எழுதி வெளியான தமிழர் திருநாள் கவிதைத் தொகுப்பு பரவலான பாராட்டுக்களைப் பெற்றது.

    வன்னிப் போர் மற்றும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை 'குருதிப் பெருக்கில் ஒரு தேசம்' என்ற ஆவணப் படமாகவும் உருவாக்கியுள்ளார் வசீகரன்.

    மேலும் விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X