twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காதல் மன்னன்.. கேங்ஸ்டர் ஹீரோ.. இன்னும் இன்னும்.. - அஜித் ஆச்சரியங்கள்! #HBDThalaAjith

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : பலரின் ஆதர்ச நாயகனாக இருக்கும் அஜித், பள்ளிக்குச் செல்லாமல் தனித்தேர்வராக பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதிவிட்டு, உள்ளுக்குள் பல லட்சியங்களோடு தனது அப்பாவின் நண்பர் நடத்திய ஒரு நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்தவர்.

    அப்போது, அவர் பின்னாட்களில் தமிழகத்தில் தனக்கு இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் உருவாகும் எனக் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஆனால், அவருக்குள் சாதிக்கவேண்டும் என்கிற வேட்கை மட்டும் தணியாமல் எரிந்துகொண்டிருந்தது.

    அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு இன்று பிறந்தநாள். தொடர் தோல்விகள், விபத்துகள், விமர்சனங்கள் பல கடந்து உயரே நிற்கிற அஜித்திடம் கற்றுக்கொள்ள ரசிகர்களுக்கு பல்வேறு பாடங்கள் இருக்கின்றன.

    முதல் படம்

    முதல் படம்

    விளம்பரப் படங்களில் நடித்துக்கொண்டே வாய்ப்புத்தேடிய காலத்தில் 'என் வீடு என் கணவர்' எனும் படத்தில் ஒரு பாடல் காட்சியில் வந்துபோனதுதான் சினிமாவில் அஜித்தின் அறிமுகம். அதன்பிறகு 'பிரேம புஸ்தகம்' தெலுங்குப் படத்தில் ஹீரோவானார். சினிமாவில் நடிக்கத் தொடங்கியபோதும் கூட தனது விருப்பமான பைக் ரேஸ் பயிற்சிகளில் ஈடுபட்டு விபத்துகளால் படுகாயங்களையும் தொடர்ந்து சந்தித்து வந்தார் அஜித்.

    அமராவதி

    அமராவதி

    'அமராவதி' படம் எடுக்க நினைத்த டைரக்டர் செல்வா ஒரு விளம்பரத்தில் அஜித்தைப் பார்த்துவிட்டு தேடி, அவரைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் வேறொரு நடிகரை வைத்து டெஸ்ட் ஷூட் நடத்தி இருக்கிறார். அப்போது யதார்த்தமாக வாய்ப்பு தேடிச் சென்ற அஜித் சுரேஷ் சந்திராவிடம் தனது போட்டோவைக் கொடுக்க, அவர் செல்வாவிடம் காட்ட, அப்படிக் கிடைத்ததுதான் 'அமராவதி' வாய்ப்பு. அந்தப் படத்தில் அஜித்துக்கு டப்பிங் பேசியவர் நடிகர் விக்ரம்.

    காதல் கோட்டை

    காதல் கோட்டை

    அஜித் நடிப்பில் உருவான 'காதல் கோட்டை' படம் தேசிய விருது பெற்றது. கடும் விபத்தில் சிக்கி, படுத்த படுக்கையாகக் கிடந்த தன்னை 'பவித்ரா' படத்தில் நடிக்கவைத்த நன்றிக்கடனுக்காக கே.சுபாஷுக்கு பெரும் உதவி செய்தார் அஜித். 'நேசம்' படத்தின் ஷூட்டிங் முடிந்து படத்தை வெளியிட முடியாத அளவுக்கு கே.சுபாஷுக்கு பண நெருக்கடி ஏற்பட, அஜித் பெரிய தொகையைக் கொடுத்து அந்தப் படத்தின் ரிலீஸுக்கு உதவினார்.

    காதல் மன்னன்

    காதல் மன்னன்

    பாலச்சந்தரின் உதவி இயக்குநரான சரண் அஜித்தை வைத்து எடுத்த முதல் படம் 'காதல் மன்னன்'. அந்தக் காலகட்டத்தில் அஜித்துக்கு எக்கச்சக்கமான பெண் ரசிகைகள் இருந்தார்கள். அஜித்தை தங்களது கனவு நாயகனாகக் கொண்ட பெண்கள் பலர். இயக்குநர் சரண் அதன்பிறகு அஜித்தை வைத்து மேலும் சில படங்களையும் இயக்கி வெற்றிக்கூட்டணியாக முத்திரை பதித்தார்.

    ரொமான்டிக் ஹீரோ

    ரொமான்டிக் ஹீரோ

    கிளீன் ஷேவ் முகம் தான் சாக்லேட் ஹீரோக்களுக்கான காஸ்ட்யூம் மெட்டீரியல் என இருந்த காலத்தில், சில நாட்கள் ஷேவ் செய்யாத தாடி வைத்த தோற்றத்தில் 'ஆனந்த பூங்காற்றே' படத்தில் நடித்தார் அஜித். அது ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து பலரும் தாடியோடு நடிக்கத் தொடங்கினர். இன்றைக்கு நீண்ட தாடியோடு சாக்லேட் ஹீரோக்கள் நடிப்பதற்கெல்லாம் விதை அஜித் போட்டது.

    ஷாலினி உடன்

    ஷாலினி உடன்

    ஷாலினி முதலில் நடிக்க மறுத்து, பின்னர் அஜித்தே நேரடியாக அவரிடம் பேசி கன்வின்ஸ் செய்து நடித்த படம் 'அமர்க்களம்'. இப்படத்தில் கத்தி வைத்து மிரட்டும் காட்சியில் நிஜமாகவே கத்தி பட்டு ஷாலினிக்கு ரத்தம் வழிய துடித்துப்போனாராம் அஜித். இந்தப் படம் தான் இருவரின் காதலுக்கும் துவக்கப்புள்ளி. 'முகவரி' படத்தின் ஶ்ரீதர் கேரக்டரும் ரசிகர்கள் பலருக்கும் மிக விருப்பமானது.

    தீனா

    தீனா

    முருகதாஸ் இயக்கத்தில் உருவான 'தீனா' படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக மாஸ் காட்டியிருப்பார் அஜித். இந்தப் படத்தில் தான் அஜித் தனது சகாக்களால் முதன்முதலில் 'தல' என அழைக்கப்பட்டார். இன்றளவும் அவரது அடைமொழியாகவும், ரசிகர்கள் செல்லமாக அழைக்கும் பெயராகவும் அதுவே நீடிக்கிறது. முருகதாஸுக்கும் நல்ல கரியரை உருவாக்கிக் கொடுத்ததில் இந்தப் படத்திற்கு பெரும் பங்கு உண்டு.

    வாலி

    வாலி

    'வாலி' படத்தில் டபுள் ஆக்‌ஷனில் கலக்கி ஃபிலிம்ஃபேர் விருதைப் பெற்ற அஜித், 'சிட்டிசன்' படத்தில் பல கெட்டப் போட்டு நடித்தார். 'ரெட்' படத்தில் படம் முழுக்க மொட்டைத்தலையோடு கெத்தான லோக்கல் தாதாவாக நடித்திருந்தார். 'வில்லன்' படத்தில் டபுள் ஆக்‌ஷன் ரோலில் பட்டையைக் கிளப்பினார். மாற்றுத்திறனாளி வேடத்தில் அவரது சிறப்பான நடிப்பு வெகுவான பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.

    உடல் எடை அதிரடியாக குறைப்பு

    உடல் எடை அதிரடியாக குறைப்பு

    லிங்குசாமி இயக்கிய 'ஜி' படத்திற்குப் பிறகு, பாலாவின் 'நான் கடவுள்' படத்திற்காக உடல் இளைத்து முடி வளர்த்து ஆளே மாறி வேறொரு தோற்றம் பெற்றார். சிலபல காரணங்களால் அந்தப் படம் அஜித் கைவிட்டுப் போனது. அப்போது கமிட் ஆன 'பரமசிவன்' படத்தில் அஜித்தை மிகவும் ஒல்லியாகப் பார்த்த ரசிகர்கள் அசந்து போனார்கள். 'வரலாறு' படத்தில் பலரும் நடிக்கத் தயங்கும் வேடத்திலும் நடித்து தான் ஒரு கதாபாத்திரத்துக்கான நடிகர் என நிரூபித்தார்.

    கேங்ஸ்டர்

    கேங்ஸ்டர்

    அஜித்தின் சினிமா கரியரில் மிக முக்கியமான படம் 'பில்லா'. பெரிய வெற்றிகள் இல்லாமல் இருந்த நிலையில் ரஜினி நடித்த படத்தின் ரீமேக்காக உருவான இந்தப் படம் விஷ்ணுவர்தனின் ஸ்டைலிஷான மேக்கிங்கால் செம ஹிட் ஆனது. ஒவ்வொரு காட்சியிலும் திரையில் தோன்றிய அஜித்துக்கு மொத்தத் தியேட்டரும் விசிலடித்து ஆரவாரம் செய்தது. ஆக்‌ஷன் ஹீரோ அஜித்தின் வேறொரு பரிமாணத்தைக் காட்டிய இந்தப் படம் கேங்ஸ்டர் படங்களில் ஒரு மைல் கல்.

    50-வது படம்

    50-வது படம்

    அஜித்தின் 50-வது படமாக வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவானது 'மங்காத்தா'. மைல் ஸ்டோன் படம் என்பதால் படத்திலேயே பாலாபிஷேகம் செய்வது, கட் அவுட் வைப்பது என துதி பாடாமல் வேற மாதிரி இருக்கவேண்டும் என்பது அஜித்தின் விருப்பம். அதை நேர்த்தியாக நிறைவேற்றி வைத்தது வெங்கட்பிரபுவின் நெகட்டிவ் ஹீரோ சப்ஜெக்ட். சால்ட் அண்ட் பெப்பர் லுக், பேட் கேரக்டர் என முன்னணி நடிகர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் ஏற்க அஞ்சும் கேரக்டரை தனது ஸ்கிரீன் பிரசன்ஸால் நிரப்பினார்.

    சொந்த செலவில்

    சொந்த செலவில்

    ஶ்ரீதேவி கேட்டதற்காக ஒரு பைசா கூட சம்பளம் வாங்கிக்கொள்ளாமல், தன் சொந்தச் செலவிலேயே போய் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துக் கொடுத்தார். அதன் பிறகுதான் ஶ்ரீதேவிக்கும், இவரது குடும்பத்திற்குமான நட்பு அடிக்கடி தொலைபேசியில் பேசும் அளவுக்கு வளர்ந்தது. 'ஆரம்பம்', 'வீரம்' படங்களிலும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை அப்படியே தொடர்ந்தார். இந்த ஸ்டைல் அஜித்துக்கு மிகப்பொருத்தமாக செட் ஆனது.

    இயக்குநர் அவதாரம்

    இயக்குநர் அவதாரம்

    'உயிரோடு உயிராக' படத்தில் 'பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது' பாடலை இயக்கியது அஜித் தான். ஹீரோயினுக்கு டான்ஸ் மூவ்மென்ட் சொல்லிக்கொடுப்பது முதல் ஷாட் வைப்பது வரை எல்லாமே பார்த்து ஒன்பது மணி நேரங்களில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் அந்த பாடல் காட்சியின் ஷூட்டிங்கை முடித்தார் அஜித். இந்தப் படத்தின் இயக்குநர் நடிகை ரிச்சாவின் அம்மா சுஷ்மா. சரண் இயக்கத்தில் உருவான 'அசல்' படத்திற்கு கதை - திரைக்கதை - வசன உதவியும் தல அஜித் குமார் தான்.

    விஜய் உடன்

    விஜய் உடன்

    விஜய்யுடன் அஜித் சேர்ந்து நடித்த படம் 'ராஜாவின் பார்வையிலே'. புதிதாக சினிமாவுக்கு வந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி இரண்டு நடிகர்கள் கொண்ட கதையில் நடிக்க அவர் தயங்குவதே இல்லை. 'கல்லூரி வாசல்' படத்தில் பிரசாந்த் உடனும் 'உல்லாசம்' படத்தில் விக்ரம் உடனும், 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்தில் கார்த்திக் உடனும், 'அசோகா'-வில் ஷாருக்கான் உடனும் நடித்திருக்கிறார். 'மங்காத்தா', 'ஆரம்பம்', 'என்னை அறிந்தால்' என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு பவர்ஃபுல்லான கேரக்டர் கொடுக்கச் சொல்லி இணைந்து நடித்திருக்கிறார் அஜித்.

    பல துறைகளிலும்

    பல துறைகளிலும்

    பைக், கார் ரேஸ்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கும் அஜித் சிறந்த புகைப்படக் கலைஞரும் கூட. பல்வேறு தருணங்களில் எடுத்த சிறந்த புகைப்படங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார். அஜித்தின் நண்பர்களுக்கு அவர் சமைத்துத் தரும் பிரியாணி, மீன் உள்ளிட்ட உணவுகள் என்றால் கொள்ளைப் பிரியம். தன்னோடு இருப்பவர்களை கஷ்டப்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் எனும் பாலிசியை தொடர்ந்து கடைப்பிடித்து வரும் அஜித் எல்லோரும் பின்பற்றவேண்டிய ரோல் மாடல். ஹேப்பி பர்த்டே தல!

    English summary
    Ajith's 47th birthday is today. Here is an article on Ajith's cinema career.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X