நிஜ அரிவாளை வைத்து வெட்டவா என்று கேட்ட விஜயகாந்த்... கை போனாலும் கைவிடமாட்டார் என்று நம்பிய நடிகர்
சென்னை: தனது சண்டைக் காட்சிகள் மூலமாகவே நிறைய ரசிகர்களை சம்பாதித்தவர் நடிகர் விஜயகாந்த் என்று கூறினால் மிகையாகாது.
சண்டை காட்சிகளில் நடிக்கும் பொழுது சக நடிகர்களுக்கு ஒரு சிறிய அடி கூட படாத அளவிற்கு தத்ரூபமாகவும் அதே வேளையில் பார்ப்பதற்கு உண்மையாகவே அடிப்பது போலவும் நடிப்பாராம்.
அப்படி ஒரு நாள், போலி வீச்சரிவாள் இல்லாததால் உண்மையான வீச்சரிவாளை வைத்து வெட்டி நடிக்க வேண்டிய காட்சி எப்படி படமாக்கப்பட்டது என்பது பற்றி அவருடன் நடித்த நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.

தொடர் படப்பிடிப்பு
தூக்கமின்றி தொடர்ச்சியாக நடித்துக் கொடுப்பதில் மிகவும் அர்ப்பணிப்பான நடிகர் விஜயகாந்த். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் கூட ஏ.வி.எம் நிறுவனத்தின் அருணா குகன் தனது சமூக வலைதளத்தில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். அதில் சிவப்பு மல்லி என்கிற திரைப்படத்தை 56 நாட்களில் எடுத்து வெளியிட போகிறோம் என்று அறிவித்துவிட்டார்களாம். அறிவிப்பு தேதியை முன்னதாகவே கூறிவிட்டதால் 35 நாட்களில் படப்பிடிப்பு முடித்தாக வேண்டிய சூழ்நிலை இருந்ததாம்.

சேலம் - மதுராந்தகம்
அப்போது சாட்சி என்ற படத்தில் சேலத்தில் விஜயகாந்த் நடித்துக் கொண்டிருப்பாராம். அதே வேளையில் சிவப்பு மல்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னைக்கு அடுத்துள்ள மதுராந்தகத்தில் நடக்குமாம். காலையில் சேலத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு மாலையில் மதுராந்தகம் வந்து இரவு முழுவதும் நடித்து பின்னர் அதிகாலையில் மீண்டும் சேலத்திற்கு புறப்பட்டு செல்வாராம். இடைப்பட்ட நேரத்தில்தான் தூக்கம்.

மாநகர காவல்
அப்படி அர்ப்பணிப்போடு நடித்துக் கொடுத்ததால் சிவப்பு மல்லி படம் சொன்ன தேதியில் வெளியானது என்று அருணா குகன் குறிப்பிட்டிருந்தார். அதே ஏ.வி.எம் நிறுவனம் பிற்காலத்தில் தயாரித்திருந்த மாநகர காவல் திரைப்படத்திலும் இதே போன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட, தொடர்ச்சியாக தூக்கமின்றி 72 மணி நேரம் நடித்துக் கொடுத்துள்ளார். இப்போது படப்பிடிப்பிற்கு தாமதமாக வரும் நடிகர்கள் மத்தியில் விஜயகாந்த் அப்படி ஒரு அர்ப்பணிப்போடு பணிபுரிந்தது இன்றுவரை பலரையும் பிரமிக்க வைக்கிறது.

வீச்சருவா வெட்டு
ஒரு படத்தில் தலைவாசல் விஜய் அவர்களின் கையை வெட்டுவது போல காட்சி இருந்துள்ளது. அன்று டம்மியாக வீச்சருவா செய்யப்படாததால் அந்த ஷாட்டை எடுத்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை இருந்ததால், உண்மையான வீச்சருவாளை வைத்து எடுக்க யோசித்து. தலைவாசல் விஜய்யிடம்,"என் மேல் நம்பிக்கை இருக்கிறதா, இந்த அறிவாளை வைத்து வெட்டவா?" என்று விஜயகாந்த் கேட்டாராம்.

நம்பிக்கை
காட்சிக்காக தனது கைகளை பின்னால் கட்டிவிட்டு, கை இருக்க வேண்டிய இடத்தில் வாழை மரத்தில் டம்மியாக ஒரு கை செய்து வைத்திருப்பார்கள். அதனை சரியாக வெட்டாவிட்டால் நிஜத்தில் காயங்கள் ஏற்படும். அதனால் 2 நிமிடங்கள் அவகாசம் கொடுங்கள் என்று தலைவாசல் விஜய் தனியாக சென்று யோசித்தாராம். சரியாக வெட்டிவிட்டால் பிரச்சனை இல்லை ஒருவேளை தவறு நிகழ்ந்து கைக்கு ஏதாவது ஆனால் விஜயகாந்த் கண்டிப்பாக கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில் நடிக்கிறேன் என்று கூறினாராம். பின் ஒரே ஷாட்டில் தத்ரூபமாக வெட்டி விஜயகாந்த் நடித்தார் என்று தலைவாசல் விஜய் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications