அரசியலில் ஒன்னு இஸ் இல்லைனா உஸ்.. கோட்டை விட்ட விஜயகாந்த், சரத்.. விஜய் எதிர்காலம் எப்படி இருக்கு?
சென்னை: தமிழ் சினிமாவில் ஹாரர், த்ரில்லர் மற்றும் ஆக்சன் ஜானரில் பல படங்கள் வந்து வெற்றி பெற்றுள்ளன. ஆனால், அரசியல் படம் என்று எடுத்துக்கொண்டால் அமைதிப்படை அமாவாசை ஏற்படுத்திய தாக்கம் வேறு எந்த படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. 90களுக்கு பிறகு பல நடிகர்கள் அரசியலுக்கு வந்து வெற்றி தோல்வி என இரண்டையும் கண்டு துவண்டு போனார்கள். பலரும் இன்று இரண்டாம் கட்ட நடிகர்களை போன்று தான் அரசியலிலும் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் அரசியலில் சறுக்கிய படங்கள் குறித்த தொகுப்பை இதில் காணலாம்.
கருப்பு எம்ஜிஆர்: எம்ஜிஆருக்கு பிறகு கருப்பு எம்ஜிஆர் என அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். அவரது கைகள் கேட்பவர்களுக்கு இல்லையென்று அள்ளி அள்ளி கொடுத்து தேய்ந்து போய்விட்டன. வாழும் போதே சினிமா திரையுலகில் பல மாற்றங்களை கொண்டு வந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் விஜயகாந்த். குறிப்பாக அவர் நடித்த படங்களான ஏழை ஜாதி, சுதேசி, ரமணா, விருதகிரி போன்ற பல படங்களில் அவர் அரசியல்வாதிகளின் கோர முகங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி நடித்திருப்பார். அரசியல் வசனங்கள் என்றால் விஜயகாந்திற்கு அல்வா சாப்பிடுவது மாதிரி இருக்கும். எந்த பாரபட்சம் பார்க்காம் ஓப்பனாக பேசுவார்.
மனுஷன் எதிர்க்கட்சிகளை துவம்சம் செய்வது போல் சினிமாவில் இறங்கி அடிப்பார். அரசியலில் அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்து இன்று அவரது கட்சி இருக்கும் இடம் தெரியாமலேயே போய்விட்டது. அரசியல்வாதிகள் .செய்யும் ஊழல்களை படங்கள் மூலம் எதிர்த்து கேள்வி கேட்டவர் விஜயகாந்த். முதல்வர் நாற்காலியில் அமர வேண்டிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டாலும், சிறந்த ஆளுமையாக வாழ்ந்து காட்டியுள்ளார். நிஜ வாழ்விலும் விஜயகாந்த் கர்ணனாகவே இருந்துள்ளார்.

அமைதிப்படை அமாவாசை: சத்யராஜ் - மணிவண்ணன் காம்போவில் உருவான அமைதிப்படை படம் தமிழ் சினிமாவில் டிரெட் மார்க்கை உருவாக்கியிருக்கிறது. இன்று வரை ரீல்ஸ் வீடியோக்களாக அதிகம் பகிரும் காட்சி அமாவாசை நாற்காலி காட்சிதான். இதுபோன்று இன்று நிஜ அரசியலும் நாற்காலிக்காக எத்தனை நரி தந்திரங்களை செய்து மந்திரி பதவிகளையும், எம்எல்ஏ பதவிகளையும் சொகுசாக அனுபவித்து வருகிறார்கள். நிஜ அரசியலை 90களிலேயே தோலுரித்து காட்டிய படம் அமைதிப்படை. ஒரு அப்பாவி பெண்ணை ஏமாற்றும் அமாவாசை எம்எல்ஏ ஆன பிறகு செய்யும் துரோகம், அரசியலில் ஒன்னு இஸ்.. உஸ் என சத்யராஜ் பேசும் வசனங்கள் கிளாஸிக் தான். மத்தவங்களை பத்தி தெரியாதுங்க எனக்கு அல்வா கொடுக்கத்தான் தெரியும் என்ற வசனம் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கிறது. இதுபோன்ற பொலிட்டிக்கல் சட்டையர் படம் வருவது கடினம் தான். மணிவண்ணனை எல்லோரும் ஒரு தீர்க்கத்தரிசி என்றே தெரிவிக்கின்றனர்.

சத்யராஜ் கரியரில் மிக முக்கியமான படமாக இது இருக்கிறது. நக்கல் நையாண்டியுடன் அரசியல்வாதிகளின் உண்மை முகம் இதுதான் என்பதை தோலுரித்து காட்டியவர் மணிவண்ணன். மைக்கை பிடித்தால் 1 மணி நேரம் பேசுறது ஓகே அது மக்களுக்கு புரியுமா என சத்யராஜ் கேட்கும்போது அட மைக் இல்லைனா நமக்கு சோறு கிடைக்காதுப்பா என்ற வசனங்கள் கள எதார்த்தத்தை புரிய வைத்தன. அதன் பிறகு இருவரது கூட்டணியில் பல படங்கள் வந்திருந்தாலும் அரசியல் படங்களுக்கு முதன்மை கதாப்பாத்திரமாக இருப்பது அமாவாசை போன்று சிறப்பானதா என்பது சந்தேகம் தான்.
சரத்குமாரின் அரசியல் கணக்கு: எம்ஜிஆரை போன்று அரசியலில் மக்களுக்கு தொண்டு செய்ய வந்ததாக சரத்குமாரே பல மேடைகளில் தெரிவித்திருக்கிறார். ஆனால், எம்எல்ஏ, எம்.பி ஆனாலும் சூழ்ச்சியால் நான் தோற்கடிக்கப்பட்டேன் என்றே தெரிவித்திருக்கிறார். குடும்ப படங்களில் நடித்து பிரபலமடைந்தாலும் ஒரு நடிகருக்குள் இருககும் அரசியல் ஆசை கடலை விட பெரிது தான். அவர் நடிப்பில் வந்த அரசியல் படம் என்றால் அது நம்நாடு தான். ஆனால், இப்படி ஒரு படத்தில் சரத்குமார் நடித்திருக்கிறாரா என்றுதான் ரசிகர்களும் சந்தேகப்படுவார்கள். காரணம் அவர் நடித்த படங்களில் ஒன்று ஆக்சன் காட்சியு்ம் பழிவாங்குவதும் தான் இருக்கும். அரசியல் படத்தில் நடித்தது தெரியாதே என்பது போலத்தான் இன்று அவரது அரசியல் வாழ்க்கையும் இருக்கிறது. தனது அரசியல் கட்சியை தேசிய கட்சியிடம் அடகு வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

ராமராஜன்: எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன், எங்க ஊரு காவல்காரன் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர் ராமராஜன். கிராமத்து கதைகளில் அதிகம் படங்களை நடித்து ஹிட்டும் கொடுத்துள்ளார். ரஜினி, கமல் படங்களே இவரது படம் என்றால் ரிலீஸ் செய்ய பயந்த காலமும் இருந்தன. ஆனால், இன்று அவர் இருக்கும் திசையே தெரியாமல் போய்விட்டது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சாமானியன் படம் நல்ல கதையாக இருந்தும் தோல்வியை கண்டது. ஊழலை எதிர்த்து எடுக்கப்பட்ட படம் என்றாலும் ரசிகர்களை கவரவில்லை. இவர் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியின் மீது பற்றால் அவரை போன்றே மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்ததாக கூறப்படுகிறது. எம்ஜிஆர் இடத்தை இவர் பிடிப்பார் என்றும் பேச்சு அடிபட்டது. ஆனால், அவர் நடித்த படங்களில் அந்த கட்சியின் கொடியும் இடம்பெறும். ஆனால், இன்று அந்த கட்சியால் ஒரம்கட்டப்பட்டு இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார் ராமராஜன்.
குஷ்பூ: நடிகை ஜெயலலிதா போன்றே அரசியலில் ஏதாவது செய்ய ஆசைப்பட்டவர் குஷ்பூ. அதனால், கலைஞர் கருணாநிதி உயிருடன் இருந்தபோது அவரது கட்சியில் இணைந்தார். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக தேசிய கட்சியில் முக்கிய பதவி வகித்தார். அங்கும் நிறந்தரம் என்பது இல்லாமல் தற்போது மற்றொரு அரசியல் கட்சியில் அங்கம் வகிக்கிறார். இந்தக் கட்சிக்கு வந்த பிறகு குஷ்பு தேசிய அளவில் டிரெண்டிங் ஆனார். அவரது பேச்சும் ஸ்டைலும் மாறிவிட்டது. ஆனால், தேர்தலில் அவர் இன்னும் ஜீரோவில் தான் இருக்கிறார். அடுத்த முறையாவது வெற்றி பெறுங்கள் குஷ்பு.

சர்க்கார் அமைப்பாரா விஜய்?: நடிகர்கள் அரசியலுக்கு வராவிட்டாலும் அவர்கள் நடிக்கும் படங்களில் நேரடியாக அரசியல் தலைவர்கள் பாரபட்சம் பார்க்காமல் கலாய்க்கும் காட்சிகள் இருக்கும் அல்லது, பன்ச் வசனங்களால் ரசிகர்களை பூஸ்ட் அப் செய்வது இருக்கும்.விஜய் நடித்த சர்க்கார் படம் பெரும் சர்ச்சைகளை வெடித்தது. அப்படத்தில் நிஜ அரசியல்வாதிகளை கிண்டல் செய்வது போன்று இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், பெரும் எதிர்பார்ப்போடு வந்த சர்க்கார் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தோல்வியை தழுவியது. அதே பாணியில் தற்போது விஜய் புதிய கட்சியை தொடங்கியிருக்கிறார். அந்த கட்சி தான் இனி மக்களின் முதன்மை கட்சி என்றும் இருமாப்போடு பேசியிருக்கிறார். சர்க்கார் படம் போன்று சறுக்காமல் சர்க்கார் அமைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











