For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மறக்கப்பட்ட நாயகன் - ஆனந்த்பாபு

  By Ka Magideswaran
  |

  -கவிஞர் மகுடேசுவரன்

  தங்கைக்கோர் கீதம் வெளிவந்தபோது ஒரு பாட்டு எங்கெங்கும் ஒலித்தது. “தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது நெஞ்சத்தில் போராட்டம் போ… ராட்… டம்…” என்னும் பாடல்தான் அது. ஒரு பாடலை என்றாவது ஒருநாள் ஒலிபரப்பும் வானொலி நிலையங்கள்கூட அப்பாடலை அடிக்கடி ஒலிபரப்பின. தொடர்ந்து கேட்டால் பிடித்துப் போய்விடும் பாடல்களில் அதுவும் ஒன்று. படமும் பாடல்களுக்காகவே அரங்கு கொள்ளாத கூட்டத்தோடு பார்க்கப்பட்டது. அந்தப் பாடலுக்கு நடனமாடியவர் ஆனந்த்பாபு.

  தங்கைக்கோர் கீதம் திரைப்படத்தில் நாயகியின்மீது காதல்வயப்பட்டுச் சுற்றும் கல்லூரி மாணவன். நாயகிக்குத் திருமணமான பிறகும்கூட தொடர்ந்து துன்புறுத்தும் வேடம். தங்கைக்கோர் கீதத்தின் ஈர்ப்பான கூறுகளில் ஆனந்த்பாபு ஆடிய ஆட்டமும் ஒன்று. அவருடைய தந்தையார் நாகேஷ் நடனமாடுவதில் வல்லவர். ஒடியலான உடலமைப்பு உள்ளவர்களுக்கு நடனம் இயற்கையாகவே வரும். உடலின் இணைவுகளைப் பயன்படுத்தி வெவ்வேறு கோணங்களில் தாளத்திற்கேற்ப அசைவதுதான் நடனத்தின் கணக்கு. உடலை நன்றாக அசைப்பதற்கு முதல் தகுதி என்புதோல் போர்த்திய ஒல்லியான ஆளாக இருத்தல்தான்.

  the fogotten hero

  நடனத்தில் புகழ்பெற்றவர்கள் எல்லாருமே வடித்தெடுத்தாற்போன்ற உடலினராக இருப்பார்கள். பாடகர்கட்கு அன்றைய காலையில் பாடிப் பயிலவில்லை எனில் அன்றைய குரல் எடுபடாது. அதைப்போலவே உடலுக்குத் தசையேற்றம் ஏற்பட ஏற்பட நடனம் விலகிச் சென்றுவிடும். தங்கைக்கோர் கீதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆனந்த்பாபு தந்தையாரைப்போல ஒல்லியானவராக இருந்தார். அவரை நினைவூட்டும்படி நடனம் ஆடினார். அக்காலப் பெண்கள் அவரைக் காதல் இளவரசனாக ஏற்றுக்கொண்டார்களா என்று தெரியவில்லை. நன்றாக ஆடிப் பாடும் இளம் நடிகர் அந்த மாயப்பதவியைப் பிடித்துவிடலாம் என்பது திரையுலகத்தின் நம்பிக்கை. ஆனால், ஆனந்த்பாபு அறிமுகமான பின்னர் கமல்ஹாசனின் ஆட்டத்திறனோடு ஒப்பிடப்பட்டது நினைவிருக்கிறது. சனம்தேரி கஸம், எனக்குள் ஒருவன், காதல் பரிசு போன்ற படங்களில் கமல்ஹாசனின் ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. உடலைப் பலவாறாக வளைத்து நெளித்து ஆடுகின்ற போக்கு ஆனந்த்பாபு வருகைக்குப் பின்னர் உருவானதுதான்.

  ஆனந்த்பாபுக்குத் தொடர்ந்து படங்கள் வந்தன. இராஜேந்தர் தம் படங்கள்தோறும் ஓர் இளைஞரை அறிமுகப்படுத்தி அரங்கமைத்து ஆடவிட்டுக் கொண்டிருந்தார். இராஜீவ், கங்கா, ஆனந்த்பாபு, பப்லு என்னும் அந்தப் பழைய பட்டியல் நீளமானது. பிற்பாடு நல்ல குணப்பாங்கான வேடங்களில் நடிக்கக் கூடியவராக மாறிய இராஜீவ் நன்கு நடனமாடியவர்தான். ஒரு கட்டத்திற்கு மேல் நடனமாடக்கூடியவராகவே ஒருவர் தேங்கி நிற்க இயலாது. நடிப்பின்பக்கம் வந்தாக வேண்டும். நடனத்திற்கும் நடிப்புக்கும் அவ்வளவு நெருங்கிய தொடர்புண்டு. நடனக் கலைஞர் தேர்ந்த நடிப்பினை வழங்க முடியும். நடிகர் நடனக் கலைஞராக மாறுவதுதான் அரிது. கமல்ஹாசன் நடன இயக்குநரின் உதவியாளராகப் பணியாற்றியவர். திரைப்படத்திற்கு நடனம் கோத்தவர். அவருடைய நாட்டம் நடனத்தைவிடுத்து நடிப்பில் ஊன்றியதால்தான் நிலைத்தார். நடனக்காரர் என்ற நிலையிலேயே நடித்துக் கொண்டிருந்ததால்தான் பிரபு தேவா என்னும் நடிகர் விரைந்து சந்தை மதிப்பிழந்தார். தமிழ்த் திரையுலகில் ஆடலில் வல்லவராக அறிமுகமான ஆனந்த்பாபுக்கு நேர்ந்த ஏற்றத் தாழ்வுகளைச் சீர்தூக்கிப் பார்த்தால் உண்மைகள் பலவும் விளங்கும்.

  தங்கைக்கோர் கீதத்திற்குப் பிறகு பாடும் வானம்பாடி என்ற படம் வந்தது. அப்போது “டிஸ்கோ டேன்ஸ்” என்றொரு வகை பரவலாகியிருந்தது. பாப் இசை எனப்படும் குத்திசைக்கு ஏற்ப விருந்துகளில் ஆடும் நடன வகை அது. தனியாக ஆடுவது மட்டுமின்றிக் கூடியாடுவதும் அதன் சிறப்பு. இரண்டுக்கு மேற்பட்ட நிறங்களையுடைய பின்னற்சட்டையை அணிந்துக்கொண்டு “இது டிஸ்கோ பனியன்” என்றார்கள். இசைக்கேற்ப அணைந்து அணைந்து எரியும் பன்னிற விளக்குகளுக்கு நடுவே மினுங்கும் உடைகளை அணிந்துகொண்டு நம் நாயகர்கள் “டிஸ்கோ’ ஆடினார்கள். அந்த வகை நடனத்திற்குப் புதுவரவாக ஆனந்த்பாபு வந்து சேர்ந்தார். பற்பல நடிகர்கள் அந்த ஆட்டத்தைப் போட்டிருந்தாலும் ஆனந்த்பாபு விரைந்தும் நன்கு மடிந்தும் ஆடினார். “டிஸ்கோ டேன்சர்” என்ற இந்திப் படத்தின் தமிழ்வடிவான “பாடும் வானம்பாடி” பெருவெற்றி பெற்ற படம். “வாழும்வரை போராடு…” என்ற பாடல் ஆனந்த்பாபுக்கு அடையாளமானது.

  the fogotten hero

  வெற்றிக்கனி என்று ஒரு படம் திருப்பூர் நடராஜாவில் வெளியாகியிருந்தது. இரவு பத்து மணியளவில் எங்கோ சென்றிருந்த என் தந்தையாரும் நானும் திருப்பூர்ப் பழைய பேருந்து நிலையத்தில் வந்திறங்கினோம். முருகம்பாளையத்திற்குச் செல்லும் கடைசிப் பேருந்தும் போய்விட அவ்விரவைக் கழிக்கும் வகை தெரியவில்லை. வெற்றிக் கனியைப் பார்ப்போம் என்று ஓட்டமும் நடையுமாகச் சென்றால் அங்கே அரங்கு நிறைவைக் காட்டும் சிறுபலகை தொங்கியது. வெள்ளிப்பொட்டுகள் மினுக்கும் உடையில் ஓர் ஆட்டத்தின் அசைவைக் காட்டியபடி சுவரொட்டியில் ஆனந்த்பாபு சிரித்துக்கொண்டிருந்தார். ஏமாற்றத்தோடு ஊரை நோக்கி நடந்தோம். தியாகராஜன், ஆனந்த்பாபு போன்றோர் நடித்த படங்கள் அன்றைக்கு அப்படி ஓடின. இன்றைக்கு வெற்றிக்கனி திரைப்படத்தின் ஒரு துளியைக்கூட எங்கும் காண முடியவில்லை.

  ஆட்ட நாயகன் என்ற பெயரைத் தாண்டி ஆனந்த்பாபுக்கு எதுவுமே அமையவில்லை. “உதயகீதம்” படத்திலும் ஓர் ஆட்டம்தான். “புது வசந்தம்” படத்தில் நால்வரில் ஒருவராக வந்தார். கே. எஸ். இரவிக்குமார் இயக்கிய தொடக்கக்காலப் படங்கள் பலவற்றில் ஆனந்த்பாபு இடம்பெற்றார். அவர் நாகேஷ் குடும்பத்தின் நண்பர் என்பதால் அவ்வாய்ப்புகள் தரப்பட்டிருக்கலாம். புரியாத புதிர், சேரன் பாண்டியன், புத்தம் புதுப் பயணம், சூரியன் சந்திரன் ஆகிய இரவிக்குமாரின் படங்களில் இடம்பெற்றார். சேரன் பாண்டியனில் நாயகன். இடையிடையே பெயர் பெற்றுத்தராத சிறு வேடங்கள் பலவற்றில் தலைகாட்டினார். என் நினைவு சரியென்றால் ஆனந்த்பாபு நடித்து நன்கு விளம்பரப்படுத்தப்பட்ட கடைசிப் படம் “தாயம்மா”.

  தனியொருவராக நடித்ததைக் காட்டிலும் நால்வரில் ஒருவராக அவர் நடித்த படங்கள் பல. தொண்ணூறுகளின் நடுவில் திரைப்படப் போக்குகள் மாறத் தொடங்கியபோது ஆனந்த்பாபு பழையவர் ஆனார். அவரிடமிருந்து ஒரே வகையான நடிப்பும் ஆட்டமும் வெளிப்பட்டதுதான் முதற்காரணம். பிற்பாடு நீண்ட நெடுங்காலம் அவர் மக்களின் நினைவிலிருந்து அகன்றார். எண்பதுகளில் அரங்கு நிறைவுப் பலகை தொங்கிய பல படங்களின் நாயகனாக விளங்கியவர் தொண்ணூறுகளின் இறுதியில் வேண்டாதவர் ஆனார். அவர் குடித்தார் என்று சொல்கிறார்கள். வீழ்ச்சிக்குக் குடி காரணமில்லை என்றால்தான் ஐயப்பட வேண்டும். நாகேஷின் மகன் என்னும் சலுகை திரையுலகில் மேலும் எடுபடவில்லை. செய்வன புதிது செய்யாதிருந்தால், தொடர்ந்து நம்மை மேம்படுத்திக் கொள்ளாமல் தேங்கினால் எந்தத் துறையானாலும் வெளியேற்றப்படுவோம் என்பதற்கு ஆனந்த்பாபு நல்ல எடுத்துக்காட்டு.

  English summary
  Article about the forgotton hero anandbabu
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X