காமெடி நடிகர்களின் கண்ணீர் கதை: நடிகை மீது வந்த காதல்.. தெருவுக்கு வந்த சந்திரபாபு!
சென்னை: 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை' என்ற பாடலை விசில் அடித்துக்கொண்டே பாடி பலரின் மனதை வென்றவர் தான் நடிகர் சந்திரபாபு. 'தன அமராவதி' என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமான இவர். குறுகிய நாட்களிலேயே, தன்னுடைய ஈடு இணையற்ற நகைச்சுவையாலும், சிந்திக்க வைக்கும் பாடல்களாலும், முன்னணி இடத்தை பிடித்து, எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து பெயர் எடுத்தார். சினிமாவில் பல துரோகங்களை சந்தித்த சந்திரபாபு, கண்ணீரை மறைத்துக்கொண்டு புன்னகையை பரிசாக கொடுத்தார். அவர் வீழ்ந்த கதையை இந்த செய்தியில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தார் சந்திரபாபு. கோலிவுட் சினிமாவில் முதன் முதலாக மிகவும் நேர்த்தியான உடை அணியும் பழக்கத்தை அதாவது, கோர்ட் சூட் அணியும் பழக்கத்தை கொண்டு வந்தவர் நடிகர் சந்திரபாபு தான். சந்திரபாபுவிற்கு மிகவும் பிடித்த உடை வெள்ளை சட்டையும் கருப்பு நிற பேண்டும் தான். எப்போதும், அந்த உடை உடனே மிடுக்காக வலம் வந்தார் சந்திரபாபு, வாசனை திரவத்தை கைக்குட்டையில் வைத்துக்கொண்டு, எப்போதும் தன்னை புத்துணர்ச்சியோடு வைத்து இருப்பார்.

சந்திரபாபு நாயுடு: இவர் சென்னை அண்ணாமலை புரத்தில் இரண்டு அடுக்குமாடி கட்டி குடியேறினார். இரண்டாவது தளத்திற்கே காரில் செல்லக்கூடிய வகையில் அந்த கட்டிடத்தை கட்டி இருந்தார். தான் கட்டிய சொந்த வீட்டைப் பார்த்து பெருமைப்படும் சந்திரபாபு, ஒருமுறை ஆச்சி மனோரம்மாவிடம், என் வீட்டுக்கு வந்து பாருங்க, எவ்வளவு ரசித்து ரசித்து அந்த வீட்டை கட்டினேன் என்று தெரியும் என்றும், இந்த மாதிரி வீட்டை நீங்க எங்கையும் பார்த்து இருக்கவே முடியாது, அப்படி பார்த்து இருக்கிறேன் என்ற சொன்னால், அந்த வீட்டை நான் குண்டு வைத்து சிதைத்து விடுகிறேன் என்று சொன்னாராம். அந்த அளவிற்கு ஆசை ஆசையாக ரசித்து ரசித்து அவர் கட்டிய வீடு பிற்காலத்தில் அவரின் கையை விட்டு போனது. 1966 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரும் சந்திரபாபுவும் சேர்ந்து, "மாடி வீட்டு எழை" என்ற திரைப்படத்தை இயக்கினர். இந்த திரைப்படத்திற்காக பிரம்மாண்ட செட்களை அமைந்து படப்பிடிப்பு தொடங்கிய, இரண்டு நாட்கள் நடந்து கொண்டு இருந்த நிலையில், சந்திரபாபிவிற்கும் எம்ஜிஆருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு ஏற்பட்டு படம் பாதியிலேயே நின்று போனது. இதில் ஏற்பட்ட நஷ்டத்தால், ஆசை ஆசையாக கட்டிய அந்த கனவு மாளிகை கைவிட்டுப்போனது.

மதுவுக்கு அடிமை: நடிகை சாவித்ரியும், சந்திரபாபுவும் நல்ல நண்பர்களான இருந்தனர். இந்த நேரத்தில் தான் இந்தோனேஷிய அதிபர் சுகர்தோ கொடுத்த விருந்தில் சாவித்திரி கலந்து கொண்டார். அப்போது, அவர் மது குடிக்க கட்டாயப்படுத்தப்பட்டார். அந்த கட்டாயத்தால், சாவித்ரி முதன் முறையாக மது குடித்தார். அதன் பிறகு தான் அவருக்கு தினமும் குடிக்கும் பழக்கம் வந்துள்ளது. பின் நாளில் சாவித்ரிக்கு மாலை நேரத்தில் மது அருந்த கம்பெனி கொடுத்தது சந்திரபாபு தான். சாவித்ரியால் சந்திரபாபு கெட்டாரா... இல்லை சந்திரபாபுவால் சாவித்ரி கெட்டரா என்று குழம்பும் அளவிற்கு இருவரும் தினமும் குடித்து வந்தனர். சாவித்ரி மீது அவருக்கு இருந்த காதல் தான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. சந்திரபாபுவின் நெருங்கிய நண்பரான எம்.எஸ்.விஸ்வநாதன், மேலை நாட்டு பழக்க வழக்கத்தை எனக்கு கற்றுக்கொடுத்தான், அதற்காக என்னை கிளப்புக்கு அழைத்து சென்று எனக்கு விதவிதமான கோட் போட்டு அழகு பார்த்தான். சந்தோஷம் என்றாலும் குடிப்பான்.. கவலை என்றாலும் குடிப்பான்... கோவத்திலும் குடிப்பான் என்று சந்திரபாபு பற்றி எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
ஆறாத சோகம்: மற்றவர்களை சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்து அழகு பார்த்த சந்திரபாபுக்கு தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. இவர் திருமணம் செய்து கொண்ட பெண் வேறொருவரை காதலிப்பதாக சொல்ல, தன் மனைவியின் ஆசைப்படியே அந்த நபருடன் வாழ அனுப்பிவைத்தார். இப்படி தனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய்தும், பேசியும் சினிமாவில் எதிரிகளை உருவாக்கிக்கொண்டார். தனது சொந்த வாழ்க்கையில் இருந்த ஆறாத சோகங்களை மறைத்துக்கொண்டு மக்களை சிரிக்க வைத்த மகத்தான கலைஞன் சந்திரபாபு, 1974ம் ஆண்டு இந்த உலகைவிட்டு பிரிந்தார்.


Click it and Unblock the Notifications











