காமெடி நடிகர்களின் கண்ணீர் கதை: அம்மை தழும்பு மூஞ்சு.. இவன் நடிகனா.. வலிகளை மறைத்து சாதித்த நாகேஷ்!
சென்னை: அந்த காலத்தில் இருந்து, இந்த காலம் வரை தமிழ் சினிமாவில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள். இதில், அனைத்து நகைச்சுவை நடிகர்களுக்கும் ஒரு அடைமொழி உண்டு, கலைவாணர் என்றால் என்.எஸ்கே, காமெடி நடிகர் தங்கவேலு என்றால் டணால் தங்கவேலு, சின்ன கலைவாணர் என்றால் விவேக், வைகை புயல் என்றால் வடிவேலு என பல நகைச்சுவை நடிகர்களுக்கு அடைமொழி உண்டு. ஆனால், நாகேஷூக்கு மட்டும் எந்தவிதமான அடைமொழியும் இல்லை. ஆனால், தன்னுடைய உடல் மொழியால் அனைவரையும் சிரிக்க வைத்த ஓர் அற்புதமான நடிகர் நாகேஷ். அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய உச்சத்திற்கு சென்றாலும் அவர் கடந்து வந்த பாதை, கரடு முரடாகத்தான் இருந்தது அவரின் கண்ணீர் கதை குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
1993ஆம் ஆண்டு தாராபுரத்தில் கிருஷ்ணராவ் மற்றும் ருக்மணி அம்மாள் அவர்களுக்கு மகனாகப் பிறந்தார் நடிகர் நாகேஷ். பள்ளியில் படிக்கும் போதே நடிப்பின் மீது இவருக்கு ஆர்வம் இருந்ததால், அமெச்சூர் நாடகங்கள் பலவற்றில் நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து 1959 ஆம் ஆண்டு தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதில், நடித்துக் கொண்டு இருந்தபோது, அவருக்கு நடிக்க வரவில்லை என பலர் அவரை கேலி செய்திருக்கிறார்கள். இதைக்கேட்டு வருத்தப்பட்ட நாகேஷ், எம்.ஆர். ராதாவிடம், என்னை பலர் கேலி செய்கிறார் என வருத்தப்பட்டு பேசி உள்ளார். அப்போது எம்.ஆர்.ராதா, மற்றவர்கள் எல்லாம் நடிகர்கள், நீ கலைஞன். அனைவராலும் நடிக்க முடியும். ஆனால், அனைவராலும் கலைஞனாக முடியாது என்று, நாகேசை ஊக்கப்படுத்தி உள்ளார். எம்.ஆர்.ராதா அன்று அளித்த ஊக்கம் நாகேசை வெற்றிப்பாதையை நோக்கி ஓடவைத்தது.

சிரிக்க வைத்த கலைஞன்: நடிகர் நாகேஷ் அவர்களின் நிஜ பெயர் குண்டுராவ், ஆனால், அந்த பெயருக்கு கொஞ்சம் கூட பொருத்தமே இல்லாமல், மிகவும் ஒல்லியாக இருந்தார். சினிமாவில் ஒரு நடிகராக எந்த தகுதியும் இல்லாத உடல், முகம் முழுக்க அம்மைத் தழும்பு என சினிமாவிற்கு கொஞ்சமும் சம்மந்தமே இல்லாமல் இருந்தார் நாகேஷ். இதுபற்றி ரசிகர் ஒருவர் அவரிடமே கேள்வி கேட்க, நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. உங்கள் வீட்டில் இருக்கும் அம்மி கல் நன்றாக அரைக்க வேண்டும் என்றால், உளியைவைத்து கொத்துவார்கள். அது போல கடவுள் இந்த அம்மிக்கல்லை (என்னை) கொத்தியதால் தான், நடிப்பு என்கிற இட்லி நன்றாக வருகிறது என நகைச்சுவையாக பதில் அளித்து இருந்தார்.
அசாத்தியமான நடிகர்: டைமிங்கில் காமெடியை பிரபலப்படுத்தியவர் நாகேஷ் தான். 'நாய்க்கு பெயர் வெச்சியே சோறு வெச்சியா' என்று அவர் பேசிய வசனம் இன்று வரையிலும் பேசப்பட்டு வருகிறது. ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான காதலிக்க நேரமில்லை படத்தில், நாகேஷின் அப்பாவாக டி.எஸ்.பாலைய்யா நடித்து இருப்பார். அந்த படத்தில் வரும் கதை சொல்லும் காட்சி இன்றைக்கும் டிவியில் பார்த்தாலும் வியப்பாக உள்ளது. நடிகர் நாகேஷ் அவர்கள் நகைச்சுவை நடிகராக இருந்தாலும், சோக கதாபாத்திரத்தில் நம்மை அழவைத்து விடுவார். அதற்கு உதாரணம் எதிர்நீச்சல், நீர்குமிழி, நம்மவர் படத்தை சொல்லலாம். அதே போல ஹீரோவாக ஒரு சில படங்களில் நடித்த நாகேஷ், வில்லனாக பல படத்தில் நடித்து இருக்கிறார். அபூர்வ சகோதர் படத்தில் மோசமான வில்லனாக நடித்திருந்தார். அதற்குப் பின் கமல்ஹாசனின் பல படங்களில் மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். நாகேஷ் கமல்ஹாசனுடன் நடித்த கடைசிப் படம் தசாவதாரம்.

விருது கிடைக்கவில்லை: உடல் மொழியால் பலரை வயிறு வலிக்க சிரிக்கவைத்த நாகேஷிற்கு ஒரு படத்திற்கு கூட தேசிய விருது கிடைக்கவில்லை. நம்மவர் படத்திற்காக அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது மட்டும் தான் கிடைத்தது. தர்மியாக நடித்த நாகேசுக்கு ஆயிரம் பொன் கிடைக்கவே இல்லை என்று தான் சொல்லவேண்டும். நகைச்சுவை நடிகராக, வில்லனாக, குணசித்திர நடிகராக நடித்து நம்மை மகிழ்வித்த கலைஞன் நாகேஷ் 2009ம் ஆண்டு உயிரிழந்தார்.


Click it and Unblock the Notifications











