twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அங்கிங்கெனாதபடி எங்கும் ஒலித்த பாடல்கள் - முதல் மரியாதை

    By Ka Magideswaran
    |

    - கவிஞர் மகுடேசுவரன்

    ஒரு திரைப்படம் பதித்துச் செல்லும் நெடுநாள் சுவடு அதன் பாடல்கள்தாம் என்பது என் கருத்து. ஒவ்வொரு படமும் இறுதியில் அதன் பாடல்களாகத்தான் எஞ்சுகிறது என்றும் கூறியிருக்கிறேன். நம் மண்ணைப் பொறுத்தவரை பாடல்களுக்கு வெளியே ஒன்றை நினைத்துப்பார்க்க முடியாது. பிறப்பு முதல் இறப்பு வரை இங்கே எல்லாமே பாடல்கள்தாம். அண்மைக்காலத்தில் நம் இசையுணர்ச்சி மங்கி வருகிறதோ என்ற ஐயம் எனக்கும் உண்டு. ஆனால், நம் மனத்தை உடனே அசைப்புக்குள்ளாக்கும் அலைவீச்சு இசைதான். அதனால்தான் ஒரு திரைப்படம் ஆண்டுக்கணக்கில் ஓடியதைவிடவும் அதன் பாடல்கள் பல்லாண்டுக்கணக்கில் கேட்கப்படுகின்றன.

    நல்ல நல்ல பாடல்களுக்காகவே இங்கே திரைப்படங்கள் பார்க்கப்பட்டன. எத்தனையோ காலமாற்றங்கள் ஏற்பட்ட பின்னரும் பாடல்கள் இல்லாத திரைப்படங்கள் தொடர்ந்து வருகின்ற போக்கு உறுதிப்படவில்லை. ஆக, பாடல்கள் நம் உணர்வுகளை ஈரமாக்கும் உயிர்ச்சுனைகள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நம் காலத்தில் அவ்விடத்தைத் திரைப்படப் பாடல்கள் பிடித்துக்கொண்டன. நாமும் அவற்றைக் கேட்டு வளர்ந்த தலைமுறையினராகிவிட்டோம்.

    the song listened all over tamilnadu

    ஒரு திரைப்பாடலானது வடவேங்கடம் முதல் தென்குமரி வரை எங்கும் ஒலித்து அடங்குகிறது. தாம் சென்னையிலிருந்து மதுரைக்குச் சென்றபோது “ஓ போடு… ஓ போடு” என்ற பாட்டு வழியெங்கும் ஒலித்துக்கொண்டிருந்ததாக அப்பாடலாசிரியர் கூறுகிறார். ஒரு பாட்டு பிடித்துப் போய்விட்டால் சென்னையிலுள்ள தேநீர்க்கடைகள் முதற்கொண்டு கோடைக்கானல் பூம்பாறையிலுள்ள தேநீர்க்கடை வரைக்கும் அப்பாடல்தான் ஒலிக்கும். அப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு பாட்டு இம்மண்ணெங்கும் ஒலித்து அடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் அங்கிங்கெனாதபடி எங்கும் ஒலித்த திரைப்படப் பாடல்களில் ஒரேயொரு பாடலுக்கு முதலிடம் தந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் எந்தப் பாடலைத் தேர்ந்தெடுப்பது ? இது நல்ல கேள்வி.

    என் பாடல்களின் நினைவு என் பிறப்புக் காலத்தோடு தொடர்புடையது. அது அன்னக்கிளி வெளியானதிலிருந்து தொடங்குவது. இளையராஜாவின் பொற்காலத்தில் வெளியான பாடல்கள் என் முதல் பதினெட்டு ஆண்டுகளை ஆட்டிப்படைத்தது. அந்தப் பொற்காலம் “அன்னக்கிளி முதல் அரண்மரைக்கிளி வரை என்பது என் வரையறை. இவ்வரையறையில் பலர்க்கும் மாற்றுக்கருத்து உண்டு என்றாலும் பற்பல அளவுகோல்களைக் கொண்டே இவ்வரையறையை அடைகிறேன்.

    the song listened all over tamilnadu

    என் நினைவுகளை அகழ்ந்தெடுத்து எங்கெங்கும் நீக்கமற ஒலித்த திரைப்பாடல்களை இங்கே கூறிவிட விரும்புகிறேன். என்னுடைய பாட்டுக் கேட்புப் பழக்கமும் ஏறத்தாழ அன்னக்கிளி வெளியான காலத்திலிருந்தே தொடங்குகிறது. வாய்பேசப் பழகிய இரண்டாம் அகவைக் குழந்தையாய் இருக்கையில் நான் பாடிய பாடல் “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு…”. பாடலை மழலையில் சொல்லி முடித்து ஈற்றில் கழுதைபோல் கத்தி “புர்ர்ர்ர்ர்ர்” என்பேனாம். அதைக் கேட்க விழையும் ஊரார் முன் பாடிக்காட்டி, அண்மையில் என்வினவியில் சுற்றிக்கொண்டிருக்கும் “கபாலீடா…” சிறுவனைப்போலானேன். அவ்வளவுக்கு அப்பாடல் எங்கும் ஒலித்தது.

    அதற்கும் முன்பாக ஒலித்த பாடல்களில் “பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ…” என்னும் பாடலைச் சொல்லலாம். எம்ஜிஆர் சிவாஜி பாடல்கள் புதுப்பாடல்களோடு தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தன. வெளியாகி பத்திருபது ஆண்டுகள் கடந்திருப்பினும் அப்படங்களின் திரையீடும் தொடர்ந்து நடந்தமையால் படப்பாடல்கள் காற்றில் மிதந்தன. வசந்த மாளிகை, அன்பே வா படப்பாடல்கள் நில்லாமல் ஒலித்துக்கொண்டிருந்தன. “பழம்நீயப்பா… ஞானப் பழம்நீயப்பா…” பாடலோடுதான் திருவிழாப் பாடல்கள் தொடங்கின. பழம்நீயப்பாவுக்கு நிகராக ஒலித்த இன்னொரு பாடல் “கந்தன் காலடியை வணங்கினால் கடவுளர் யாவரையும் வணங்குதல் போலே…” என்பது. இன்று அந்தப் பாடல் ஒலிப்பது அருகிப் போயிற்று.

    பேருந்துகளில் பாடுகருவிகள் பொருத்தப்பட்டதும் பாடல் கேட்கும் நேரங்கள் மிகுந்தன. அப்படிப் பொருத்தப்பட்ட பேருந்தில்தான் “ஒரேநாள் உனைநான் நிலாவில் பார்த்தது…” என்ற பாடலைக் கேட்டேன். இன்றைக்கும் அந்தப் பாடலைக் கேட்கையில் பேருந்தில் ஒலிக்கக் கேட்ட அந்நாள் நினைவுக்கு வருகிறது. அதற்கும் முன்பாக ஆட்டுக்கார அலமேலு திரைப்படத்தில் இடம்பெற்ற “பருத்தி எடுக்கயிலே என்னைப் பலநாளாப் பார்த்த மச்சான்…” பாடல் எங்கெங்கும் ஒலித்தது.

    the song listened all over tamilnadu

    இளையராஜாவின் இசைவெள்ளம் பெருகத் தொடங்கியபோது இன்றியமையாத மாற்றமொன்று நிகழ்ந்தது. இசைத்தட்டுகளின் காலம் முடிவுற்று ஒலிநாடாப்பேழைகளான “கேசட்டுகள்” வழக்கத்திற்கு வந்தன. ஒலிபெருக்கிக்காரர் ஒன்றுக்கு இருக்கப் போய்விட்டால் திருவிழாவில் ஒலிக்கும் பாடல் விரைவிழந்து குழையத் தொடங்கும். ஒன்றுக்கு இருந்தாரோ இல்லையோ அரைகுறையாய் வினைமுடித்து ஓடிவந்து இசைத்தட்டில் முள்குத்தியிருக்கும் பெட்டியைச் சுழற்றி ஈடு செய்வார். மறுநாள் அந்த வேலையை எனக்குக் கொடுத்துவிட்டு ஒன்றுக்கிருக்கப் போனார். நானும் சுழற்றியிருக்கிறேன்.

    ஒலிப்பேழைகள் வந்த பிறகு இசைத்தட்டுப் பெட்டிகள் வழக்கொழிந்தன. சிறிய கைப்பெட்டியைப்போன்ற டேப்ரிகார்டர் எனப்பட்ட “பதிவொலிகை” வழக்கத்திற்கு வந்தது. அன்றைய குடும்பத்தவர் எவ்வொருவரின் கனவும் அந்தப் பதிவொலிகைதான். முதன்முதலாக அதை என் அத்தை வீட்டில் பார்த்தேன். பொருளீட்டத் தொடங்கியிருந்த மூத்த மாமன் அதை வாங்கியிருந்தார். ஒலிப்பேழையை உள்ளிட்டுப் பொருத்தி அதன் தலைமேலிருந்த பொத்தானை அழுத்தினால் தேனருவியாய்ப் பாடத்தொடங்கியது. “ஏரிக்கரைப் பூங்காற்றே… நீ போற வழி தென்கிழக்கோ…” என்பது அதில் நான் கேட்ட முதற்பாடல். அப்பாடலும் அன்று காற்றலைகளை நிறைத்தது. “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்” நீள்நெடுங்காலம் நிலைத்தொலித்த மற்றொரு பாடல். நினைத்தாலே இனிக்கும் படத்தின் நம்ம ஊரு சிங்காரியும் வாழ்வே மாயத்தின் மழைக்கால மேகம் ஒன்றும் தொடர்ச்சியாய்க் கேட்கப்பட்டன. ஒருதலை ராகம், பாலைவனச்சோலை, பன்னீர் புஷ்பங்கள், கோழி கூவுது படங்களின் பாடல்களும் ஓயாமல் ஒலித்தவைதாம். வெற்றி பெற்ற படங்களின் பாடல்களைப் போலவே வெளிவராத படங்களின் பாடல்களும் ஒலித்தன. அந்த வகையில் “மணிப்பூர் மாமியார்” என்னும் வெளிவராத படத்தில் இடம்பெற்ற “ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே…” என்ற பாடலுக்கு முதலிடம் தரவேண்டும். பாகவதர் வேடத்தில் அப்படத்தில் நடித்த டி. எஸ். பாலையாவுக்காகப் பாடியதாக மலேசியா வாசுதேவன் கூறினார்.


    எண்பதுகளின் இடைக்காலத்தில் வானொலிகளைத் தாண்டி வீடுகள்தோறும் பதிவொலிகைகள் பரவலாகிவிட்டன. போக்குவரத்து வண்டிகளில் பாடற்கருவிகள் பொருத்தப்பட்டன. ஒலிப்பேழைகள் கைம்மாற்றிக்கொள்ளப்பட்டன. ஒரு பாடல் எங்கெங்கும் ஒலிக்கும்படி சூழல் மேம்பட்டுவிட்டது. எல்லாம் கனிந்த நிலையில் ஒரு படம் வந்தது. அதன் பாடல்கள் கோட்டை முதல் குடிசை வரை நில்லாமல் ஒலித்தன. பட்டிதொட்டியெங்கும் அப்பாடல்களே. ஒவ்வொரு பாடலைக் கேட்டு முடித்ததும் ஏன் முடிந்தது என்னும்படி ஆயிற்று. பாடல்கள் அனைத்தும் கதைத்தன்மையோடு இருந்தன. கதை கூறின. படமும் திங்கள்கணக்கில் ஓடி வெற்றி பெற்றது. அதைப்போல் வெற்றி பெற்ற பாடல்களையுடைய படம் என்று இன்னொன்றைக் கூறுவது கடினம். அந்தப் படத்தில்தான் நான் தேர்ந்தெடுத்துக் கூறும் அந்த ஒரு பாடல் இருக்கிறது. அங்கிங்கெனாதபடி எங்கும் ஒலித்த பாடல். இந்நிலமக்கள் ஆயிரக்கணக்கான முறைகள் கேட்டு மகிழ்ந்த பாடல். அந்தப் படம் “முதல் மரியாதை”. அந்தப் பாடல் “அந்த நிலாவைத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக”.

    English summary
    Cinema essay about the song listened all over tamilnadu
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X