Kiss Day - தமிழில் முத்தத்தை பற்றி வந்த பாடல்கள் என்ன தெரியுமா?.. ரசிச்சு எழுதியிருக்காங்களே ப்பா
சென்னை: உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படவிருக்கிறது. பிப்ரவரி ஏழாம் தேதியிலிருந்து 14ஆம் தேதிவரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெயரில் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்று முத்த தினம் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் தமிழில் முத்தத்தை பற்றி வந்த பாடல்களில் மூன்று பாடல்களை இதில் பார்க்கலாம்.
காதலர் தினம் நாளை கொண்டாடப்படவிருக்கிறது. அந்த நாளுக்காக காதலர்கள் வெறித்தனமான வெயிட்டிங்கில் இருக்கிறார்கள். நாளைய தினம் ட்ரெஸ்ஸிலிருந்து பேச்சுவரை காதலை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இருக்கும். பலர் தங்களது காதலை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்துவார்கள்; ஒருதலை காதல்கள் வெளியில் சொல்லப்படும். காதலர் தினம் கொண்டாடப்படும் நாளிலிருந்து முந்தைய ஏழு நாட்கள் ஒவ்வொரு நாளாக கொண்டாடப்படுகிறது.

முத்த தினம்: அந்தவகையில் இன்று முத்த தினம் கொண்டாடப்படுகிறது. காதலுக்கு முத்தம் என்பதுதான் பெரிய அடையாளம் இருக்கிறது. எந்தக் காதலாக இருந்தாலும் அது முதலில் முத்தத்திலிருந்துதான் தொடங்கும். இதன் காரணமாகவே முத்தத்தை பலரும் கொண்டாடிவருகிறார்கள். இச்சூழலில் தமிழில் வந்த முத்தம் பற்றிய பாடல்களில் மூன்று பாடல்களை இதில் பார்க்கலாம்.
சோனியா சோனியா: பிரவீன் காந்தி இயக்கத்தில் நாகார்ஜுனா, சுஷ்மிதா சென் நடித்த படம் ரட்சகன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்தன. முக்கியமாக சோனியா சோனியா பாடல். அந்தப் பாடலை வைரமுத்து எழுதியிருப்பார். காதலியின் பெயரை வைத்து அந்தப் பாடல் தொடங்கினாலும் சரணத்தில் முத்தங்கள் பற்றிய விளக்கத்தை கவிஞர் கொடுத்திருப்பார். அதாவது மெலிதான முத்தத்தில் சத்தேயில்லை என்று கூறி முத்தத்தில் மெல்லிய தன்மைக்கு எப்போதும் வேலையிருக்கக்கூடாது என்று குறும்போடும் காதலோடும் கவிப்பேரரசு எழுதியிருப்பார்.
முத்தம் முத்தம் முத்தமா: ஜீவா இயக்கத்தில் ஷாம், ஜோதிகா உள்ளிட்டோர் நடித்த படம் 12 பி. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த பாடல்கள் அனைத்துமே பக்கா ஹிட்டடித்தன. இதில் வரும் முத்தம் முத்தம் முத்தமா பாடல் இன்றுவரை பலரது ஃபேவரைட். அந்தப் பாடலையும் வைரமுத்துவே எழுதியிருப்பார். பாடலின் ஆரம்பத்திலேயே முத்தம் முத்தம் முத்தமா மூன்றாம் உலக யுத்தமா ஆசை கலையில் உச்சமா என்று கேட்டு முத்தம்தான் ஆசை கலையின் உச்சம் என்று எழுதியிருப்பார். அந்தப் பாடல் முழுக்கவே முத்தத்தை பற்றியும், முத்தம் கொடுத்தால் என்ன ஆகும் என்பது பற்றியும் எழுதி விளையாடியிருப்பார்.
முத்தம் முத்தம்: சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் தனுஷ் சாயா சிங் நடித்த திருடா திருடி படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் ஆஹா கூசுது முத்தம் முத்தம். தினா இசையமைப்பில் பா.விஜய் எழுதிய பாடல் அது. பாடல் முழுக்கவே முத்தம் பற்றியும், முத்தத்தில் இருக்கும் வகைகள் குறித்தும் எந்த வயது ஆண், பெண் கொடுப்பது எந்த வகை முத்தம் என்று அவ்வளவு டீட்டெயிலாக எழுதியிருப்பார். உதாரணமாக, 'ஆறு வயசு பொண்ணு தந்தா அன்பு முத்தம், 11 வயசு பொண்ணு தந்தா ஆச முத்தம், 8 வயசு பையன் தந்தா பாச முத்தம் 18 வயசு பையன் தந்தா பருவ முத்தம்' என்று எழுதிவிட்டு; ஆணுக்கு எந்த முத்தம் பிடிக்கும் பெண்ணுக்கு எப்படிப்பட்ட முத்தம் பிடிக்கும் என்று பலவிதமாக அந்தப் பாடலை பா.விஜய் அட்டகாசமாக எழுதியிருப்பார்.


Click it and Unblock the Notifications











