கமர்ஷியல் குப்பைகளுக்கு நடுவே இந்த ஆண்டு நல்ல படங்களை கொடுத்த டாப் 5 சிறந்த இயக்குநர்கள்!
சென்னை: முன்பெல்லாம் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் தான் முழுமையான படங்களாகவும் சூப்பரான படங்களாகவும் திரும்ப திரும்ப ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் படங்களாக இருந்தன. ஆனால், சமீப காலமாக கமர்ஷியல் படங்கள் என்கிற பெயரில் நல்ல பொழுதுபோக்கு படமாகவும் இல்லாமல் ரத்தமும், துப்பாக்கி சத்தமுமாகவே படங்கள் வெளியாகி வந்தன.
வசூல் ரீதியாக அந்த படங்கள் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்ற உதவினாலும், நல்ல படங்களை தமிழ் சினிமா இனிமேல் தராது என்கிற முடிவுக்கு ரசிகர்கள் வந்து விடாமல் இருக்க பல புதுமுக இயக்குநர்கள் தரமான படைப்புகளை குறைவான பட்ஜெட்டிலேயே கொடுத்து இந்த ஆண்டின் சிறந்த இயக்குநர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளனர்.
எச். வினோத், நெல்சன், லோகேஷ் கனகராஜ், மணிரத்னம் எல்லாம் ஃபேவரைட் இயக்குநர்கள் பட்டியலில் இடம்பெற்ற நிலையில், சிறந்த படங்களை கொடுத்த இயக்குநர்கள் லிஸ்ட்டை இங்கே பார்க்கலாம்.
டாடா - கணேஷ் கே பாபு: இந்த ஆண்டு தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் 10ம் தேதி பொங்கல் கொடூர ரிலீஸ் எல்லாம் முடிந்த பிறகு வெளியான ஃபீல் குட் படமான டாடா திரைப்படம் ரசிகர்களை தியேட்டருக்குச் சென்று பார்க்க வைத்தது. அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியான அந்த படத்தில் கவின், அபர்ணா தாஸ் அப்படியே வாழ்ந்து இருந்தனர். முதல் ஷாட்டில் எப்படி இருவரும் கட்டிலில் இருப்பது போன்ற ஃபிரேம் இடம்பெற்றிருக்குமோ அதே போல கிளைமேக்ஸில் அவர்கள் பக்கத்தில் அவர்களின் மகன் இருக்கும் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அயோத்தி - மந்திரமூர்த்தி: சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் மார்ச் மாதம் 3ம் தேதி வெளியான அயோத்தி திரைப்படத்தை மந்திரமூர்த்தி உணர்ச்சி பொங்க எடுத்திருப்பார். மதங்களை கடந்த மனிதம் முக்கியம் என பல படங்கள் வெளியானாலும், அந்த கருவில் உருவான சிறந்த படமாகவே அயோத்தி நிமிர்ந்து நிற்கிறது.

குட் நைட் - விநாயக் சந்திரசேகரன்: மே மாதம் 12ம் தேதி விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக் நடிப்பில் வெளியான குட் நைட் திரைப்படம். ஒரு குறட்டை விஷயத்தை வைத்துக் கொண்டு கணவன், மனைவி எப்படி அட்ஜெஸ்ட் செய்துக் கொண்டு காதலுடன் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதை அழகாக காட்டி அசத்தியிருப்பார்.

போர் தொழில் - விக்னேஷ் ராஜா: ஜூன் 9ம் தேதி வெளியான போர் தொழில் படத்தில் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி குறைந்த பட்ஜெட்டில் உருவாகி 50 கோடி வரை வசூல் ஈட்டி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்த இந்த படத்தையும் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா சிறப்பாக இயக்கி வியக்க வைத்திருந்தார். மறைந்த நடிகர் சரத்பாபுவை முதலாளியாகவே பார்த்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அவரை ஒரு சைக்கோவாக காட்டி அவரது நடிப்புத் திறமையையும் கடைசி படத்தில் காட்டி விட்டார் இயக்குநர்.

சித்தா - அருண்குமார்: செப்டம்பர் 28ம் தேதி எஸ்.யூ. அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் தயாரித்து நடித்த சித்தா படத்தின் கதை ரொம்பவே ரிஸ்க்கான போக்சோ சட்டம் பற்றிய கதையாக இருந்த நிலையிலும், குடும்பத்துடன் படம் பார்க்கும் அளவுக்கு எடுத்து எங்கேயும் மோசமான காட்சிகள் இடம்பெறாமல் அதே நேரத்தில் பிஞ்சுகளின் வலியை நெஞ்சில் கடத்தி கனக்க வைத்து விட்டார். உறவுகளின் மேன்மையையும் அவர் எடுத்துக் காட்டிய விதம் பலரது பாராட்டுக்களை அள்ளியிருந்தது. இந்த படங்கள் மட்டுமின்றி மாமன்னன், வடசென்னை, ஜோ, பார்க்கிங், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மாவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர்களும் அடுத்தடுத்து மேலும், சிறப்பான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுப்பார்கள் என நம்புகிறோம். வாழ்த்துகிறோம்!



Click it and Unblock the Notifications











