தடம் மாறும் தமிழ் சினிமா.. புது விதையை தூவும் மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ்.. கோலிவுட்டின் நம்பிக்கை
சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ். இதுவரை குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய படங்களை அந்த நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த முன்று படங்களுமே ஃபீல் குட் சினிமாவாக உருவானவை. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கின்றன. இதன் காரணமாக மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தடம் மாறிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை நலமான எதிர்காலத்தை நோக்கி பயணப்பட வைக்க ஆரம்பித்திருக்கிறது.
கோலிவுட்டில் ஒருகாலத்தில் அத்தனை ஃபீல் குட் சினிமாக்கள் வந்துகொண்டிருந்தன. மில்லினியம் வருடமான 2000த்தின் ஆரம்பத்திலிருந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள்வரை அந்தவகையான சினிமாக்கள் அதிகமாகின. ரிதம், மொழி, அபியும் நானும் என அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும். அந்த மாதிரியான படங்களை எல்லாம் இப்போதும் தரவிறக்கம் செய்தோ இல்லை ஓடிடியிலோ அல்லது டிவியில் போடும்போதோ மறக்காமல் பார்க்கும் ரசிகர் கூட்டம் இன்னமும் இருக்கிறது.
குறைந்துபோன ஃபீல் குட் சினிமா: ஆனால் வருடங்கள் செல்ல செல்ல அந்த மாதிரியான படங்கள் வருவது வெகுவாக குறைந்துவிட்டன. அதற்கு காரணமாக தலைமுறை இடைவெளி, இப்போதைய ட்ரெண்டிங் என ஏகப்பட்ட சாக்குகள் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதேசமயம் ஃபீல் குட் சினிமாக்கள் ஒருபக்கம் குறைய மறுபக்கமோ ரத்தம், குண்டு சத்தம், சண்டைகள் நிரம்பிய படங்கள் வருவது அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. அந்த மாதிரியான படங்கள் ஓவர் டோஸ் ஆனதன் காரணமாக ரசிகர்களுக்கும் ஒருவித சலிப்பு தட்டிக்கொண்டே வருகின்றன.
மற்ற மொழிகளில் ஃபீல் குட்: தமிழில் அந்த மாதிரியான படங்கள் குறைந்தாலும் தெலுங்கு, மலையாளத்தில் எல்லாம் வர தொடங்கின. பிரேமலு உள்ளிட்ட படங்களை சொல்லலாம். அந்த மொழி படங்களை பார்க்கும் தமிழ் ரசிகர்கள் இப்படியான சினிமாக்கள் ஏன் தமிழில் வருவதே குறைந்துபோய்விட்டன என்ற கேள்வியை தொடர்ந்து எழுப்பிக்கொண்டே வந்தார்கள். அப்படிப்பட்ட நிலைமையில்தான் கடந்த சில வருடங்களாகவே தமிழில் ஃபீல் குட் சினிமாக்களை தயாரித்துவருகிறது மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ்.

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ்: பெயருக்கு ஏற்றபடியே மில்லியன் டாலரை கொட்டி கொடுக்கலாம் என்ற அளவுக்கு தரமான படங்களை தர ஆரம்பித்திருக்கிறது அந்நிறுவனம். முதலில் மணிகண்டனை வைத்து குட் நைட் படத்தை தயாரித்திருந்தது. நாம் அன்றாட வாழ்க்கையில் கடந்து போகும் அல்லது கடக்க முடியாமலும் அதை வெளியில் சொல்ல முடியாமலும் இருக்கும் குறட்டையை மைய சரடாக வைத்து படம் உருவாக்கப்பட்டிருந்தது. சாதாரண விஷயம் என்று நினைக்கும் ஒன்றை மெயின் தீமாக வைத்து ஒரு முழு படத்தை தயாரிக்கும் தைரியம் கொண்ட அந்த நிறுவனத்தை பலரும் பாராட்டினார்கள். ரசிகர்களும் படத்தை வெற்றி பெற செய்தார்கள்.
துளிர்த்த நம்பிக்கை: பொதுவாக ஒரு நல்ல விஷயம் செய்தால் அந்த விஷயத்துக்கு வரவேற்பு இருந்தால்தான் அடுத்தடுத்து அதே மாதிரியான விஷயங்கள் செய்வதற்கு நம்பிக்கை வரும். குட் நைட் படத்தின் வெற்றி மில்லியன் டாலர் ஸ்டூடியோஸுக்கு அந்த நம்பிக்கையை அதிகரித்தது. அதன் பலனாக அடுத்தும் மணிகண்டனை வைத்து லவ்வர் திரைப்படத்தை தயாரித்தது. பொசசிவ் பிடித்த காதலர் என்ற பழைய டெம்ப்ளேட்டுக்குள்தான் அந்தப் படம் இருந்தது. ஆனால் இயக்குநரோ அதை அவ்வளவு எதார்த்தமாகவும், ஃபீல் குட்டாகவும் உருவாக்கியிருந்தார். ஒரு படைப்பாளிக்கு தயாரிப்பு நிறுவனம் கொடுக்கும் சுதந்திரம்தான் அந்தப் படைப்பு எந்த அளவு நன்றாக வருகிறது என்பதை தீர்மானம் செய்யும். அந்த சுதந்திரத்தை லவ்வர் இயக்குநருக்கு மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் கொடுத்தது. இதனை ஆரோக்கியமான ஒன்றாக பார்க்க வேண்டும்.
டூரிஸ்ட் ஃபேமிலி: கடைசியாக அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் வந்தது டூரிஸ்ட் ஃபேமிலி. ஈழத்து தொடர்பான கதைகளை தமிழ் சினிமா பதிவு செய்து வைத்திருக்கிறதுதான். கன்னத்தில் முத்தமிட்டால், உச்சிதனை முகர்ந்தால் போன்ற படங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் அவற்றில் போரும், போர் தொடர்பான வலிகளும் பிரதானமாக இடம்பெற்றிருந்தன. அது ஒருவகையில் முக்கியம்தான். இருப்பினும் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் தவறான பார்வையோடும், உச்சிதனை முகர்ந்தால் படம் ஒரு பிரசார தொனியிலும் படமாக்கப்பட்டதாக விமர்சனங்கள் அப்போது வந்தன.
ஆனால் இப்போது மில்லியன் டாலர் நிறுவனம் தயாரித்த டூரிஸ்ட் ஃபேமிலியோ அதற்கு நேர்மாறாக இதுவரை யாரும் பேசாத; ஈழத்தை சேர்ந்த ஒருவரின் குணாதிசயங்களையும், நல்லது செய்பவர் யாராக இருந்தாலும் அவருக்கு இந்த சமூகம் துணை நிற்கும் என்பதையும் அலட்டிக்கொள்ளாமல் மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது. முக்கியமாக ஃபீல் குட் படங்களுக்கு ரசிகர்கள் இன்னும் குறையவில்லை என்பதையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. அதுமட்டுமின்றி மற்ற தயாரிப்பு நிறுவனங்களின் பார்வையையும் இந்த மாதிரியான எதார்த்த சினிமாக்கள் மீது திருப்பவும் செய்திருக்கிறது. ரத்தங்களும், சத்தங்களும் சூழ்ந்து தடம் மாறிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை ஒரு நல்ல எதிர்காலத்தை நோக்கிய பயணத்துக்கு தயார் செய்ய ஆரம்பித்திருக்கும் மில்லியன் டாலர் ஸ்டூடியோஸுக்கு மில்லியன் கணக்கிலான நன்றிகள்.


Click it and Unblock the Notifications











