இன்று பதினாறு வயதினிலே ட்ரைலர்- ரஜினி, கமல், பாரதிராஜா பங்கேற்பு!
சென்னை: தமிழ் சினிமாவைப் புரட்டிப் போட்ட க்ளாஸிக் படமான பதினாறு வயதினிலே படத்தை டிஜிட்டலில் வெளியிடுகிறார்கள்.
இந்தப் புதிய வடிவத்தின் ட்ரைலர் இன்று சென்னையில் வெளியாகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி, கலைஞானி கமல்ஹாஸன், படத்தின் இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

புதிய பாதை
36 ஆண்டுகளுக்கு முன் ஸ்டுடியோவுக்குள் கிடந்த சினிமாவை வயல் வெளிக்கு அழைத்துப் போய் புத்துணர்ச்சி தந்த படம் என பதினாறு வயதினிலேயைக் குறிப்பிடுவார்கள். அதுவரை தமிழ் சினிமா காணாத கிராமத்தையும் கதை மாந்தர்களையும் பதினாறு வயதினிலே மூலம் அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா.

சப்பாணி
அழகிய இளம் பெண்களின் ஹீரோவாக நடித்து வந்த கமல் ஹாஸனுக்கு கோவணம் கட்டி நடிக்க விட்டார் பாரதிராஜா. தன் நடிப்பு வாழ்க்கைக்கு புதிய அர்த்தம் கிடைக்கப் போவதை உணர்ந்து, சப்பாணியாகவே வாழ்ந்திருந்தார் கமல் ஹாஸன்.

பரட்ட
படத்தில் எதிர்நாயகன் வேடம் ரஜினிக்கு. பரட்ட என்ற பெயரில் உள்ளூர் முரட்டு வாலிபராக பட்டையைக் கிளப்பியிருந்தார் ரஜினி. அவருக்கு இதில் எடுபிடியாக நடித்திருந்தார் கவுண்டமணி. பரட்டைக்கு மசாஜ் பண்ணிவிடுபவராக வருவார் கமல்.

இது எப்படி இருக்கு?
இந்தப் படத்திலேயே ரஜினியின் பஞ்ச் டயலாக் அட்டகாசம் ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு வில்லங்கமான வசனத்தைப் பேசிய பிறதும் இதெப்டி இருக்கு என அழுத்திச் சொல்லி அட்டகாசமாக சிரித்து மனசை அள்ளினார் ரஜினி.

மயிலு...
மறக்க முடியுமா மயிலுவாக வந்த ஸ்ரீதேவியை. ஒவ்வொரு இளைஞனையும் கிறங்கடித்த பாத்திரமாயிற்றே. அச்சு அசல் கிராமத்து அழகியாக மனங்களைக் கொள்ளை கொண்டார் ஸ்ரீதேவி.

அந்த மாட்டு டாக்டர்...
படத்தில் மயிலுவை காதலித்து ஏமாற்றும் கால்நடை டாக்டர் வேடத்தில் வந்தவரையும் மறக்க முடியாது. அதேபோல குருவம்மாவாக வந்த காந்திமதி, பத்தவச்சிட்டியே பரட்ட என்ற வசனத்தோடு அறிமுகமான கவுண்டமணி... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இசைஞானியின் இசை ராஜ்ஜியம்
படத்தில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு இணையான ஆதிக்கம் செலுத்தியவர் இளையராஜாதான். பாடல்கள், பின்னணி இசையில் தமிழ் சினிமாவுக்கே புதிய பரிமாணத்தைத் தந்திருந்தார். அத்தனை பாடல்களும் ஹிட்.

செந்தூரப் பூவேவுக்கு தேசி விருது
படத்தில் கங்கை அமரன் எழுதி, எஸ் ஜானகி பாடிய செந்தூரப் பூவே பாடலுக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.

கவியரசர்
சோளம் விதைக்கையிலே, செவ்வந்திப் பூ முடிச்ச, ஆட்டுக்குட்டி முட்டையிட்டு ஆகிய மூன்று பாடல்களை கவியரசு கண்ணதாசன் எழுதியிருந்தார். இவற்றில் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடல் இன்றுவரை இணையற்ற கிராமத்துப் பாடலாகத் திகழ்கிறது. படத்தில் இடம்பெறும் மஞ்ச குளிச்சு அள்ளி முடிச்சி பாடலை ஆலங்குடி சோமு இயற்றியிருந்தார்.

36 ஆண்டுகளுக்குப் பிறகு
இத்தனை சிறப்பு வாய்ந்த 16 வயதினிலே படத்தை 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டிஜிட்டலில் வெளியிடுகிறார்கள். படத்தின் ட்ரைலர் இன்று கமலா திரையரங்கில் வெளியாகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல், பாரதிராஜா ஆகியோர் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் இன்னொரு ஹீரோ இளையராஜா மட்டும் வரமாட்டார் எனத் தெரிகிறது.

நினைத்தாலே இனிக்கும்...
ரஜினி, கமல் நடித்த நினைத்தாலே இனிக்கும் படம் டிஜிட்டலில் இன்று வெளியாகும் நிலையில், இந்த இரு இமயங்களின் அடுத்த க்ளாஸிக் படமும் டிஜிட்டலில் வெளியாகத் தயாராவது இருவரின் ரசிகர்களுக்குமே கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











