twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தலைமுறைகள் கடந்த மகத்தான கலைஞன் - வடிவேலு #HBDVadivelu

    By Vignesh Selvaraj
    |

    வடிவேலு - சில தலைமுறைகளை தன் நகைச்சுவையால் மகிழ்வித்த கலைஞன். வடிவேலு எனும் பெயர் காதில் விழும்போதே பலருக்கு பி.பி குறையும். அவரை நம்பித் தொடங்கப்பட்ட காமெடி சேனல்கள் இன்றும் அவரது படங்களின் காமெடி காட்சிகளையே முக்கால் வாசி நேரங்களில் ஒளிபரப்பி வருவதைப் பார்த்தாலே அவரது மார்க்கெட் புரியும். வடிவேலுவின் தொடர்ச்சியான நகைச்சுவைப் பயணத்தில் கொஞ்சம் கேப் விழுந்துவிட்ட போதிலும், நமது வாழ்வின் ஒரு நாளையும் வடிவேலு இல்லாமல் கடப்பது மிகக் கடினமாகத்தான் இருக்கிறது.

    காலையில், நடந்து செல்லும்போதோ, டூ-வீலரில் செல்லும்போதோ உரசுவது போல் யாராவது வந்தால், கோபம் வருவதை விடுத்து,' ஓனருன்னா ஓரமா போ' எனும் டயலாக்கோ 'ஏய்... ஏய்...எங்க வந்து முட்டுற' எனும் வசனமோ தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. வடிவேலு இல்லாததொரு வாழ்வை பலரால் நினைத்துக் கூடப் பார்க்க முடிவதில்லை. எல்லாக் கணங்களுக்கும் கண்ணீர் முட்டும் சிரிப்பை பரிசாகக் கொடுத்தவர் வடிவேலு.

    Vadivelu birthday special article

    யாராவது ஒருவர் நம்மையே குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டிருந்தாலோ, 'எக்ஸ் கியூஸ்மி இந்த அட்ரஸ் எங்க இருக்குனு சொல்ல முடியுமா' என யாராவது ஒருவர் கேட்டாலோ... நம்ம மைண்டு வேற அங்கேயே போகுது என்பதைப் போல அனிச்சையாய் நினைவடுக்கில் வந்தமர்வார் வடிவேலு. பலருக்கும் வடிவேலு காமெடி அற்ற கணங்கள் வாழ்வின் கொடுங் கணங்கள். வடிவேலுவின் வசனங்களை மட்டுமே பேசிக்கூட நகைச்சுவையாக ஒரு நாளைக் கடந்துவிட முடியும். அந்த ஒப்பற்ற கலைஞனை நினைவுகூர அத்தனை இருக்கிறது.

    பலரது காதல் தோல்விக்கு இளையராஜாவும், நா.முத்துக்குமாரும் எப்படி மருந்தாகிப் போனார்களோ அதேபோன்றதொரு பாஸிட்டிவ் வைப்ரேஷன் தரக்கூடிய மனிதர் வடிவேலு. யார் அறிவார்? 'என்னடா தொண்டையக் கவ்வுது..?' 'விஷம் அப்டிதான்ணே இருக்கும்...' என பூச்சி மருந்து குடிக்கப் போகிறவர்களைக் கூடக் காப்பாற்றியிருக்கலாம் வடிவேலு.

    ஒவ்வொரு படத்திலும் வித்தியாச கெட்டப், வித்தியாசமான கேரக்டர் என எல்லா விதமான பரீட்சார்த்த முயற்சிகளையும் செய்து பார்த்தவர் வடிவேலு. போலீஸ் கேரக்டராகவே ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இரண்டுக்கும் இடையே ஒற்றுமையைக் கண்டுபிடிக்க முடியாதவண்ணம் ஒன்றுக்கொன்று வெரைட்டி காட்டியிருப்பார். லோக்கல் ரௌடி கேரக்டரில் நடித்திருந்தாலும், டான் கேரக்டரில் நடித்திருந்தாலும், ஒரு படத்தின் சாயலை இன்னொரு படத்தில் துளியும் பார்க்க முடியாது. புகழ்பெற்ற வசனம் என்பதற்காக அதே வசனங்களை அடுத்த படத்தில் பேசும் மற்ற காமெடியன்களைப் போல அல்லாமல், ஒவ்வொரு படத்திலும் அவர் பேசும் டயலாக் வைரல் ஆகியிருக்கிறது.

    Vadivelu birthday special article

    பிறரைக் கலாய்த்தலே காமெடி என இருந்த முந்தைய காலகட்டத்தில் நாகேஷுக்குப் பிறகு சுய பகடியை விரும்பிச் செய்தவர் வடிவேலு. தன்னைத்தானே பகடி செய்து கொள்ளல், யாரையாவது ஏமாற்றி கூட்டத்தில் அடிவாங்கி குத்துயிரும், குலையுயிருமாகத் தப்பிப்பது என தான் நடிக்கும் கேரக்டர் மூலம் சமூகத்தில் உலவுகிற போலி மனிதர்களின் முகத்திரையைக் கிழித்திருக்கிறார். நாதாரித்தனம், கேப்மாரித்தனம், மொள்ளமாரித்தனம் என இவர் செய்தது எல்லாமே சமூகத்தில் நிஜமாகவே அப்படி உலவும் மனிதர்களைத் தோலுரிக்கும் வேலை.

    இன்னொரு பிரதேசத்திலிருந்து எழுதிக் கொணர்வது அல்ல... நம் அன்றாட வாழ்வில் நிகழ்பவையே அற்புத நகைச்சுவை. அப்படி, நம் வாழ்வில் நிகழ்கிற ஒவ்வொரு பொழுதுகளையும் நகைச்சுவையாக மாற்றியவர் வடிவேலு. சீரியஸான பல விஷயங்களைச் செய்யும்போது கூட அவரது நினைவுக்கு வந்து சிரித்து வைப்பதெல்லாம் நம் எல்லோருடைய வாழ்விலும் சிலமுறைகளாவது நிகழ்ந்திருக்கும்.

    வடிவேலு நடித்த பல படங்கள் அதன் நகைச்சுவைக் காட்சிகளுக்காகவே நினைவுகூரப்படுபவை. வேறெந்தச் சிறப்பும் இல்லாதிருந்தாலும் வடிவேலு எனும் ஒற்றை மனிதரால் காப்பாற்றப்பட்ட படங்கள் ஏராளம். வடிவேலுவின் பாடி லாங்குவேஜும், வசன நடையுமே நகைச்சுவையின் அஸ்திவாரத்தை நறுக்கெனப் போடக் காரணம். சாதாரண வார்த்தைகள் வடிவேலுவின் மொழிநடையால் நகைச்சுவையாக்கின. அவரது ரசிகர்கள் அன்றாடம் பேசும் வார்த்தைகள் கூட அவரது ஸ்லாங்கிலேயே பேசப்படுவதுதான் ஒப்பற்ற நகைச்சுவைக் கலைஞனுக்குக் கிடைத்த வெற்றி.

    'ஏன்?' 'வேணாம்... வேணாம்', 'அவ்வ்வ்', 'ஆஹஹஹா' 'ம்ம்க்கும்', 'போவியா...' 'எது?' என சாதாரண வார்த்தைகளிலேயே நர்த்தனம் புரிந்தவர் வடிவேலு. அவர் வசனத்தில் சேராத வரைக்கும்தான் அவை வார்த்தைகள். அவர் பேசிவிட்டால் அது வைரல். இவையெல்லாம் ஒன்றும் ஒரு இரவில் நடக்கிற காரியமல்ல. இதற்குப் பின்னே லட்சக்கணக்கானோரை துன்பங்களில் சிரிக்க வைத்த அவரின் நகைச்சுவைத் திறன் இருக்கிறது. மொழி புரியாதவர்களையும் தனது உடல்மொழியின் மூலமாகவே சிரிக்க வைத்துவிடுகிறவர் வடிவேலு.

    நகைச்சுவை மட்டுமல்லாது குணச்சித்திர வேடங்களிலும் பட்டையைக் கிளப்பியவர் வடிவேலு. தங்கைப் பாசம், தாய்ப் பாசம் (தாய்ப்பாசத்துல நம்மள மிஞ்சுன ஆளா இருக்கானே... எனும் டயலாக் இங்கே ஞாபகம் வரலாம். இப்படி எல்லா தருணங்களிலும் தன்னை நினைவுபடுத்தும் நிகரில்லா கலைஞன் வடிவேலு.) என சென்ட்டிமெட் காட்சிகளிலும் தானும் கலங்கி, மற்றவர்களையும் கலங்கடித்திருப்பார். மதுரை மண்ணில் பாசமும், நேசமும் குழைத்து வளர்க்கப்பட்ட குழந்தையல்லவா வடிவேலு.

    சில வருடங்களாக தொடர்ச்சியாகப் படங்களில் நடிக்காவிட்டாலும், சமூக வலைதளங்களை முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கின்ற ஒரு கலைஞன் வடிவேலு. மீம்ஸ் எனும் நகைச்சுவையின் வடிவம் இன்று சமூக ஊடகங்களில் கோலோச்சுவதற்கான காரணங்களில் முக்கியமானவர் வடிவேலு என்பதை நிச்சயமாக யாராலும் மறுக்க முடியாது. கலையின் சிறப்பு அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவதன் மூலமே தொடந்து வாழ்ந்துகொண்டிருக்கும். நகைச்சுவை எல்லாத் தலைமுறையினருக்கும் அத்தியாவசியமான உணர்வு.

    இந்த டிஜிட்டல் நாகரீக வாழ்வில் கம்ப்யூட்டர் திரைகளுக்கு மத்தியில் நம்மைக் கொஞ்சமேனும் மகிழ்ச்சியாய் வைத்திருப்பவை வடிவேலுவை வைத்து உருவாக்கப்படும் மீம்ஸ். தமிழர்களை தனது நடிப்பால் மகிழ்வித்த ஒரு பெருங்கலைஞனின் பிறந்தநாளன்று மனதார வாழ்த்துவோம். ஆப்ப்பி பர்த்த்டே டூ யூ..!

    English summary
    Vaigaippuyal Vadivelu who entertained some generations with his comedies. Vadivelu is the only person who has made a stroke in character artist, comedian and as well as hero . Vadivelu, who is regarded as the Charlie Chaplin of Tamil Nadu, celebrates the 57-th birthday today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X