காதலர் தினம் - திரைப்படங்களில் பதிவு செய்யப்பட்ட காதலின் நிலைகள்.. ஒரு பார்வை

சென்னை: காதலை மையப்படுத்தி தமிழில் காலங்காலமாக பல சினிமாக்கள் வந்திருக்கின்றன; இனியும் வரவிருக்கின்றன. ஆனால் தமிழ் சினிமா பல காதல்களை காட்சிப்படுத்தியிருக்கிறது. அதுகுறித்த ஒரு பார்வை.

பிப்ரவரி 14. இந்த நாள் வந்தாலே உலகம் கூடுதல் உற்சாகம் கொள்ளும். காதலர் தினத்தன்று பல காதல்கள் வெளியில் சொல்லப்படும், பல ரோஜாக்கள் சிரித்தபடி பலருக்குள் இடம் மாறும்; பலரது கண்கள் காதலை பற்றிய கனவுகளில் மூழ்கும். பலரது காதுகள் காதல் பாடல்களை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும்; தொலைக்காட்சிகளில் காதல் படங்கள் திகட்ட திகட்ட ஒளிபரப்பப்படும். இப்படி பல விஷயங்கள் காதலை சுற்றியே அன்றைய தினம் நடக்கும்.

சினிமாக்கள் எப்போதும் காதலை மையப்படுத்தியே எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தற்போது பல ஜானர்களில் இயக்குநர்கள் கதை யோசித்தாலும் பெரும்பாலும் காதல் சம்பந்தப்பட்ட காட்சிகள் அந்த ஜானருக்கு தானாகவே இடம்பெற்றுவிடும். ஏனெனில் காதல் என்பது யாராலும் தவிர்க்க முடியாது ஒன்று. தமிழ் சினிமாவிலும் ஏகப்பட்ட காதல் கதைகள் வந்திருக்கின்றன. ஆனால் காதலின் படிநிலைகளை பல தமிழ் சினிமாக்கள் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றன. அவற்றில் சில குறித்து ஒரு பார்வை.

விண்ணைத்தாண்டி வருவாயா:

விண்ணைத்தாண்டி வருவாயா:

காதல் என்பது நிகழ்த்தப்படுவது இல்லை நிகழ்வது என்பதை ஆணித்தரமாக உணர்த்திய படம் விண்ணைத்தாண்டி வருவாயா. எதேச்சையாக ஜெஸ்ஸியை (த்ரிஷா) பார்க்கும் கார்த்திக்கிற்கு (சிம்பு) உடனடியாக காதல் தொற்றிக்கொள்ளும். ஆனால் ஜெஸ்ஸி கட்டுப்பாடான குடும்பத்திலிருந்து வந்ததால் கட்டுப்பாட்டை மீறி காதலில் விழுவதா இல்லை கட்டுப்பாட்டுக்குள்ளேயே சிக்கிக்கொள்வதா என்ற குழப்பத்திலேயே இருப்பார். ஜெஸ்ஸி போல்தான் பல பெண்கள் கட்டுப்பாட்டுக்குள் சிக்கி காதலை இழக்கிறார்கள் என்ற கூற்று இருக்கும் சூழலில் அதை கனகச்சிதமாக பதவு செய்தார் இயக்குநர் கௌதம் வாசுதேவ்.

ஒருகட்டத்தில் ஜெஸ்ஸிக்கும் காதல் நிகழ்ந்துவிட திடீரென மாறும் சூழல்களால் கார்த்திக்கிடமிருந்து விலகும்போதும்; இருவரும் அமெரிக்காவில் சந்திக்கொள்ளும்போதும் ஏன் இவர்களது காதல் நிறைவேறவில்லை என்ற ஏக்கம் ரசிகர்களிடம் எழுந்ததுதான் அந்தப் படத்தின் ஆன்மா. குறிப்பாக தனக்கும், ஜெஸ்ஸிக்கும் நடந்த நிகழ்வுகளையே கார்த்திக் படமாக எடுத்ததும், அதை ஜெஸ்ஸியுடனே அமர்ந்து பார்த்ததும் ஒரு கவிதை டச். இன்னமும் விண்ணைத்தாண்டி வருவாயா எல்லோரது ஃபேவரைட்.

96:

96:

"16 வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம்" என கவிஞர் வைரமுத்து எழுதியதுபோல் பள்ளிப்பருவத்தில் ஏன்?எதற்கு? என்று தெரியாமல் வருகிற காதலும்; வாழ்க்கையில் எந்த நிலைக்கு சென்றாலும் அந்த பள்ளிப்பருவ காதல் மறக்காமல் இருப்பதும் ஒரு அதிசயம்தானே?

அந்த அதிசயத்தை அச்சுப்பிசகாமல் பதிவு செய்த சினிமா 96. ஒளிப்பதிவாளர் ப்ரேம் இயக்கத்தில் வெளியான படம் 96. விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் இணைந்து நடித்திருந்த இந்தப் படம் ஒரு க்ளாசிக்கல் சினிமா. ஜானு என்ற கதாபாத்திரத்தில் த்ரிஷா வரும் ஒவ்வொரு சீனும் ஃபீல் குட் கவிதை. முக்கியமாக ராம் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் விஷயம் தெரியவரும்போதும்; ஜானுவின் திருமணத்திற்கு ராம் சென்றதை அறிந்துகொள்ளும்போதும் ஜானு அனுபவித்த வலிகளை எளிதாக கடந்து செல்ல முடியாது என்பதுதான் உண்மை.

படத்தின் இறுதியில் ஜானு சிங்கப்பூர் செல்லும்போது ராமின் தலையில் கை வைத்துவிட்டு செல்லும் காட்சி ஒவ்வொரு ரசிகனையும் அவனுடைய நிறைவேறாத காதலுக்குள் இழுத்து சென்று நிறுத்தியது.

பார்க்காத காதல்:

பார்க்காத காதல்:

காதல் சினிமாக்களுக்கு வலுவான அடித்தளம் அமைத்த படங்களில் முக்கியமான படம் காதல் கோட்டை. பார்த்தால்தான் காதல் வருமா என்ன? அதெல்லாம் இல்லை; பார்க்காமலும் காதல் வரும் என அடித்து ஆடிய படம்தான் காதல் கோட்டை. அஜித்தின் கேரியரில் இந்தப் படத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு.

ராஸ்தானில் இருக்கும் சூர்யாவுக்கும், ஊட்டியில் இருக்கும் கமலிக்கும் இடையே கடிதத்தின் வழியே காதல் வளர்ந்த கதை. அகத்தியன் இயக்கிய இந்தப் படம் தேசிய விருதை வென்றது. அதுமட்டுமின்றி பார்க்காமல் காதல் செய்வது ஒன்றும் அவ்வளவு பெரிய கடினம் இல்லை என்பதையும் ரசிகர்களுக்கு ஊர்ஜிதப்படுத்தியது.

இதயம்:

இதயம்:

"கொடிதினும் கொடிது இளமையில் வறுமை.;அதனினும் கொடிது சொல்லாமல் காதலை உள்ளே வைத்திருக்கும் இளமை". காதல் படங்கள் என்ற சொல்லுக்கு முழு அகராதி இயக்குநர் கதிர். அவரது முதல் படமான இதயம் இன்றுவரை பலரது இதயங்களில் ஆறாத ரணம்.

மருத்துவம் படிக்கும் ராஜாவுக்கு (முரளி) தனது வகுப்பு தோழியான கீதா (ஹீரா) மீது காதல். ஆனால் காதலை சொன்னால் எங்கு நட்பு உடைந்துவிடுமோ என்ற பயத்திலேயே தனது காதலை சொல்லாமல் மனதுக்குள் பூட்டி வைத்து கல்லறை கட்டிய கதை. இப்போது இந்தப் படத்தை பார்த்தாலும் கலங்காதவர்கள் வெகுசிலரே. காதல் படங்களில் இதயம் படத்திற்கு எப்போதும் டாப் 5க்குள் இடம் இருக்கும். ஏனெனில் எப்போதும் சொல்லாத காதல்கள் இருந்துகொண்டேதான் இருக்கும்.

குட்டி:

குட்டி:

ஒருதலை காதல் என்பது கடக்க முடியாத நிலை. அந்தப் பெண் தன்னை விரும்புகிறாளா இல்லையா என தெரிந்துகொள்வதற்குள் ஆயுள் முடிந்துவிடும். ஆனால் அந்த காதலின் ஆயுள் மட்டும் என்றும் முடியாது. ஏனெனில் ஒருதலை காதலில்தான் சண்டைகள் அதிகம் நிகழாது. விருப்பப்பட்டவளின்/விருப்பப்பட்டவனின் விருப்பத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்ய ஒரு உயிர் எப்போதும் தயார் நிலையில் இருக்கும்.

ஒருதலை காதல் என்றாலே எப்போதும் சோகம்தான் என்ற ஸ்டீரியோ டைப்பை உடைத்ததில் குட்டி படத்திற்கு தனி இடம் உண்டு. குட்டியாக வரும் தனுஷ் கீதாவான ஸ்ரேயா மீது வைத்திருந்த காதலும், அவரது சுட்டித்தனங்களும் படம் முழுக்க ரசிக்க வைக்கும்.

அதேசமயம் படத்தின் க்ளைமேக்ஸில் திருமண மண்டபத்தில் வைத்து கீதாவிடம் குட்டி, "இத்தனை வருஷத்துல ஒருதடவைகூட என் மேல் லவ் வரலையா" என கேட்குமிடத்திலும், "நானும் மனுஷன்தான் எனக்கும் வலிக்கும்" என சொல்லும் இடத்திலும் ஒருதலை காதலுக்கு பின் எவ்வளவு பெரிய வலி இருக்கிறது; தான் நேசித்த உயிருக்காக எதையும் விட்டுக்கொடுக்க ஒரு உயிர் தயங்காது என்பதை அழகாக உணர்த்தியிருப்பார் இயக்குநர்.

ஆட்டோகிராஃப், வாரணம் ஆயிரம்:

ஆட்டோகிராஃப், வாரணம் ஆயிரம்:

காதல் என்பது ஒருமுறைதான் வரவேண்டும். அப்படி வந்தால்தான் அது நல்ல காதல்; அடுத்தடுத்து வந்தால் அதற்கு பெயர் வேறு என பிற்போக்குவாதிகள் பலர் கூறுவார்கள். ஆனால் காதலில் அப்படி ஒரு நியதி இல்லை என்பதுதான் இயற்கை. ஒரு காதல் முறிவுக்கு பிறகு இன்னொரு காதல் வருதல் என்பது மோசம் என்ற போலித்தனத்தை உடைத்து நொறுக்கிய படங்களில் முக்கியமானவை ஆட்டோகிராஃப், வாரணம் ஆயிரம்.

சேரன் இயக்கிய ஆட்டோகிராஃப் படத்தில் சேரனுக்கு பள்ளிப்பருவத்தில் ஒரு காதல், கல்லூரிப் பருவத்தில் ஒரு காதல் வரும். ஆனால் இரண்டு காதல்களும் நிறைவேறாது. இருப்பினும் க்ளைமேக்ஸில் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்வார். அது ஒன்றும் பெரிய கொலை குற்றம் இல்லை. ஒரு சூழ்நிலை காதலை பிரித்துவிட்ட பிறகு அந்த நினைவுகளுக்குள்ளேயே தேங்கி கிடந்தால் வாழ்க்கை எப்படி சீரழியும் என்பதை இயக்குநர் சேரன் இதனது இயக்கத்திலும், நடிப்பிலும் மிக எளிதாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருப்பார்.

அதேபோல் வாரணம் ஆயிரம் படத்திலும் மேக்னா இறந்துபோன பிறகு மேக்னாவின் நினைவுகளில் தேங்கி சின்னாபின்னமாகிக்கொண்டிருந்த சூர்யாவை தேற்றியது மற்றொரு காதல் மட்டுமே. எனவே ஒரு காதல் தோல்வியை மறக்க அதிலிருந்து விடுபட இன்னொரு காதல் அவசியம் என்பதை ஆட்டோகிராஃப்பும், வாரணம் ஆயிரமும் உணர்த்தியிருக்கின்றன.

இப்படி பல நிலைகளை கொண்ட காதலை காதலித்து காதலர் தினம் கொண்டாட வாழ்த்துகள்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X