வேள்பாரி நாவலே காப்பியா?.. ஷங்கர் திடீரென இப்படியொரு எச்சரிக்கை கொடுக்க என்ன காரணம்?
சென்னை: தமிழ் சினிமாவில் மட்டுமின்றி ராஜமெளலிக்கு முன்னோடியாக இந்தியா சினிமாவிலேயே பிரம்மாண்ட படங்களை இயக்கி ஹாலிவுட் திரையுலகையே நம்ம நாட்டின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த பெருமை ஷங்கருக்கு உண்டு. ஜெண்டில் மேன் படத்தில் ஆரம்பித்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், ஐ, 2.0 என வரிசையாக பல பிரம்மாண்ட படங்களை கொடுத்தும் சிஜியில் இந்திய சினிமா இந்தளவுக்கு சிறந்து விளங்க அடித்தளம் அமைத்தவரும் ஷங்கர் தான்.
ஆனால், இந்த ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் ஷங்கரின் சாம்ராஜ்ஜியத்தை சீட்டுக்கட்டுப் போல சரிய வைத்து விட்டது.

இந்தியன் 3 திரைப்படம் ரெடியாகி வெளியாகுமா? என்கிற கேள்விகள் எழுந்து வரும் நிலையில், திடீரென வேள்பாரி பக்கம் திரும்பிய ஷங்கருக்கு அங்கேயும் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது தான் இப்படியொரு எச்சரிக்கை மணியை அவர் அடிக்க காரணம் என்கின்றனர்.
பொன்னியின் செல்வனே சொதப்பியது: இயக்குநர் ராஜமெளலி நான் ஈ, மகதீரா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் என வரிசையாக பிரம்மாண்ட படங்களை எடுத்து மிகப்பெரிய வசூல் வேட்டையை தெலுங்கு திரையுலகுக்கு கொடுத்து உலகளவில் தனது கொடியை நாட்டிவிட்டார். அதன் விளைவாக தமிழ் சினிமாவிலும் முன்னணி இயக்குநர்கள் பலர் வரலாற்று படங்களை இயக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் பாகம் ஓடிய அளவுக்கு 2ம் பாகம் ஓடவில்லை. அதற்கு காரணம் அந்த படம் ஒரு பிரம்மாண்ட டிராமா போன்றே இருந்தது என்றும் கிளைமேக்ஸில் மணிரத்னம் சில கதைகளையே மாற்றி அமைத்து விட்டார் என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்ட நிலையில் அந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடவில்லை.

வேள்பாரியை கையில் எடுத்த ஷங்கர்: இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், வேள்பாரி படத்தை இயக்கி நாமும் வரலாற்று படத்தைக் கொடுத்து மெகா பிளாக்பஸ்டர் அடிக்க வேண்டும் என்கிற முயற்சியில் ஷங்கர் தற்போது தனது கவனத்தை அந்த கதையின் மீது திருப்பியுள்ளார். சு. வெங்கடேசன் எழுதிய வேள்பாரி கதையில் இருந்து காப்புரிமை பெறாமல் பல படங்களில், பல வெப்சீரிஸ்களில் காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாகவும் சமீபத்தில் வெளியான டிரெய்லரில் அதுபோன்ற காட்சிகளை பார்த்து மனம் நொந்து போய் விட்டதாகவும் படத்தில் இருந்து அந்த காட்சிகளை நீக்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் ஷங்கர் எச்சரித்துள்ளார். இதுதான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக சென்றுக் கொண்டிருக்கிறது.

வேள்பாரி நாவலே காப்பியா?: கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி வள்ளல் என்பவரின் கதையைத்தான் சு. வெங்கடேஷன் வேள்பாரி எனும் நாவலாக எழுதியுள்ளார். ஆனால், அது தனது சொந்த கதையல்ல என்றும் இதற்கு முன் பலர் சொல்லியும் எழுதியும் வைத்திருக்கும் கதையைத் தான் வேள்பாரியாக தான் உருவாக்கியதாக சு. வெங்கடேசனே அந்த நாவல் வெளியீட்டு விழாவின் போது பேசியுள்ளதாக சோஷியல் மீடியாவில் பல எழுத்தாளர்கள் ஆதாரங்களுடன் அடுக்கி வருகின்றனர். கி.வா. ஜகந்நாதன் பாரி வேள் எனும் கதையை எழுதியுள்ளார். வேள்பாரி - காந்தி குமாரி, வேள்பாரி (நாடகம்) - அ.மு. பரமசிவானந்தம் (பச்சையப்பன் கல்லூரி), பாரி கதை - ரா. ராகவய்யங்கார், என பலர் பாரி வள்ளல் பற்றிய பல புத்தகங்களை சு.வெங்கடேசனுக்கு முன்பாகவே எழுதிவிட்டதாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஷங்கர் படத்தில் ஹாலிவுட் காட்சிகள்: இதற்கு முன்னதாக ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தில் ஐ ரோபோ படத்தின் காட்சிகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் கிளம்பின. அதே போல அந்த படத்தின் கிளைமேக்ஸில் பாம்பு போல ரோபோக்கள் மாறி ஹெலிகாப்டரை முழுங்கும் காட்சி D War படத்தில் இருந்து சுடப்பட்டதாக ட்ரோல்கள் பறந்தன. ஐ படத்தில் பியூட்டி அண்ட் தி பீஸ்ட் படத்தின் கதையை உல்டா பண்ணித்தான் படமே எடுத்திருப்பார் என்றும் "என்னோடு நீயிருந்தால்" பாடலிலும் பியூட்டி அண்ட் தி பீஸ்ட் கான்செப்ட் இருக்கும் என்றும் அப்போதே பலர் சுட்டிக்காட்டினர். இந்நிலையில், ஷங்கரிடம் இருந்து இப்படியொரு அறிவிப்பு வந்திருப்பதை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











