5 வருடங்களை கடந்த விஜய் சேதுபதியின் தர்மதுரை... பாராட்டும் ரசிகர்கள்
சென்னை : டைரக்டர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து 2016 ல் ரிலீசான படம் தர்மதுரை. வித்தியாசமான கிராமத்து, குடும்ப காதல் கதையாக இந்த படம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 2 ஹீரோயின்கள் நடித்திருந்தனர்.
தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆர்.கே.சுரேஷ் தயாரித்த இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். 2016 ம் ஆண்டு ஆகஸ்ட் 19 ம் தேதி இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் ரிலீசாகி இன்றோடு 5 ஆண்டுகள் ஆகிறது.

கிராமத்தில் படிக்காத குடும்பத்தில் இருந்து வந்து டாக்டர் ஆகும் தர்மதுரை கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். கல்லூரியில் உடன் படிக்கும் தோழிகளான சுபாஷினியாக தமன்னாவும், ஸ்டெல்லாவாக ஷிருஷ்டி டாங்கேவும் விஜய் சேதுபதியை காதலிக்கிறார்கள். ஸ்டெல்லா தன் காதலை விஜய் சேதுபதியிடம் வெளிப்படுத்துகிறார். ஆனால் சுபாஷினி வெளிப்படுத்தாமல் தனக்குள்ளேயே வைத்துக் கொள்கிறார்.
கல்லூரி படிப்பை முடித்து சொந்த கிராமத்திலேயே சேவை செய்ய புறப்படும் ஹீரோ விஜய் சேதுபதிக்கு, வீட்டில் பார்க்கும் பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷ் மீது காதல் ஏற்படுகிறது. ஆனால் அதற்கு பிறகு ஏற்பட்ட குடும்ப தகராறில் அவர்களின் திருமணம் நடைபெறாமல் போகிறது. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்கொலை செய்து கொள்கிறார். அவரின் பிரிவை தாங்க முடியாமல் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரியும் ஹீரோ, கடைசியாக கல்லூரி தோழியான சுபாஷினியை சந்திக்கிறார்.

ஐதராபாத்தை சேர்ந்த டாக்டரை திருமணம் செய்து, அவரால் கொடுமைப்படுத்தப்படும் சுபாஷினி கணவனை பிரிந்து வாழ்கிறாள். சுபாஷினி - தர்மதுரை இடையே இருந்த நட்பு, காதலாகிறது. இருவரும் ஒன்றாக வாழ ஆர்மபிக்கின்றனர். இதற்குள் வீட்டில் இருந்த பணத்தை தவறுதலாக விஜய் சேதுபதி எடுத்து வர, அதை வைத்து சகோதரர்கள் சண்டை போடுகின்றனர். பிரச்சனைகளை சமாளித்து மீண்டும் காதலர்கள் ஒன்று சேர்வது தான் படத்தின் கதை.
காதல், நட்பு, குடும்ப சென்டிமென்ட் என பலவற்றை கலந்து, சுவாரஸ்யமாக சொல்லியதே இந்த படத்தின் வெற்றிக்கு காரணம். தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அமைதியான, நல்ல படம் பார்த்த மனநிறைவை ரசிகர்களுக்கு கொடுத்தது.

கிராமத்தில் வாழும் குடிகார படித்த இளைஞராக படத்தின் ஆரம்பத்தில் விஜய் சேதுபதியை காட்டி இருப்பார்கள். ஆனால் பிளாஷ்பேக்கில் அழகான காதல் கதையை அதன் பின்னணியில் வடிவமைத்திருந்தனர். ஐஸ்வர்யா ராஜேஷ் - விஜய் சேதுபதி இடையேயான காதல் ஒரு ரகம் என்றால், தமன்னா - விஜய் சேதுபதி இடையேயான காதல் மற்றொரு ரகம்.
ஆரம்பத்தில் இந்த படத்திற்கு வசந்த குமரன் என பெயரிட்டு, ஸ்டூடியோ 9 ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் படம் தயாரிக்கப்பட்டது. ஹீரோயின்களாக நடிக்க லட்சுமி மேனன், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் காயத்ரியிடம் கேட்கப்பட்டது. பிறகு படத்தின் டைட்டில், ஹீரோயின்கள் என அனைத்தும் மாற்றப்பட்டது.
யுவன் சங்கர் ராஜா இசையில் வைரமுத்துவின் வரிகளில் 5 பாடல்கள் உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் மதிச்சியம் பாலா எழுதி, பாடிய மக்க கலங்குதப்பா பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஹிட்டானது. செம குத்து பாடலாக இந்த பாடல் ஹிட் ஆனது என்றால் மற்றொரு புறம், தென்றல் வருடுவது போன்று இதமாக அமைக்கப்பட்டிருந்தது வைரமுத்து எழுதிய எந்த பக்கம் பார்க்கும் போது பாடல். இந்த பாடல் வைரமுத்துவிற்கு தேசிய விருதினை பெற்றுக் கொடுத்தது.
சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த டைரக்டர், சிறந்த பாடல் வரிகள், சிறந்த துணை நடிகை என பல பிரிவுகளின் கீழ் ஏராளமான விருதுகளை இந்த படம் பெற்றது. நார்வே தமிழ் திரைப்பட விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை தர்மதுரை படம் வென்றது.


Click it and Unblock the Notifications











