விஜய் சேதுபதி மகன் சூர்யா அப்படி என்ன செய்துவிட்டார்?.. திருத்தலாம்.. இவ்வளவு திட்ட வேண்டுமா?
சென்னை: விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஃபீனிக்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியிருக்கிறார். வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படமானது ஜூலை நான்காம் தேதி வெளியாகவிருக்கிறது. ஆனால் சமூக வலைதளங்களில் சூர்யாவை கடுமையாக விமர்சிக்க தொடங்கியிருக்கிறார்கள் நெட்டிசன்ஸ்.
சினிமாவில் வெல்ல வேண்டும் என்ற வெறியோடு உழைத்து இன்று பெரிய இடத்தில் இருப்பவர் விஜய் சேதுபதி. நடிப்பில் எப்படி அவர் எதார்த்தமோ அதேபோல்தான் நேரில் பழகுவதற்கும். யாரிடமும் ஈகோ எதுவும் இல்லாமல் பழகும் அவர் வாழ்க்கையையும், மனிதர்களையும் வேறு ஒரு கோணத்திலிருந்து அணுகுபவர். அதன் காரணமாகவே அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதியின் மகன்: விஜய் சேதுபதிக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். மகன் சூர்யா சேதுபதி நானும் ரௌடிதான் படத்தில் சிறு வேடத்தில் தலை காட்டி பிறகு தந்தையுடன் சிந்துபாத் படத்தில் நடித்தார். அதனையடுத்து திரையிலிருந்து காணாமல் போன அவர் ஹீரோவாக அறிமுகமாவதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி அனல் அரசு இயக்கத்தில் ஃபீனிக்ஸ் படத்தில் நடித்திருக்கிறார் அவர். இதில் வரலட்சுமி உள்ளிட்டோர் எல்லாம் நடித்திருக்கிறார்கள்.

தன்னம்பிக்கைதான்; இருந்தாலும்: இந்தப் படத்தின் பூஜையிலிருந்தே சூர்யாவை சுற்றி நெகட்டிவிட்டிதான் பரவியது. அந்த விழாவில் பேசிய சூர்யா; 'அப்பா வேற நான் வேற' என்று பேசியிருந்தார். இதனை அவர் தன்னம்பிக்கையின் உச்சத்தில்தான் சொன்னார். ஆனால் அவர் தலைக்கனத்தின் உச்சத்தில் சொல்லிவிட்டதாக நெட்டிசன்களில் ஒருதரப்பினர் கூற ஆரம்பித்து கடுமையாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால் சூர்யாவோ அமைதியாகத்தான் இருந்தார்.
உருக்கமான சூர்யா: கண்டிப்பாக இந்த சிறு வயதில் அதுவும் முதல் படத்தின்போதே இவ்வளவு பெரிய ட்ரோல்களையும் விமர்சனத்தையும் சந்திப்போம் என்று அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார்தான். ஆனால் அது நடந்துவிட்டது. சமீபத்தில் நடந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், "எப்போதுமே என்னை நான் ரொம்பவே வீக்காகத்தான் நினைத்திருக்கிறேன். அந்த சர்ச்சைகள் வந்த பிறகு ஸ்ட்ராங்காக நடித்துவிடுவோமா என்ற குழப்பமும் இருந்தது. உள்ளே நான் வீக்காக ஃபீல் செய்தாலும் அதனை வெளியே யாரிடமும் காட்டிக்கொள்ளமட்டேன்அந்த சர்ச்சைகள் நடக்கும்போது தயாரிப்பாளர் ராஜலட்சுமியும் உறுதியாக என்னுடன் இருந்தார்" என்று உருக்கமாக பேசியிருந்தார்.
மீண்டும் மீண்டும்: நெட்டிசன்கள் செய்த ட்ரோல்களும், விமர்சனங்களும் எவ்வளவு பாதித்திருந்தால் அவர் மேடையில் இப்படி உருக்கமாக பேயிருக்க வேண்டும் என்பது விஜய் சேதுபதி ரசிகர்களின் கருத்து. சரி இத்தோடு முடித்துவிடுவார்கள் என்று பார்த்தால்; ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பபிள் கம்மை மென்றபடி சிலருக்கு கைகளை கொடுத்தும், பேசியும் இருந்தார் சூர்யா. இப்போது இதனையும் பிடித்துவிட்டார்கள் நெட்டிசன்கள்.
திருத்தலாம்; திட்டலாமா?: இப்போது அவரை சுற்றி வரும் ட்ரோல்கள் கண்டிப்பாக அவரை மேற்கொண்டு மன உளைச்சலுக்குத்தான் தள்ளும் என்பது பெரும்பாலானோரின் எண்ணம். முக்கியமாக சூர்யா ஆட்டிட்யூட் காண்பிக்கிறார்; அவர்தான் அடுத்த எஸ்டிஆர் என்று சொல்லி சம்பந்தமே இல்லாமல் சிம்புவையும் இதில் ஒருதரப்பினர் இழுத்துவருகிறார். அதனைப் பார்த்த ஒருதரப்பினரோ ஏன் இன்னொரு சிம்புவாக இருந்தால் என்ன தவறு?; அவரையும் இப்படித்தான் ஓவர் ஆட்டிட்யூட் என்று முத்திரை குத்தினார்கள்.
ஆனால் அவரோ தன் இயல்பில்தான் இருந்தார். அதனால்தான் இன்னமும் திரைத்துறையில் நீடித்துக்கொண்டிருக்கிறார். அதேபோல் சூர்யாவும் அவருடைய இயல்பில் இருக்கிறார். சினிமா என்பது பெரிய தளம். அதில் இப்படி நடந்துகொள்ளலாம் அப்படி நடக்கக்கூடாது என்று அட்வைஸ் செய்து சூர்யாவை திருத்தலாம்; ஆனால் இவ்வளவு திட்டக்கூடாது. அப்படி தொடர்ந்து நடக்கும்பட்சத்தில் நெட்டிசன்ஸே ஒரு நடிகரின் தன்னம்பிக்கையை குலைத்ததுபோல் ஆகிவிடும். எதற்கும் எங்கும் ட்ரோல் என்பது ஆரோக்கியமான ஒன்றாக தெரியவில்லை என்பதே பலரின் பார்வையாக இருக்கிறது.
அதேசமயம் இப்படியெல்லாம் செய்வதும் ஒருவகையில் திருத்துதல்தான் என்று ஒருதரப்பினர் தங்கள் வாதத்தை முன்வைக்கலாம். ஆனால் ஒருவருக்கு மன உளைச்சலையும் அழுத்தத்தையும் கொடுத்து திருத்துவது என்பது ஒருவரின் மனதை கொலை செய்வதற்கு சமம் என்பதுதான் எதார்த்தம் என நெட்டிசன்ஸ் புரிந்துகொள்ளுத்தல் நலம் என சேதுவின் ரசிகர்களும், சில நடுநிலையாளர்களும் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











