Exclusive - பரமசிவன் பாத்திமா.. உண்மை சம்பவத்தைத்தான் எடுத்திருக்கிறோம்.. விமல் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
சென்னை: நடிகர் விமல் கோலிவுட்டில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர். கடைசியாக அவர் நடித்ததில் விலங்கு வெப் சீரிஸ் மட்டும்தான் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. தற்போது அவர் பரமசிவன் பாத்திமா என்ற படத்தில் நடித்திருக்கிறார். கடந்த ஆறாம் தேதி ரிலீஸான அந்தப் படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. அதேசமயம் மதமாற்றம் குறித்து படத்தில் பேசப்பட்டிருப்பதால் விவாதமும் கிளம்பியிருக்கிறது. இந்நிலையில் ஃபில்மிபீட் தமிழுக்கு நடிகர் விமல் பிரத்யேகமாக பேட்டி கொடுத்தார்.
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் விமல். கில்லி, கிரீடம் உள்ளிட்ட படங்களில் ஒரு சில காட்சிகளில் தலைகாட்டியிருப்பார். இருந்தாலும் ஹீரோவாக நடிப்பதற்கு தொடர்ந்து முயன்று வந்தார் நடிகர் விமல். முயற்சியின் பலனாக சற்குணம் இயக்கத்தில் களவாணி படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார் விமல். சற்குணத்துக்கு அது முதல் படமாக இருந்தாலும் முதல் பட இயக்குநர் போல் இல்லாமல் படத்தின் மேக்கிங்கையும், கதையையும் அட்டகாசமாக வடிவமைத்திருந்தார்.
வாகை சூட வா படத்தில் கலக்கிய விமல்: களவாணியின் வெற்றிக்கு பிறகு மீண்டும் சற்குணத்துடன் இணைந்த விமல் வாகை சூட வா படத்தில் நடித்தார். கல்வியை அடிப்படையாக உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படத்தில் ஆசிரியர் வேடத்தில் நடித்திருந்தார் விமல். இந்தப் படமும் விமர்சன ரீதியாக ஹிட்டாக விமலின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது.
அதுமட்டுமின்றி அந்தப் படம் தேசிய விருதையும் வென்றது. இதுவரை விமலின் நடிப்பில் வெளியான மிகச்சிற்ந்த படமாக இது கருதப்படுகிறது. பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட விமலுக்கு திடீரென பட வாய்ப்புக்கள் குறைந்தன. இதனால் ஒருகட்டத்தில் நடிக்காமலே இருந்தார் விமல்.
விலங்கு மூலம் ரீ என்ட்ரி கொடுத்த விமல்: இதனையடுத்து விலங்கு வெப் சீரிஸ் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார் விமல். அந்த வெப் சீரிஸை பாண்டிராஜிடம் உதவியாளராக இருந்த பிரசாத் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். மொத்தம் 7 எபிசோட்களாக உருவான விலங்கு வெப் சீரிஸ், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் ஜீ5 ஓடிடியில் வெளியானது. இதில் விமல், இனியா, முனிஸ்காந்த், பாலசரவணன், மனோகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டிருந்த அந்த வெப் சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

பரமசிவன் பாத்திமா: இந்நிலையில் அவர் பரமசிவன் பாத்திமா என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் இயக்குநர் இசக்கி கார்வண்ணன், ஹீரோ விமல், ஹீரோயின் சாயா உள்ளிட்டோர் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி கொடுத்தனர். அந்தப் பேட்டியில் பேசிய விமல், "பரமசிவன் பாத்திமா படத்தின் கதையை ஃபர்ஸ்ட் டைம் கேட்கும்போதே எனக்கு பிடித்துவிட்டது. ஆனால் முதலில் இந்தக் கதையில் நான் பாதியில்தான் வருவதுபோல் இருந்தது. பிறகு இயக்குநரிடம் நான் முழுவதுமாக வரும்படி மாற்றுங்கள் என சொன்னேன். அதன் பிறகு அவரும் மாற்றினார்.
மொத்தம் பத்து வெர்ஷன்கள்: இந்தக் கதை மொத்தம் பத்து வெர்ஷன்களாக இருந்தன. ஷூட்டிங் போகும்போதுதான் ஃபைனல் வெர்ஷன் உறுதியானது. இது ஒரு எதார்த்தமான படம். இயக்குநர் அவரது வாழ்வியலில் இருந்து எடுத்திருக்கிறார். வாழ்வியலில் இருந்து எடுக்கும் படங்கள் நன்றாக இருக்கும். எளிதாக எல்லோரிடமும் கனெக்ட் ஆகும். அப்படித்தான் எனக்கும் கனெக்ட் ஆனது. இந்தப் படத்தில் பரமசிவனும் பாத்திமாவும் உறவுக்காரர்கள்தான். ஆனால் பரமசிவன் மதம் மாறவில்லை. பாத்திமா மதம் மாறிவிட்டார் அவ்வளவுதான்" என்றார்.
இயக்குநர் சொன்னது: அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் இசக்கி கார்வண்ணன், 'விமல், அவரது அண்ணன், தம்பி இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்களில் அண்ணனோ, தம்பியோ மதம் மாறியிருக்கலாம். விமல் மாறாமல் இருக்கலாம். அவர்களுக்குள் சண்டை வரும்போது அண்ணன், தம்பி சண்டை என்றுதானே சொல்ல வேண்டும். ஆனால் மத கலவரம் என்று சொல்வார்கள். இரண்டு மனிதர்கள் சண்டை போடுகிறார்கள் என்று சொல்லுங்கள். ஏன் மத கலவரம் என்று சொல்ல வேண்டும். இது வளர்ச்சியை பின்னோக்கித்தான் இழுக்கும்.
கிறிஸ்தவர்களை தவறாக காண்பித்தேனா?: படத்தில் நான் யாரையும் தவறாக காட்டவில்லை. எந்த மதத்தினரையும் தவறாக காண்பிக்கவில்லை" என்றார். அப்போது குறுக்கிட்ட விமலோ, 'ட்ரெய்லரை வைத்து பேச வேண்டாம். படத்தை பார்த்தால் இந்தக் கருத்து வெளியே வராது. இயக்குநர் அவரது ஊரில் நடந்த நடந்துகொண்டிருக்கிற உண்மை சம்பவத்தை வைத்துத்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











