மேடைக்கொரு வேஷம் போடும் விவேக் ஓபராய்!

சிலர் திரையில் மட்டும் நடிப்பார்கள்... சிலர் நிஜத்தில் நடித்து திரையில் கோட்டை விடுவார்கள்... சிலரோ மேடையின் நிறத்துக்கேற்ப மாறி மாறி நடித்துக் கொண்டே இருப்பார்கள். இந்தி நடிகர் விவேக் ஓபராய் இந்த மூன்றாவது ரகம்.
போகிற இடமெல்லாம் அந்த ஊருக்கேற்ற மாதிரி தனது பிறப்பையும் வளர்ப்பையும், கருத்தையும் மாற்றிக் கொண்டே இருப்பார்.
சில தினங்களுக்கு முன் தனது பிரின்ஸ் படத்துக்காக கோவைக்குப் போனவர், நான் கோயமுத்தூரில் பிறந்தவன், பாதித் தமிழன் என்றார்.
அடுத்த ப்ளைட்டில் சென்னை பிரஸ் மீட்டுக்கு வந்தவர், "நான் மெட்ராஸ்காரன். சிந்தாதிரிப் பேட்டையில்தான் பிறந்தேன். என் பாட்டி இங்கு இருக்கிறார். என் அம்மா ஒரு தமிழ்நாட்டுக்காரர் தான்..." என்று அடித்துவிட, நம்ம பிரஸ் மக்களும் ஆ வென பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இப்போது விவேக் ஓபராய் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்ட மண்ணில் நின்று கொண்டு, "இலங்கை எனக்கு ரொம்பப் பிடித்த நாடு. இங்கிருக்கும் பெண்கள் ரொம்ப அழகானவர்கள். அவர்களைப் பார்த்த பிறகுதான், எனக்கு இன்னும் கல்யாணமாகாததை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.
எனக்கு பிடித்த ஒரே நாடு இலங்கைதான். நான் இந்த நாட்டை மேம்படுத்த விரும்புகிறேன். சுற்றுலாத்துறையோடு சேர்ந்து முன்னேற்றத் திட்டங்களை வகுக்கப் போகிறேன்..." என்று பேட்டியளித்துள்ளார்.
இன்று இன்னும் ஒரு படி மேலே போய், "இந்த விழாவை தமிழ்த் திரையுலகம் புறக்கணித்தது கவலை தருகிறது. எனக்கும் தமிழகத்திற்கும் நெருங்கிய உறவு இருக்கிறது. இந்த திரைப்பட விருது வழங்கும் விழாவை அவர்கள் புறக்கணித்திருக்கக் கூடாது" என்றார்.
மேலும் கொழும்பி்ல் இருந்தபடி வட இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தொடர்ந்து பேட்டிகளைத் தந்து வரும் ஓபராய், இலங்கையில் நடக்கும் திரை விழாவுக்கு முடிந்த வரை பப்ளிசிட்டி தேடித் தர படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்துடன் நெருங்கிய உறவுள்ளவர் செய்கிற வேலையா இது!


Click it and Unblock the Notifications











