சிவாஜி சொன்ன குட்டி ஸ்டோரியால் கண் கலங்கிய கமல்... என்ன ஸ்டோரி, ஏன் சொன்னார் தெரியுமா?
சென்னை: நடிகர் கமல் ஹாசன் உள்பட பல நடிகர்களுக்கு நடிப்பில் முன்னோடியாக இருந்தவர், இன்னும் இருப்பவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி அவர்கள். குறிப்பாக நடிகர் கமல், அவர் மீது அளவு கடந்த அன்பை அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்.
தனது தயாரிப்பில் உருவான தேவர் மகன் திரைப்படத்தில் சிவாஜி கணேசனுக்கு காலத்தால் அழியாத முக்கிய கதாப்பாத்திரத்தை கொடுத்திருந்தார்.
இப்போது கமல் கொடுத்த பேட்டி ஒன்றில் தனக்கும் அவருக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் ஒன்றை நினைவுபடுத்தியுள்ளார் கமல்.

தேவர்மகன்
தேவர் மகனில் முதலில் சிவாஜியை ஒப்பந்தம் செய்தபோது, மார்கெட் இல்லாத ஒருவரை ஏன் பிரதான ரோலில் நடிக்க வைக்கிறீர்கள் என்று சிலர் தன்னை விமர்சனம் செய்ததாகவும், அதனை தான் காதிலேயே வாங்கிக் கொண்டதில்லை எனவும் கமல் நிறைய முறை கூறியிருக்கிறார். கமலுக்கே அதற்கு முன்னர் வரிசையாக தோல்விப் படங்கள் வந்த சமயம் அது. தேவர் மகன் திரைப்படம்தான் மீண்டும் அவரை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தது என சொல்லலாம். குறிப்பாக அவர் எழுதிய திரைக்கதையை இப்போதுள்ள பெரிய இயக்குநர்கள் தங்களுக்கு இன்ஸ்பிரேஷன் என்று சொல்வதை காண முடியும்.

சிவாஜி - கமல்
நடிகர்கள் சிவாஜி கணேசனும் கமல் ஹாசனும் பார்த்தால் பசி தீரும், நான் பிறந்த மண் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், இன்னும் மக்கள் மனதில் நிற்பது தேவர் மகன் திரைப்படம் மட்டுமே. 65-ஆவது ஆஸ்கர் விருதுக்கு வெளிநாட்டு திரைப்பட பிரிவில் இந்தியா அனுப்பிய திரைப்படம் தேவர் மகன் என்பது கூடுதல் தகவல். சிவாஜி, கமல், இளையராஜா, PC ஶ்ரீராம், பரதன் என்று பெரும் ஜாம்பவான்கள் உழைத்த திரைப்படம் அது

குட்டி ஸ்டோரி
ஒரு முறை கமலை அழைத்த சிவாஜி கணேசன். கொஞ்ச நேரம் அப்படியே பார்த்துவிட்டு திடீரென்று, எனக்கு அப்போது இடுப்புக் கீழ்வரை முடியிருக்கும் என்று கூறியுள்ளார். ஒன்றும் புரியாத கமல் என்னண்ணே என்று கேட்டுள்ளாராம். அதற்கு, நாடகம் நடிக்கும்பொழுது அவ்வளவு முடி இருந்தது. திடீரென்று ஒரு நாள் கணேசனுக்கு தாடி நரைத்துவிட்டது. புரிந்ததா? என்று கூற, அதைக் கேட்ட கமலுக்கு கண் கலங்கிவிட்டதாம். ஆண்டுகள் போவதே தெரியாது, எப்போதும் விறுவிறுப்பாக வேலை செய்ய வேண்டும். அதனால் சீக்கிரம் ஷாட்டுக்கு ஏற்பாடு செய் என்று சிவாஜி கூறியதாக கமல் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

கமலின் கவிதை
பொதுவாக லைட்டிங் வைப்பது, ஆர்ட் பொருட்களை சரியாக வைப்பது என்று ஒரு காட்சியை அழகாக எடுப்பதற்காக ஒவ்வொரு ஷாட்டிற்கும் சில சமயம் அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். ஸ்பாட்டுக்கு முன்னரே வந்து மேக்கப் அணிந்து காத்திருக்கும் நடிகர்களுக்கு இது சில சமயம் எரிச்சலை தரும். அவ்வாறு ஷாட்டிற்கு தாமதமான ஒரு பொழுதுதான் சிவாஜி கமலை அழைத்து இந்தக் குட்டி ஸ்டோரியை கூறியுள்ளார். அவர் சொன்ன கதையை "தாடி நரைத்த சின்ன கணேசன்" என்ற கவிதையாகவும் எழுதியுள்ளார் கமல்.


Click it and Unblock the Notifications











