ஒரு விஷயம் புடிக்கலன்னா ரஜினி என்ன செய்வார் தெரியுமா... மெய்சிலிர்த்த சுந்தர்.சி
சென்னை: அரண்மனை 3 திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர்.சி தற்சமயம் காஃபி வித் காதல் என்கிற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
Recommended Video
அதில் நடிகர்கள் ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அருணாச்சலம் திரைப்படத்தை தான் இயக்கிய போது நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார் சுந்தர்.சி

ரஜினிகாந்த்தின் வாய்ப்புகள்
நடிகர் ரஜினிகாந்த்தின் வெற்றிகரமான கேரியரை உருவாக்கியது பாலச்சந்தர், எஸ்.பி.முத்துராமன் போன்ற அனுபவம் மிக்க இயக்குநர்கள் என்றாலும் அவ்வப்போது வளர்ந்து வரும் புதிய இயக்குநர்களுக்கும் வாய்ப்பளிப்பார் ரஜினிகாந்த். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி போன்றவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தபோது அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர் ரஜினிகாந்த். அவர்களுக்கும் எளிதாக அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. நாட்டாமை என்ற படத்தையே ரவிக்குமார் அவர்களும் உள்ளத்தை அள்ளித்தா என்கிற படத்தை சுந்தர்.சி அவர்களும் கொடுத்த பின்னர் தான் அந்த வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

சுந்தர்.சி ரஜினி முதல் சந்திப்பு
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் சுந்தர்.சி இவர்களின் முதல் சந்திப்பு சினிமா தொடர்பாக அமையவில்லை. சுந்தர்.சி மற்றும் குஷ்பூ டேட்டிங்கில் இருந்த சமயம் அவ்வப்போது உணவு சாப்பிட வெளியே செல்வார்களாம். ஒருமுறை அவர்கள் ஒரு ரெஸ்டாரண்டிற்கு சென்றிருந்தபோது நடிகர் ரஜினிகாந்த் அவருடைய குடும்பத்தாருடன் வந்துள்ளார். குஷ்பூ மற்றும் ரஜினிக்கு நல்ல அறிமுகம் என்பதால் இரு குடும்பத்தாரும் சேர்ந்து அன்று உணவருந்தினார்களாம். அப்போது என்ன படம் இயக்கியுள்ளீர்கள் என்று ரஜினி கேட்க உள்ளத்தை அள்ளித்தா என்று அவர் சொல்ல அந்த படத்தின் பெயர் ரஜினிகாந்தின் வாயில் வரவே இல்லையாம். இறுதியாக சரி விடுங்க ஏதோ ஒன்று என்று சொல்லி மிகக் குறைவாகவே அன்று அவர்கள் பேசினார்களாம்.

அருணாச்சலம் வாய்ப்பு
அதன் பின்னர் ரஜினிகாந்த் ஒரு படம் நடிக்கலாம் என்று முடிவு செய்தபோது சுந்தர்.சியை அழைத்து நான் ஒரு படம் நடிக்கப் போகிறேன் அதனை நீங்கள் இயக்குகிறீர்களா என்று கேட்டாராம். உங்களிடம் கதை இருக்கிறதா உங்களுக்கு நான் வாய்ப்பு தருகிறேன் என்று தொணியில் பேசாமல் என் படத்தை நீங்கள் இயக்குகிறீர்களா என்று ரஜினி கேட்டது சுந்தர்.சிக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அதன் பின்னர் துவங்கப்பட்டதுதான் அருணாச்சலம் திரைப்படம்.

ரஜினியின் அணுகுமுறை
புதிய இயக்குநர்களுடன் பணி புரிவது ரஜினிகாந்த்திற்கு மிகவும் பிடிக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது அனுபவத்தை எல்லாம் அவர் காட்ட மாட்டார். இளம் தொழில்நுட்ப கலைஞர்களை கம்ஃபர்ட்டாக ஃபீல் செய்யும் வகையில் நடந்து கொள்வாராம். அருணாச்சலம் படத்தின் கேமராமேன் அவ்வப்போது சிகரெட் பிடிக்கச் செல்லும்போது ரஜினிகாந்தும் அவருடன் சென்று சிகரெட்டையும் கொடுத்து பற்ற வைத்து சகஜமாக பழகுவாராம். அதேபோல ஒரு விஷயம் தனக்கு பிடிக்கவில்லை என்றால் முதலில் நன்றாக இருக்கிறது என்று கூறுவாராம். பின்னர் ஒரு நாள் கழித்து பேசும்போது நீங்கள் சொன்ன விஷயத்தை யோசித்துப் பார்த்தேன் இந்த விஷயங்கள் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று தான் சொல்வாரே தவிர நாம் சொன்னது நன்றாக இல்லை பிடிக்கவில்லை என்று ஒருபோதும் ரஜினி சொல்ல மாட்டார் என்று சுந்தர்.சி கூறியுள்ளார்


Click it and Unblock the Notifications











