’கதையே எழுத மாட்டாயா நீ, ஒத்திகையாவது பார்ப்பாயா?’..வெற்றிமாறனிடம் கமல்ஹாசன் கேட்ட கேள்வி
சென்னை: தமிழ் சினிமாவின் இப்போதைய முன்னணி இயக்குநராக விளங்குபவர் வெற்றிமாறன். அதற்கு காரணம் அவருடைய படங்கள் வசூல் மட்டுமின்றி விருதுகளையும் அள்ளுகிறது.
விடுதலை திரைப்படத்தை நீண்ட காலமாக எடுத்துக் கொண்டிருக்கும் வெற்றிமாறன் அடுத்து வாடிவாசல் திரைப்படத்தின் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் புது இயக்குநர்கள், கமல் ஹாசன், இளையராஜா, பாரதிராஜா, பான் இந்தியா திரைப்படங்கள் என பல்வேறு விசயங்களைப் பற்றி வெற்றிமாறன் பேட்டி கொடுத்திருக்கிறார்.

பான் இந்திய படங்கள்
பான் இந்தியன் படங்கள் என்று சொல்லக்கூடிய பாகுபலி, RRR போன்ற படங்களை என்னால் எடுக்க முடியாது, எனக்கு அதில் விருப்பமும் இல்லை. மண் சார்ந்த எளிமையான மக்களின் கதையை சொல்லும் படங்கள்தான் பண்ண வேண்டும் என்பது என்னுடைய ஆசை. எனக்கும் பான் இந்தியன் படங்களுக்கும் சம்பந்தமில்லை என்கிறார் வெற்றிமாறன்.

இளையராஜா பாரதிராஜா
முன்பு, தான் சோர்வாக உணரும்போது தனது குருநாதர் பாலுமகேந்திராவிடம் சென்று ஆலோசனை கேட்பேன் என்று ஒருமுறை வெற்றிமாறன் கூறியிருந்தார். இப்போது அவர் இல்லாததால் வேறு யாரிடமாவது பகிர்ந்து கொள்கிறீர்களா என்ற கேள்விக்கு, பாரதிராஜா இளையராஜா இவர்களிடம்தான் இப்போது பகிர்ந்து கொள்கிறேன் என கூறியுள்ளார். விடுதலை திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

புது இயக்குநர்கள்
குறும்படம் எடுத்துவிட்டு படம் இயக்க வருகிறார்கள். அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு பாலச்சந்தர், பாலு மகேந்திரா, மகேந்திரன், மணிரத்தினம் போன்றவர்கள் துணை இயக்குநர்களாக வேலை பார்த்ததில்லை. ஆனால் இவர்கள் ஏற்படுத்திய தாக்கம் பெரியது. மணிரத்தினம் இன்றும் இளைஞர்களுக்கு சவால் விடுகிறார். அதே வேளையில் பாரதிராஜா, பாக்யராஜ் போன்றவர்களும் துணை இயக்குநர்களாக வேலை பார்த்து பின் சினிமாவில் ஜெயித்துள்ளார்கள். அதனால் இயக்குநர் ஆவதற்கு இதுதான் வழி என்று ஒன்றை மட்டும் கூறி விட முடியாது. ஆர்வம் இருந்தால் போதும் என்று கூறியிருக்கிறார்.

கமல் வெற்றிமாறன் கூட்டணி
கமல் ஹாசனுடன் படம் பண்ணுவதற்கு ஒரு கதைக் கருவை மட்டும் கூறியபோது, கதை எழுத மாட்டியா என்று கேட்டார். பெரும்பாலும், ஒரு வரிக் கதை பிடித்துவிட்டால் அதன் பிறகு அதில் பணிபுரிவேன் என்று கூறினேன். ஒத்திகையாவது பார்ப்பியா என்று கேட்டார், பார்ப்பேன் என்றேன். தற்சமயம் இரண்டு படங்கள் எடுத்துக் கொண்டிருப்பதால் அதற்குப் பின் தான் அவருக்கான கதையை கூற வேண்டும். இருவருக்கும் பிடித்திருந்தால் இணைந்து பணிபுரிய ஆரம்பித்து விடுவோம் என்று வெற்றிமாறன் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications