எம்ஜிஆரை கடைகோடி மக்களும் நேசிப்பது ஏன்? சினிமா கவர்ச்சி மட்டும் காரணமா?

"ஒரு மனிதன் தனது செயல்களால் அனைவராலும் நேசிக்கப்படுகிறார் என்றால் அவர் வாழும்போது நேசிக்கப்படுவதைவிட இறந்தப்பின்னர் எவ்வளவு நாட்கள் நினைக்கப்படுகிறார் என்பதை வைத்தே அவரது நல்ல செயல்களை அளவிடலாம்" என எம்ஜிஆர் பேசியிருந்தார். 34 ஆண்டுகள் கடந்தபின்னரும் எம்ஜிஆர் நினைவுக்கூரப்படுகிறார். சம்பிரதாயபூர்வமாக அல்ல சாதாரண தொண்டர்களால் எதிர்ப்பார்ப்பின்றி நினைக்கப்படுவதன் காரணம் என்ன?

செல்வக்குடும்பத்தில் பிறந்து வறுமையில் வாடிய எம்ஜிஆர்

செல்வக்குடும்பத்தில் பிறந்து வறுமையில் வாடிய எம்ஜிஆர்

1917 ஆம் ஆண்டு ருஷ்யப்புரட்சி ஏற்பட்டது உலகில் முதல் சோஷலிச அரசு அமைந்தது. அதே ஆண்டில் பிறந்தவர் எம்ஜிஆர். செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தாலும் திடீரென தந்தையின் மறைவு காரணமாக வறுமையில் தள்ளப்பட்டது எம்ஜிஆரின் குடும்பம். இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்ட அன்னை சத்யா நாடகக்கம்பெனியில் இருவரையும் சேர்த்துவிட்டார். இதனால் சிறு வயதிலேயே கல்வி கற்க முடியாமல் போனது எம்ஜிஆருக்கு.

இளமையில் பரிசாக கிடைத்தது வறுமை..கல்வி கிடைக்காமல் போனது

இளமையில் பரிசாக கிடைத்தது வறுமை..கல்வி கிடைக்காமல் போனது

இளமையில் வறுமையை எம்ஜிஆர் நேரில் அனுபவித்தார். அவரது பிற்கால வாழ்க்கையில் எளியோருக்கு உதவி செய்ய முக்கிய காரணமாக அமைந்தது அவர் சிறு வயதில் அனுபவித்த வறுமையே. வறுமையில் வாடிய பல நடிகர்கள் பின்நாளில் பெரும் பணக்காரர்கள் ஆனப்பின்னர் எம்ஜிஆர் போல் நடக்காதது ஏன் அல்லது இப்படிச் சொன்னால் எம்ஜிஆர் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக தனித்து நடந்ததாலேயே அனைவராலும் நேசிக்கப்பட்டார்.

ஹீரோவாக கொண்டாடப்பட்ட பலர் காணாமல் போனது ஏன்?

ஹீரோவாக கொண்டாடப்பட்ட பலர் காணாமல் போனது ஏன்?

ஹீரோவாக கொண்டாடப்பட்ட பல நடிகர்கள் இருந்தார்கள். ஹீரோவாக நடித்தால் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடித்துவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்டு காணாமல் போனவர்கள் மத்தியில் தனது நல்ல செயல்களால் உயர்ந்து நின்றார் எம்ஜிஆர். அவர் பெற்ற வெற்றி, அடைந்த உயரம் ஏதோ ஒருநாளில் வந்ததல்ல.

காந்தியமும் -திராவிடமும் எம்ஜிஆரின் இரு வேறு குணங்கள்

காந்தியமும் -திராவிடமும் எம்ஜிஆரின் இரு வேறு குணங்கள்

திரப்படங்களில் நடிக்கும் காலத்திலேயே தனக்கென ஒரு கொள்கையை வைத்துக்கொண்டவர் எம்ஜிஆர். ஆரம்பத்தில் தீவிர காந்தியவாதியாக தேசப்பற்று மிக்கவராக இருந்தார் எம்ஜிஆர். கருணாநிதி போன்றோர் பழக்கத்துக்குப்பின் அவர் சிந்தனை திராவிய இயக்கம் பக்கம் திரும்பியது. ஆனாலும் காந்திய கொள்கை அவரை விட்டு விலகவில்லை. அதனால்தான் காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிக்காட்டி என அவரால் பேச முடிந்தது.

உயரிய சிந்தனைகளை திரைப்படத்தில் பயன்படுத்தியவர்

உயரிய சிந்தனைகளை திரைப்படத்தில் பயன்படுத்தியவர்

அரசியலில் ஈடுபடும் எண்ணம் 60-களில் கருணாநிதியின் தொடர்பு மூலம் திமுகவில் இணைந்தார். தனது படங்களில் இடதுசாரி சிந்தனைகள், அதன் வெளிப்பாடு கொண்ட பாடல்கள், வசனங்களை வைத்தார். கருத்தாழம் மிக்க பாடல்களுக்கு உதவிய கவிஞர்களை சரியாக பயன்படுத்தினார். ஒரு முழுமையான மனிதனாக தனது திரைப்படங்களில் நடிப்பதோடு நில்லாமல் அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தினார் எம்ஜிஆர்.

 மிகுந்த சமுதாய அக்கறை கொண்ட எம்ஜிஆர்

மிகுந்த சமுதாய அக்கறை கொண்ட எம்ஜிஆர்

சமுதாய அக்கறை எம்ஜிஆருக்கு எப்போதும் உண்டு. வெறும் கேரக்டராக ஹீரோ ரோலை பார்க்காமல் தனது நடிப்பால் நல்ல விஷயங்கள் மக்களுக்கு சென்று சேரவேண்டும் என்பதில் எம்ஜிஆர் ஆரம்ப காலம் முதலே தெளிவாக இருந்தார். ஹீரோ சொல்வதை, நடப்பதை, செய்வதை கண்ணைமூடிக்கொண்டு இளம் பருவத்தினர் செய்வார்கள் என்பதை நன்றாக அறிந்தே வைத்திருந்தார் எம்ஜிஆர். அதனால் தான் தனது படங்களில் மது, சிகரெட், மாது, தவறான வழியில் செல்வது போன்ற காட்சிகளை ஹீரோ செய்ய மாட்டான் என உணர்த்தும் வகையில் காட்சி அமைத்தார்.

தலைமைப்பண்பின் அறிகுறி இதுதானா?

தலைமைப்பண்பின் அறிகுறி இதுதானா?

மறந்தும் தான் மது அருந்துவது போன்றோ, சிகரெட் பிடிப்பது போன்றோ, பெண்களை, குழந்தைகளை துன்பப்படுத்துவது போன்றோ, பெரியவர்களை மரியாதைக்குறைவாக நடத்துவது போன்றோ நடிக்க மறுத்தார். இது அவரது சமுதாய அக்கறையை காட்டியது. அவர் செய்தால் அதை மக்கள் செய்வார்கள், இளம் பருவத்தினர் செய்வார்கள் ஆகவே திரைப்படம் மூலம் தவறான விதைகளை விதைக்கக்கூடாது என எம்ஜிஆர் நம்பினார். அது தலைமைப் பண்பின் முக்கிய அறிகுறி.

பாசிட்டிவ் அணுகுமுறை வெற்றியை தேடித்தந்தது

பாசிட்டிவ் அணுகுமுறை வெற்றியை தேடித்தந்தது

நல்லவனாகவும், தீயவற்றை வெறுப்பவனாகவு, மது, புகைப்பக்கம் போகாதவனாகவும், பெண்களை கவுரவமாக நடத்துபவனாகவும், தாயை தெய்வமாக மதிப்பவராகவும் நடித்த எம்ஜிஆரை இயற்கையாகவே பெண்கள் போற்ற ஆரம்பித்தனர். இதனால் எம்ஜிஆருக்கு பெண் ரசிகர்கள் வயது வித்தியாசமின்றி பெருகினர். வீரமானவர், தோல்வியையே காணாதவர், நெகட்டிவ் எண்ணங்கள் இல்லாத பாசிட்டிவான அணுமுறை இளைஞர்களை அதிகம் கவர்ந்தது. எங்கேயாவது எம்ஜிஆர் மூலையில் உட்கார்ந்து அழுது பார்த்ததுண்டா யாரும். இருக்காது, தோளைக்குலுக்கிக் கொண்டு பிரச்சினைகளை சந்திப்பார். அது பாசிட்டிவ் டச்.

உதவும் குணம் அழகனை பேரழகனாக்கியது

உதவும் குணம் அழகனை பேரழகனாக்கியது

தோற்றப்பொலிவு எம்ஜிஆருக்கு பெரிய பிளஸ் பாயிண்ட் என்பார்கள், ஆனால் அவரது நல்ல குணங்கள் போகப்போக அவரை மேலும் அழகனாக மக்கள் மனதில் பதிய வைத்ததே காரணம் எனலாம். இவைகளை தாண்டி எம்ஜிஆரின் உதவும் குணம் அவருக்கு பெரிய பெயரை பெற்றுத்தந்தது. எம்ஜிஆர் விலாசத்துக்கு கார்டு எழுதி உதவிக்கேட்டால் மணியர்டர் வீடு தேடி வரும் என பலர் கூறியுள்ளனர்.

விளம்பரத்திற்காக உதவியவரா எம்ஜிஆர்

விளம்பரத்திற்காக உதவியவரா எம்ஜிஆர்

பணம் வசதி வந்தப்பின்னர் தான் எம்ஜிஆர் உதவ ஆரம்பித்தாரா என ஆரம்பகால நடிகர்கள் சிலரை கேட்டபோது அவர்கள் சொன்ன பதில் 50 ரூபாய் (அந்தக்காலத்தில் அது 5000 ரூபாய்க்கு சமானம்) சம்பாதித்த காலத்தில் கூட பாக்கெட்டில் பணம் வைத்திருப்பார் உதவுவார் என்று கூறியுள்ளனர். உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவுவது ஒரு வகை, உதவி கேட்காதவர்கள் நிலை அறிந்து உதவி செய்வது இரண்டாவது வகை. இது எம்ஜிஆரின் பாணி.

எம்ஜிஆரை நம்பிய நலிந்த கலைஞர்கள்

எம்ஜிஆரை நம்பிய நலிந்த கலைஞர்கள்

வீட்டில் உலை வைத்துவிட்டு எம்ஜிஆர் வீட்டுக்கு நம்பிச் செல்லலாம் என்று திரையுலகில் நலிந்த கலைஞர்கள் கூறுவார்கள். அப்படி வந்து கேட்டவர்களுக்கெல்லாம் வாரி வழங்கினார் என்பார்கள். உதவி கேட்டு வருபவர்கள் நிலை அறிந்து அவர்கள் எதிர்பாராத அளவுக்கு பெரிய உதவியை செய்வார் என்பார்கள்.

உதவி செய்யும் குணம் உயர்த்தியது

உதவி செய்யும் குணம் உயர்த்தியது

சிறுவயதில் வாட்டிய வறுமையை அறிந்திருந்த எம்ஜிஆர் திரையுலகின் முடிசூடா மன்னனாக மக்கள் ஆதரவு பெற்றவராக இருந்த காலத்திலேயே அதன் வருமானத்தில் பெரும் பகுதியை உதவி செய்ய பயன்படுத்திக்கொண்டார். அத்துடன் தனது திரைப்படத்தில் சீர்த்திருத்த கருத்துக்களை பயன்படுத்தி மேலும் தன்னை வலுப்படுத்திக்கொண்டார். அரசியல் ஈடுபாடும் அண்ணாவின் மீது அவர் கொண்ட மதிப்பும், அண்ணா அவரை நடத்திய விதமும் எம்ஜிஆரை புகழின் உச்சிக்கு கொண்டுச் சென்றது.

தோல்வியை தழுவாத முதல்வர்

தோல்வியை தழுவாத முதல்வர்

திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டபோது அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர் பக்கம் ஏராளமான இளைஞர்கள் வந்தனர். மக்கள் செல்வாக்கால் 1977 ஆம் ஆண்டு ஆட்சியைப்பிடித்த எம்ஜிஆர் அதன் பின்னர் 1987 ஆம் ஆண்டு தான் மறையும்வரை முதல்வராகவே இருந்தார். அரசியலில் தனது எதிரியான கருணாநிதிக்கு சரி நிகராக சமர் செய்வார் என ஜெயலலிதாவை தயார் செய்து விட்டுச் சென்றது எம்ஜிஆரின் அறிவுக்கூர்மைக்கு ஒரு சாட்சி.

மக்கள் மனதில் உயர்ந்தது இதனால் தான்

எம்ஜிஆர் ஏன் இன்றும் நினைவுக்கூரப்படுகிறார் என்றால் அவர் சினிமா ஹீரோவாக மட்டும் இருந்ததல்ல, அவர் மனிதாபிமானியாகவும், நல்ல கருத்துகளை சமுதாயத்தில் பரப்பியதும், உதவி செய்யும் குணத்தாலும் மக்கள் மனதில் குறிப்பாக பெண்கள் மனதில் உயர்ந்து நின்றார். அவரை வெறும் மனிதனாக பார்க்காமல் தெய்வமாக பார்த்தனர் பலர். அவருக்கு மரணம் இல்லை என நம்பியவர்கள் கூட இருந்தனர்.

நினைக்காததும் எம்ஜிஆர் வாழ்வில் நடந்தது

எம்ஜிஆர் மறைந்தாலும் அவரால் நேரடியாக அல்ல மறைமுகமாக கூட உதவி பெறாத கடைகோடியில் ஒருவன்கூட எம்ஜிஆரை நேசித்தது தான் அவரது வெற்றியே. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும், கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் வரவேண்டும், உன் கண்ணில் ஒருதுளி நீர் வந்தாலும் உலகம் அழ வேண்டும் என பாடினார். இரண்டும் அவர் வாழ்வில் நடந்தது எனலாம்.

எம்ஜிஆரைப்பார்த்து உதவும் நல்லவர்கள்

ஆரம்ப கல்வியைக்கூட தாண்டாத அவர் முதல்வராக பல ஐஏஎஸ், ஐபிஎஸ்களுக்கும் நிபுணர்களுக்கும் ஆணையிடும் இடத்தில் இருந்ததும், அவர் மறைந்து 34 ஆண்டுகள் ஆனாலும் கட்சிக்காரர்களைத்தாண்டி அவர் நினைவுக்கூரப்படுவதுமே சாட்சி. இன்றும் அவரது தீவிர பக்தர்களாக பல அரசியல் தலைவர்கள், சினிமா கலைஞர்கள் உள்ளனர். பலர் இன்னும் அவரது செயலைப்பார்த்து உதவி செய்து வருகின்றனர். அதுதான் எம்ஜிஆர் செயலுக்கான அங்கிகாரம் எனலாம்.

More from Filmibeat

Read more about: mgr எம்ஜிஆர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X