83 படம் ஏன் கொண்டாடப்படுகிறது?...83 உலகக் கோப்பையில் நடந்தது என்ன?-ஒரு அலசல்
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் உன்னதமான நாள் 1983 ஆம் ஆண்டு நடந்தது. இன்று உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் கமிட்டியாக பிசிசிஐ விளங்க அடிக்கோலிட்ட நாள் அன்று, இன்றிருந்த நிலையிலா அன்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் இருந்தனர், 83 என்கிற படம் இன்று வெளியாகும் நிலையில் அன்றைய இந்திய கிரிக்கெட் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தது என்பதை அறியலாம்.

பிரிட்டீஷ் காலனியாதிக்க நாடுகளில் உருவான கிரிக்கெட்
இந்தியாவை ஆண்ட பிரிட்டீஷார் கண்டுபிடித்த விளையாட்டு கிரிக்கெட். காலனி நாடுகளில் பிரிட்டீஷார் ஆடியதால் அது வேகமாக பரவியது. இன்றும் உலகில் முக்கியமான 11 நாடுகளில் மட்டுமே கிரிக்கெட் முக்கிய இடத்தில் உள்ளது. கால்பந்து போல் உலகின் அத்தனை நாடுகளிலும் விளையாடப்படுவதில்லை. ஆனாலும் வளம் கொழிக்கும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது.

இந்தியாவில் கிரிகெட்டின் தொடக்கம்
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு பிரிட்டீஷார் காலத்திலேயே வந்துவிட்டது. ஆனால் செல்வந்தர் விளையாடும் விளையாட்டாக இருந்தது. பின்னர் சுதந்திரத்துக்குப்பின் இந்திய அணி அமைந்தது. ஆனாலும் பெரிய அளவில் பேசப்படவில்லை. இந்தியாவில் சுழற்பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தினர். ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் எப்போதும் கிரிக்கெட்டில் இருந்து வந்தது.

ஜாம்பவான் நாடுகள் மத்தியில் இளம் சிறுவனாக இந்தியா
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து என கிரிக்கெட்டில் சிங்கம் போல் ஆதிக்கம் செலுத்திய நாடுகளுக்கு மத்தியில் ஆட்டுக்குட்டிப்போல் இந்தியா உதை வாங்கியது. 1970 களில் கவாஸ்கர் போன்ற இளம் வீரர்கள் பேட்டிங்கில் நம்பிக்கை அளித்தனர். ஆனாலும் அவர்கள் அடைந்த துன்பம் சொல்லி மாளாது, கேவலமாக பேசுவது, நடத்துவது, காயம் ஏற்படுவதுபோல் பேசுவது என பல அவதூறுகளை எதிர்க்கொண்டனர்.

இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளரா? கபில்தேவை கிண்டல் செய்த ஊழியர்
இந்த நேரத்தில் தான் அரியானவைச் சேர்ந்த சிறுவன் வேகப்பந்து வீச்சாளராக உருவாகிறான். அவனது வேகம், பாலை ஸ்விங் செய்யும் திறமை கூடிய விரைவில் மாநில அளவில் புகழ்பெற்றான். அவன் பள்ளி அளவிலான விளையாட்டில் பங்கேற்றபோது அவனுக்கு அளிக்கப்பட்ட உணவு போதவில்லை என உணவக ஊழியரைக் கேட்டபோது எல்லோருக்கும் ஒரே அளவுதான் என்று கூறியுள்ளார்.

வெகுண்டெழுந்த கபில்தேவ்
ஆனால் நான் வேகப்பந்து வீச்சாளர் எனக்கு கூடுதல் உணவு வேண்டும் என அச்சிறுவன் கேட்டுள்ளார். என்ன வேகப்பந்து வீச்சாளரா? இந்தியாவில் ஏது வேகப்பந்து வீச்சாளர் என அந்த ஊழியர் கேட்டது நெஞ்சில் ஆழமாக பதிய அதை தனது வாழ்வின் லட்சியமாக கொண்டு முன்னேறினான் அந்த சிறுவன். அவர்தான் கபில்தேவ்.

1978 ஆம் ஆண்டு வந்த புயல் மாறியது இந்தியாவின் கிரிக்கெட் முகம்
1978 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதன்முதலில் சர்வதேசப்போட்டியில் களம் இறங்கினார் கபில் தேவ். அந்தப்போட்டியில் தான் ஒரு மிதவேகப்பந்து வீச்சாளர் என நிரூபிக்க கபில்தேவால் முடியவில்லை. ஆனால் தான் ஒரு சிறந்த பேட்ஸ்மென் என்பதை நிரூபித்தார் (உலகில் 5000 ரன்கள் எடுத்து 434 விக்கெட்டுகளை வீழ்த்திய அவரது சாதனையை ஒருசேர யாராலும் முறியடிக்க முடியவில்லை)

1979-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெகுண்டெழுந்த கபில்தேவ்
இங்கு கபில்தேவை மட்டுமே குறிப்பிடக் காரணம் கபில் தேவுக்கு முன் கபில்தேவுக்கு பின் என இந்திய கிரிக்கெட் அணியை பிரித்துத்தான் ஆகவேண்டும். கபில்தேவின் மிதவேக ஸ்விங் செய்யும் பந்துவீச்சு இந்தியாவுக்கு பல வெற்றிகளை பெற்றுத்தந்தது. சமகாலத்தவரான இம்ரான் கானைவிட திறமைப்பெற்றிருந்தார் கபில்தேவ். ஆஸ்திரேலியாவில் அவர் தனது பந்துவீச்சுத்திறமையையும், பேட்டிங் திறமையையும் நிரூபித்தார்.

பலமான அணியாக உருவான இந்திய அணி
கபில் தேவ் இந்திய அணியின் தலைமையை குறுகிய காலத்தில் ஏற்றார். பின்னர் கபில்தேவ் தலைமையிலான அணியில் பலமிக்க வீரர்கள் இணைந்தனர். கவாஸ்கர், ஸ்ரீகாந்த், வெங்க்சர்க்கார், அமர்நாத், சந்தீப் பட்டீல், மதன்லால், கீர்த்தி ஆசாத், யஷ்பால் ஷர்மா, ரோஜர் பின்னி என ஒரு புதுமையான அணி உருவானது. இருந்தாலும் உலக அளவில் இந்திய அணி பலமில்லாத அணியாகவே இருந்ததை மறுக்க முடியாது.

1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை- சுற்றுலா செல்ல திட்டமிட்ட இந்திய வீரர்கள்
1983 ஆம் ஆண்டு மூன்றாவது உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடந்தது. இருமுறை கோப்பையை வென்று உலகின் பலமான அணியாக இருந்த வெஸ்ட் இண்டீஸ் 3 வது முறையாக வென்று ஹாட்ரிக் வெற்றிக்காக காத்திருந்தது. கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் நம்பிக்கையில் இருந்தது. ஆஸ்திரேலிய அணியும் பலம் வாய்ந்த அணியாக முன்னணியில் இருந்தது. பாகிஸ்தான் இளம் வீரர் இம்ரான்கான் தலைமையில் பலமிக்க அப்துல் காதிர் போன்ற உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்களுடன் பாகிஸ்தானும் முன்னணியில் நின்றது.

அமெரிக்கா சுற்றுலா போக திட்டமிட்டோம்- ஸ்ரீகாந்த் சொன்ன சுவாரஸ்யம்
இப்படிப்பட்ட நாடுகளையா எதிர்த்து வெல்ல போகிறோம், 2, 3 ஆட்டத்தில் தோல்வி அடைவோம், ஜாலியா அமெரிக்க டூர் போவோம் என திட்டமிட்டிருந்தோம், ஆனால் அனைத்தும் மாறியது என ஸ்ரீகாந்த் 83 பட விழாவில் குறிப்பிட்டது அன்றைய இந்திய அணியின் நிலையை நமக்கு உணர்த்துகிறது. ஆனால் கபில்தேவின் திட்டமிட்ட மூவ் வெற்றியை நோக்கி இந்தியாவை நகர்த்தியது.

வெஸ்ட் இண்டீஸ் குரூப்பில் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை வென்ற இந்தியா
குரூப் பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகளுடன் இந்தியா களமிறங்கியது. இதில் இந்தியாவுக்கு வாய்ப்பாக ஆஸ்திரேலியா குழந்தைப்போன்ற ஜிம்பாப்வே அணியிடம் தோற்றதும், இந்தியா முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்ததும் வாய்ப்பாக அமைந்து இந்திய வீரர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. தொடர்ந்து இருமுறை ஜிம்பாப்வேயையும் (இதில்தான் கபில்தேவ் 175 ரன்கள் அடித்து உலகச்சாதனை புரிந்தார்) ஒருமுறை ஆஸ்திரேலியாவையும் வென்றதால் எளிதாக அரையிறுதியில் நுழைந்தது.

ஜாம்பவான் இங்கிலாந்தை இங்கிலாந்து மண்ணில் எதிர்க்கொண்ட இந்தியா
அரையிறுதியில் இங்கிலாந்தை இங்கிலாந்து மண்ணில் வெற்றிக்கொள்ளும் கட்டாயத்தில் இந்தியா இருந்தது. பாப்வில்லீஸ் தலைமையில் கேட்டிங், டேவிட் கோவர் உள்ளிட்ட போலர்கள் பாப் வில்லீஸ் , போத்தம், டில்லி போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். இதில் அனைவருமே ஆல்ரவுண்டர்கள் என்பது சிறப்பு. அப்படிப்பட்ட இங்கிலாந்து எப்படியாவது கோப்பையை வெல்லும் முனைப்புடன் அரையிறுதிக்கு வந்தது.

இறுதிப்போட்டியில் முன்னேறிய இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள்
இந்த போட்டியில் இந்தியா 60 ஓவர்களில் 55 ஓவர்கள் ஆடி 247 ரன்களை எடுத்தது. ஆனால் இங்கிலாந்து 38 ஓவர்கள் கூட ஆட முடியாமல் 1129 ரன்களில் சுருண்டது. மதன்லால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி பலமிக்க இங்கிலாந்தை அதன் மண்ணில் வீழ்த்தி இறுதிபோட்டிக்கு நுழைந்தது. மறுமுனையில் பாகிஸ்தானை வென்ற வெஸ்ட் இண்டீஸ் இறுதிப்போட்டியில் நுழைந்தது. இதில் பாகிஸ்தான் எடுத்த ஸ்கோர் 184 அதை எளிதாக வெஸ்ட் இண்டீஸ் அடைந்தது. வெஸ்ட் இண்டீஸின் தூண் விவியன் ரிச்சர்ட்ஸ் 80 ரன்கள் விலாசியிருந்தார்.

வரலாற்று சிறப்புமிக்க இறுதிப்போட்டி
60 ஓவர்கள் கொண்ட போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி பலமிக்க மால்கம் மார்ஷல், ஹோல்டிங், ஆன்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னர், வின்ஸ்டன் டேவில் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்க்கொள்ள முடியாமல் வெறும் 183 ரன்களில் சுருண்டது. ஆன்டி ராபர்ட்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இதனால் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை முற்றிலும் தகர்ந்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் கோப்பையை வென்றே விட்டது என அனைவரும் பேசினர்.

வெற்றி நிச்சயிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி
பாகிஸ்தானை அரையிறுதியில் 184 ரன்களில் சுருட்டிய வெஸ்ட் இண்டீஸ் எளிதாக 188 ரன்களை அடித்து 2 விக்கெட்டுகளை மட்டுமே பலமிக்க விவியன் ரிச்சர்ட்ஸ், கிளைவ் லாயிட், கார்டன் க்ரீனிட்ஜ், கஸ்லோகி என பலர் இருந்தனர். உலகின் பலமான அணி அது. அதனால் அவர்கள் வெற்றி அதுவும் ஹாட்ரிக் வெற்றி கிட்டத்தட்ட எழுதப்பட்டுவிட்டது. கார்டன் க்ரீனிட்ஜ்-ஹெய்ன்ஸ் ஜோட்டியை பிரிக்கவே முடியாது. அப்படியே பிரித்தால் உலகின் நம்பர் ஒன் அதிரடி பேட்ஸ் மேன் விவியன் ரிச்சர்ட்ஸ் வருவார், அடுத்து உலகில் அதிக கனமுள்ள பேட்டை பயன்படுத்திய கிளைவ் லாயிட் என வரிசைக்கட்டி நிற்கும் பேட்ஸ் மென்கள் எப்படி வெல்லும் இந்தியா என்பதே கேள்விக்குறியாக இருந்தது.

அடடா கவிழ்த்தார் சந்து, தொடர்ந்தார் அமர்நாத் முடித்தார் கபில்
ஆட்டம் ஆரம்பித்ததும் முதல் ஆதிக்கம் செலுத்திய கார்டன் கிரீனிட்ஜ்-ஹெய்ன்ஸ் ஜோடியை சந்து பிரித்தார். அழகான் இந்சுவிங் பந்தை வெளியில் செல்கிறது என தவறாக கணித்த கிரீனிட்ஜ் அதை கால் பேடில் வாங்க முயற்சிக்க அது ஆஃப் ஸ்டம்பை தாக்கியது. 12 பந்துகள் ஆடி 1 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார் கிரீனிட்ஜ். 5 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்.

வெளுக்க ஆரம்பித்த விவியன் ரிச்சர்ட்ஸ்
அடுத்து வந்த விவியன் ரிச்சர்ட்ஸ் வெளுக்க ஆரம்பித்தார். அரையிறுதியில் 80 ரன்கள் அடுத்து பாகிஸ்தானை கதறவிட்ட ரிச்சர்ட்ஸ் ஆடுவதால் வெற்றி நிச்சயம் என கொண்டாடினர் ரசிகர்கள். அடுத்த அதிர்ச்சியாக ரோஜர் பின்னி பந்தில் ஹெயின்ஸ் அவுட் ஆனார். அவர் 13 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அணியின் ஸ்கோர் 50/2 ஆக ஆனது. கேப்டன் கிளைவ் லாயிட் இணைந்தார். இது பிரிக்க முடியாத ஜோடி ஆகும்.

தூண் சரிந்தது...கபில்தேவின் சாதனை கேட்ச்
அப்போது தான் வெஸ்ட் இண்டீஸுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் நிகழ்வு நடந்தது. நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரிச்சர்ட்ஸ் மதன்லால் பந்தை தூக்கி அடிக்க அது உயரத்தில் எழும்ப அதை நோக்கி முன்னோக்கி ஓடிய கபில் யாரையும் பிடிக்கவேண்டாம் என எச்சரித்து 55 மீட்டர் தூரம் ஓடி கேட்ச் பிடித்தார். பல ஆண்டுகள் பேசபட்ட கேட்ச் அது. அதுதான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ரிச்சர்ட்ஸ் எனும் தூண் சரிந்தது, வெஸ்ட் இண்டீசின் சரிவு ஆரம்பமானது.

தொடர் சரிவு முடிவில் தோல்வியைச் சந்தித்த வெஸ்ட் இண்டீஸ்
அடுத்து கோம்ஸ் ஸ்லிப்பில் கவாஸ்கரிடம் கேட்ச் கொடுக்க, அடுத்து கவர் திசையில் கேப்டன் லாயிட் கபிலிடம் கேட்ச் கொடுக்க 5 ரன்னில் வெளியேறினார். அணியின் ஸ்கோர் 66/5. அப்புறம் என்ன அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய 52 ஓவர்கள் ஆடி 140 ரன்களில் ஆட்டம் இழந்தது வெஸ்ட் இண்டீஸ். யாருமே எதிர்பாராத வகையில் இந்தியா கோப்பையைக் கைப்பற்றியதன் மூலம் முதல் ஆசிய நாடு என்கிற பெருமையைப் பெற்றது.

1983 உலகக்கோப்பையை ஏன் கொண்டாடுகிறோம்
1983 உலகக்கோப்பை வெற்றிக்கு முன் வெற்றிக்கு பின் என இந்திய கிரிக்கெட் வரலாற்றை பிரிக்கலாம். அதன் பின்னரே இந்தியாவில் இளைஞர்களிடையே கிரிக்கெட்டின் மீதான மோகம் அதிகரித்தது. பலரும் தங்கள் கேரியராக கிரிக்கெட்டை எடுத்தனர். பட்டிதொட்டியெங்கும் கபில்தேவ் கொண்டாடப்பட்டார். ஸ்ரீகாந்த் எனும் தமிழக வீரர் போற்றப்பட்டார்.

83 உலகக்கோப்பை மட்டுமல்ல அதன் பின் தொடர் வெற்றி
அத்துடன் நிற்காமல் தொடர் வெற்றிகளை இந்தியா குவித்தது. அடுத்து நடந்த பென்சன் & ஹெட்ஜஸ் உலக சாம்பியன் கோப்பையையும் இந்தியா வென்றது. திடர்ந்து இளம் வீரர்கள் சச்சின், கங்குலி, அசாருத்தீன், ஜவகல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே, மனோஜ் பிரபாகர் என தொடர்ந்தது இன்று உலகின் நம்பர் ஒன் டீமாகவும், உலகில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நாடாகவும் இந்தியா உள்ளது.

இதனால் தான் 83 உலகக்கோப்பை கொண்டாடப்படுகிறது
ஐபிஎல் முன்னோடியான ஐசிஎல்-ஐ கபில் தொடங்க அது பின்னர் பிசிசிஐ களத்தில் குதித்து ஐபிஎல் உருவானது. கிரிக்கெட் வியாபாரமயமானது ஆனால் மாவட்ட அளவில் உள்ள இளைஞர்கள் ஐபிஎல் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்குள், இந்திய உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றனர். இந்தக்காரணத்தினாலேயே 83 உலக்கோப்பை கொண்டாடப்படுகிறது.


Click it and Unblock the Notifications











