மலையாள சினிமா ஜெயிப்பது ஏன்.. கோலிவுட் எதை கோட்டை விடுகிறது.. விரிவான அலசல்!
சென்னை: கடந்த ஆண்டில் மட்டும் ஏராளமான மலையாள படம், தமிழ் நாட்டில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால், தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு விரல் விட்டு எண்ணிவிடக்கூடி அளவிலேயே படங்கள் ஹிட்டடித்தன அதற்கு காரணம் என்ன? மலையாள சினிமா எதை நோக்கி ஓடுகிறது.. தமிழ் சினிமா எதை கோட்டை விடுகிறது என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.
பொதுவாகவே மலையாள திரைப்படத்திற்கு தமிழ் நாட்டில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் ஒரே குற்றச்சாட்டு, தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு முக்கியத்தும் கொடுக்கிறார்கள், பிரம்மாண்டத்தை விரும்புகிறார்கள், கதையை காது கொடுத்து கேட்பதில்லை என்று அடுக்கடுக்கான புகார்களை சொல்லப்படுகிறது. இது தமிழ் சினிமாவில் மட்டுமில்லை, இந்தி, தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழி படத்திலும், கதாநாயகனுக்கும், பிரம்மாண்டத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுத்தான் வருகிறது. அப்படி எடுக்கப்பட்ட கதையிலும் வெற்றி பெற்றுள்ளனர். அதற்கு உதாரணம் சொல்லப்போனால், பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எஃப் 1 மற்றும் 2 என சொல்லிவிடலாம். இந்த படத்தில் கதையும் இருந்தது, அதே நேரம் பிரம்மாண்டமும் இருந்தது. அப்போது, கதை இருந்தால் அந்த படம் வெற்றி பெற்றுவிடும் என்றும் சொல்லிவிட முடியாது, திரைக்கதையில் கோட்டை விட்டுவிட்டாலும் படம் ஊத்திக்கொள்ளும்.
கதையை தாண்டி ஏதோ ஒன்று: அப்படி என்றால் ஒரு படத்தில் இருக்க வேண்டியது என்ன? கதையும் தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது. அது தான் எதார்த்தம். அண்மையில் "ஊடல்" என்ற மலையாளத் படத்தை பார்க்கும் வாய்ப்பு வந்தது. முன்பெல்லாம் மலையாள படம் பார்க்க வாய்ப்பு இருக்காது. ஆனால், ஓடிடி தளங்களின் வளர்ச்சியால், பலருக்கும் மலையாள படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. அப்படித்தான் நானும், 'ஊடல்' என்ற மலையாளப்படத்தை பார்த்தேன். ஒரே ஒரு வீடு... அந்த வீட்டுக்குள்ள நாலு பேரு.. இவர்களை சுற்றித்தான் கதையே நகருகிறது. பக்கவாதம் வந்து படுத்த மாமியாரை, சளிப்புடன் கவனித்துக்கொள்ளும் மருமகள். வெளியூரில் இருந்த பணத்தை மட்டுமே அனுப்பும் கணவர். இதில், கண் தெரியாத மாமனாரின் தொல்லை. என சகித்துக்கொண்டு வாழ்ந்த மருமகளுக்கு, ஒருவன் மீது காதல் வருகிறது. அதன் பின், திரைக்கதையில் சுவாரசியத்தை கூட்டி, ஒரு வீட்டுக்குள்ளேயே படத்தை முடித்துவிட்டார் இயக்குநர் இருந்தாலும், படம் ஹிட்டு படத்தில், டாப்பு டக்கரு ஹீரோவும் இல்லை, இடுப்பை வளைத்து நெளிந்து ஆட்டம் போடும் பாட்டும் இல்ல, இருந்தாலும் படம் ஹிட். அது எப்படி சாத்தியம் என்று கேட்பவர் இந்த படத்தை ஒரு முறை பாருங்கள்.

வெற்றிக்கு காரணம்: இந்த படத்தை தொடர்ந்து, பாகத் பாசிலின் மனைவி நஸ்ரியா நடித்த 'Sookshmadarshini' படம் தியேட்டரில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. அந்த படத்தில் மொத்தமே ஒரு பத்து பேர் தான் நடித்து இருப்பார்கள். ஆனால், கதை சூப்பர். தனது வீட்டுக்கு அருகில் புதிதாக குடி வரும் ஒருவன் செய்யும், தில்லாலங்கடி வேலையை கண்டுபிடித்து, அந்த குடும்பத்தை போலீசில் மாட்டிவிடுகிறாள், ஹீரோயின் நஸ்ரியா. கதை ஒரு வரியில் சொல்லிவிடக்கூடியதாக இருந்தாலும், அந்த கதையில் அடுத்தடுத்து வரும் திருப்பம் கதையை சுவாரசியமாக ஆக்கியது என்று சொல்லலாம். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலை அள்ளியது.
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஸ்டைல்: மலையாள படத்தில் மட்டும் ஒவ்வொரு படமும், ஒவ்வொரு விதமாக இருக்கும், தமிழ் படத்தில் ஒரு படம் வெற்றி பெற்ற விட்டால், அதே பேட்டனில் அடுத்தடுத்து பல படங்கள் வரும். அந்த ஸ்டைல் மலையாள சினிமாவில் இல்லைவே இல்ல. ஒவ்வொரு படமும், ஒவ்வொரு ஸ்கிரின் பிளேவும் வித்தியாசமானதாக இருக்கும். அதற்கு உதாரணமாக Ponman படத்தை சொல்லாம். ஜெய் பீம் ஹீரோயின் லிஜோமோல் ஜோஸ் நடித்த Ponman என்கிற மலையாள படத்தை பார்க்கும் போது, என்ன எதார்த்தம், இப்படி எல்லாம் கூடவா யோசிக்க முடியுமா.. என்று தான் சொல்லத் தோன்றும். கதையில் ஏழை குடும்பத்தில் பிறந்த லிஜோமோல் ஜோஸ் முதிர் கன்னியா இருக்கிறார். அவளுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படும் அவளின் அம்மா, தனது வசதிக்கு மீறி ஒரு வரனைப்பார்த்து சம்மந்தம் பேசி முடிக்கிறார்கள்.

எதார்த்த கதை: ஆனால், அவர்கள் கேட்ட நகை இல்லாததால், அந்த நேரத்தில் மொய் பணத்தை கணக்கு போட்டு, திருமணத்திற்கு முன்பே நகை வாங்கி கொடுக்கும் ப்ரோக்கர் ஒருவர் வந்து நகை வாங்கி கொடுக்கிறார். திருமணமும் நடந்து முடிந்துவிடுகிறது. ஆனால், யாரும் திருமணத்திற்கு வராததால், எதிர்பார்த்த மொய் பணம் வரவில்லை. கடைசியில் ப்ரோக்கர் நகையை கேட்க, ஹீரோயினோ நைட்டோ நைட்டா, கணவர் வீட்டுக்கு சென்றுவிடுகிறார். கடைசியில் ப்ரோக்கருக்கு நகை வந்ததா... இல்லையா... என்பதை இயக்குநர் அழகாக சொல்லி இருக்கிறார். பொதுவா கடன் வாங்கி திருமணத்தை நடத்திவிட்டு, பின் மொய் பணத்தை வைத்து கடனை அடைப்பார்கள் என்பதை பலர் கேள்வி பட்டு இருப்பார்கள். அது வழக்கமாக நடக்கக்கூடியது தான். ஆனால், நகை வாங்கி கொடுத்துவிட்டு, மொய் பணத்தில் இருந்து எடுத்துக்கொள்வது புதுசாக இருந்தது. இது கேரளாவில் நடக்கும் விஷயமாககூட இருக்கலாம்... அன்றாடம் வாழ்க்கையில் நடக்கும் இயல்பான விஷயத்தை அப்படியே படமாக அந்த படத்தில் காட்டப்பட்டதுதான் அந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்று சொல்லலாம்.
அடுத்ததாக மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு படத்தை கொண்டாடி மகிழ்ந்தார். பிரேமலு படத்தை கூட காதலுக்கான படம் இளசுகளை கொண்டாடி படம் என்று ஒதுக்கிவிட்டாலும். மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை அப்படி ஒதுக்கிவிட முடியாது. அந்த படம் மலையாளத்தில் இருந்தே போதே, தமிழ் ஆடியன்ஸ் தியேட்டரில் கொண்டாடினார்கள். அதன் பின்பு தான் அந்த படமே தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இப்படி பல திரைப்படத்தை சொல்லிக்கொண்டே போகலாம். இதுபோன்ற எதார்த்தமான கதை அம்சம் கொண்ட படம் மலையாளத்தில் அதிகமாக வருகிறது.அதை, மக்களும் கொண்டாடுகிறார்கள்.
இதுதான் காரணமா: ஆனால், தமிழில் இதுபோன்ற படங்கள் அத்திபூத்த போலத்தான் வருகிறது. அப்படியே வந்தாலும், அந்த படம் தமிழக மக்கள் மத்தியில் எடுபடாமல் போய்விடுகின்றனர். அதற்கு உதாரணம் சசிக்குமார் நடித்த அயோத்தி, விமல் நடித்த 'போகும் இடம் வெகு தூரமில்லை', 'தலைக்கூத்தல்' போன்ற படங்கள் வெளிவருகின்றன. ஆனால், அவை மக்கள் மத்தியில் எடுபடாமல் போவதால், இதுபோன்ற படங்களின் வருகை குறைத்து விடுகிறது. இப்படி எதார்த்தத்தை சொன்ன படம் தான் வாழை, பெரிய இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய படம் என்பதால், அந்த படத்திற்கு ப்ரோமோஷன் செய்யப்பட்டதால், படம் வெற்றி பெற்றது என்பது தான் உண்மை. வளராத இளம் இயக்குநர்களிடம் ஏராளமான எதார்த்த கதைகள் கொட்டி கிடக்கின்றன. ஆனால், அதை தோண்டி எடுக்கத்தான் ஆள் இல்லை.... என் பார்வையில் தமிழ் சினிமா கோட்டை விட்டது. இதைத்தான்.


Click it and Unblock the Notifications











